பினாங்கின் கடைசி இந்திய பாரம்பரிய கிராமத்திற்கு ஆபத்து!

மே 7, 2011
பினாங்கு மாநில ’யுனெஸ்கோ’ பாரம்பரிய நிலத்தில் அமைந்துள்ள செயிண்ட் பிரான்சிஸ் சேவியர் தமிழ் கிருத்துவ பாரம்பரிய கிராமத்தின் தலையெழுத்து தற்போது கேள்விக்குறியாக உள்ளது. 150 ஆண்டுகளாக இரண்டு தலைமுறையாக வாழ்ந்துவரும் இந்திய மக்களை தற்போது கத்தோலிக்க பிசோப்பாக இருப்பவர் அங்கிருந்து வெளியேற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் தமிழ் கிருத்துவர்களின் நலனுக்காக வழங்கப்பட்ட இந்நிலம் அருகிலுள்ள சிட்டிடெல் தங்கும்விடுதி உரிமையாளருக்கு விற்கப்படப்போவதாகவும், இவ்வாண்டு இறுதிக்குள் அங்கு வசிக்கும் மக்கள் தத்தம் வீடுகளை காலி செய்ய வேண்டும் எனவும் கோரி நீதிமன்றத்தில் தேவாலய நிர்வாகம் வழக்கு பதிவும் செய்திருக்கிறது. ஜோர்ச்டவுன் நகர மையத்தில் உள்ள பினாங்கு சாலையில் அமைந்துள்ள அவ்வழகிய குக்கிராமமானது பினாங்குத் தீவின் கடைசி இந்திய பாரம்பரிய கிராமம் என அறியப்படுகிறது. இக்கிராமத்திற்கும் புவா பாலா கிராமத்திற்கு ஏற்பட்ட முடிவுதானா? வாருங்கள் அங்குள்ள மக்களையே நாம் கேட்போம்..

போராட்டம் தொடரும்…


நீதி கேட்கும் முன்னாள் நிக்கோ தொழிற்சாலை ஊழியர்கள்!

பெப்ரவரி 9, 2010
பாகம் 1


புவா பாலா கிராம வழக்கு – நீதிமன்றத்திலிருந்து நேரடியாக..

ஆகஸ்ட் 21, 2009

பà¯�வா பாலா நà¯�திமனà¯�றதà¯�திலà¯�…


புவா பாலாவில் மனிதச் சங்கிலி!

ஆகஸ்ட் 14, 2009
இன்று வருவானோ, நாளை வருவானோ என்று அனுதினமும் மன உளைச்சலுடன் வாழ்க்கையைக் ஓட்டிக் கொண்டிருக்கும் புவா பாலா கிராம மக்களுக்கு நேற்றுமொரு பலப்பரிட்சை ஏற்பட்டது. புலி வருது, புலி வருது என்கிற கதையாக அக்கிராம மக்களை அனுதினமும் மிரட்டிக் கொண்டிருந்த நுஸ்மெட்ரோ நில மேம்பாட்டாளர்கள், நேற்று காலை 7 மணியளவில் புல்டோசர்களுடன் கிராமத்தினுள் நுழைய, மக்களனைவரும் கொதித்தெழுந்துவிட்டனர். இச்செய்தி காட்டுத் தீப்போல் பரவ, சற்று நேரத்திற்கெல்லாம் பொதுமக்கள் ஒன்றுதிரளத் தொடங்கிவிட்டனர்.

புல்டோசர்களை உள்ளே நுழைய விடாமல் கிராம மக்கள் மனித சங்கிலி அமைத்து நில மேம்பாட்டாளர்களை தடுத்து நிறுத்தினர்.

ஆண்கள் வேளைக்குச் செல்லவில்லை! குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல இயலவில்லை! வீட்டில் உலை கொதிக்கவில்லை. காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மக்களுக்கெதிராக நடைப்பெற்ற போராட்டத்தில் நில மேம்பாட்டாளர்கள் பின் வாங்கினார். ஆனால், இரவு நேரங்களில் அங்குள்ள கிராம மக்கள் நிம்மதியான உறக்கத்தினைக் காண இயலவில்லை. கனவுகளிலும் புல்டோசர்களின் சத்தம்!

இன்னும் எத்தனை முறை இம்மக்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வேடிக்கை பார்க்கப்போகிறார்களோ??

போராட்டம் தொடரும்…


புவா பாலா நிலமோசடி – சில கேள்விகள்

ஆகஸ்ட் 9, 2009

மாநில முதல்வர் லிம் குவான் எங் அவர்களே,
எங்கள் கேள்விகளுக்குப் பதில் கூறுங்கள்.

பினாங்கு மாநில அதிகாரிகள் கூட்டுறவுக் கழகத்திற்கு உங்கள் அரசு செய்த எங்கள் கிராம நில விற்பனை.

தேர்தல் தேதி : 8 மார்ச் 2008

கிராம செயற்குழு உங்களைச் சந்தித்த தேதி : 13 மார்ச் 2008
இந்தத் தேதியில் இன்னும் நில விற்பனை பூர்த்தி அடையாமல் இருந்தால், இந்த நில விற்பனையைத் தடுத்து நிறுத்துவதாக கிரமச் செயற்குழுவிடம் உறுதிக் கூறியுள்ளீர்கள்.

கேள்வி 1

ஏன் 14 மார்ச் 2008-ல், உங்கள் அரசாங்கம் ரி.ம 3.2 மில்லியனை அந்த கூட்டுறவுக் கழகத்திடமிருந்து பெற்றுக் கொண்டது?

கேள்வி 2

ஏன் 27 மார்ச் 2008-ல், உங்கள் அரசு அந்த கூட்டுறவின் பெயரில் புவா பாலா கிராம நிலத்தை பதிவு செய்தது?

கேள்வி 3

ஏன் 14 ஏப்ரல் 2008-ல், நுஸ்மெட்ரோ வென்சர்ஸ் எனும் மேம்பாட்டாளர் இந்த நிலத்தை கேவியட் செய்துக் கொள்ள உங்கள அரசு உடந்தையாக இருந்தது?

தேசிய நிலச் சட்டப்பிரிவு 320

உங்கள அரசு, புவா பாலா கிராம நில பரிவர்த்தனையில் தில்லுமுல்லுகள் நடந்திருப்பதாக ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் செய்துள்ளது. கிராம நிர்வாகத்தினரும் இந்தப் புகாரை இரண்டு முறை செய்துள்ளனர்.

கேள்வி 4

உங்கள் அரசு புவா பாலா நில விற்பனையில் நிறைய தவறுகளைக் கண்டுபிடித்துள்ளதாகப் புகார் செய்துள்ளது. அப்படியானால் ஏன் இந்த நிலப் பரிவர்த்தனையை முழுமைப் படுத்தி, நிலத்தை விற்று முடித்தீர்கள்?

தேசிய நிலச் சட்டப்பிரிவு 320-ன் படி, ஒரு நிலப் பரிவர்த்தனையில் தில்லுமுல்லு (FRAUD) கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நிலப் பட்டா மூலம் செய்யப்பட்ட நில உரிமை மாற்றம் தடுத்து நிறுத்த முடியும்.

கேள்வி 5

ஏன் உங்கள் அரசு, ஊழல் தடுப்பு ஆணையம், (MACC), தன் விசாரணையை முடிக்கும் வரை காத்திருக்கக் கூடாது? MACC பின்னர் தில்லு முல்லு நடந்திருப்பதை உறுதிப்படுத்தினால், நீங்கள் அந்த கூட்டுறவுக்குக் கொடுத்த நிலத்தை மீட்டுக் கொள்ள வேண்டி வரும். இது கிராம மக்களுக்கு நன்மையாக முடியும். பின்னர் உங்கள் அரசு தலைவர்களான இராமசாமி, கர்பால் சிங், மற்றும் சனீசுவர நேதாஜி இராயர் ஆகியோர் கொடுத்த வாக்கிற்கிணங்க, இக்கிராமத்தை இந்திய பாரம்பரிய கிராமமாக அறிவிக்கலாம். ஏன், MACC விசாரணை முடிவிற்குக் காத்திருக்கக் கூடாது?

நிலப் பட்டாவில் கட்டுப்பாடுகள்

கேள்வி 6

நிலப்பட்டாவில் சில கட்டுப்பாடு சரத்துகள் இருப்பதை நீங்கள் அறிவீர்களா?
இந்த நிலம் எந்த வியாபார நோக்கத்திற்கும் பயன்படுத்த முடியாது. அந்தக் கோப்பராசி எந்த தரப்பினரோடும் கூட்டு முயற்சியில் ( JOINT VENTURE ) நிலத்தை மேம்படுத்த அனுமதியில்லை.

கேள்வி 7

உங்கள் அரசு எப்படி தொடர்ந்து இதுபோன்ற சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளை அனுமதித்து வருகின்றது?

கேள்வி 8

உங்களுக்குப் பின் வரும் நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு தெரியுமா?

“கோ ஹீ சிங் Vs வில் ராஜா மற்றும் அனூர், உயர் நீதிமன்ற நீதிபதி சங்கர் மகாதேவ் (1993) வழங்கிய தீர்ப்பு”

மேற்கண்ட கட்டுப்பாடுகள் உள்ள நிலத்தை எவரும் கேவியட் செய்து கொள்ள முடியாது என நீதிமன்ற தீர்ப்பு உள்ளது.

கேள்வி 9

உங்கள் அரசாங்கம் எப்படி இந்த சட்டத்திற்குப் புறம்பான நில கேவிட்டை அனுமதித்தது? நுஸ்மெட்ரோ வென்சர்ஸ் இந்த புவா பாலா நில விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளது, சட்டத்திற்குப் புறம்பானது என்பதை தாங்கள் அறியவில்லையா?

கேள்வி 10

இன்று வரை, அந்த நிலப்பட்டாவில் உள்ள கட்டுப்பாடுகள் நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்படவில்லை என்பதை தாங்கள் அறிவீர்களா?

சிறி டெலிமா சட்டமன்ற உறுப்பினர் நேதாஜி இராயர் 3-8-2009 தேதியன்று, நீதிமன்றத்தில் தேசிய நிலச் சட்டம் பிரிவு 116(1)(d)-யைப் பயன்படுத்த விண்ணப்பம் செய்தாராம். அந்தச் சட்டப்பிரிவின்படி அரசு அனுமதியில்லாமல், மேம்பாட்டாளர் கிராமத்தை வந்து உடைத்து நொறுக்க முடியாது. இராயர் செய்த விண்ணப்பம் என்ன ஆனது? ஏன் லிம் அவர்களே நீங்கள் இந்த சட்டப்பிரிவைப் பற்றி அறவே பேச மாட்டேன் என்கிறீர்கள்?

கேள்வி 11

ஒருவர் தமக்கென்று, தம் சட்ட ஆலோசனைக்கு ஒரு வழக்கறிஞரை அமர்த்திக் கொள்வது பழக்கம்தானே?

நீங்கள் கிராம மக்களை ஒரு வழக்கறிஞர் பிரதிநிதித்து உங்களை சந்திப்பதை கடைசிவரை மறுத்து வந்துள்ளீர்கள்.

இது சரியா?

ஆ. திருவேங்கடம்
புவா பாலா கிராம மக்களுக்காக ..

தயவு செய்து இதனை நகலெடுத்து தெரிந்தவர்களிடம் கொடுத்து படிக்கச் சொல்லவும்.


புவா பாலா வெள்ளிக்கிழமை உடைக்கப்படுமாம்!

ஆகஸ்ட் 4, 2009

சற்று முன்பு பினாங்கு மாநில அரசுடனான புவா பாலா மக்களின் சந்திப்புக் கூட்டத்தில், லிம் குவான் எங் மீண்டும் அரைத்த மாவையே அரைத்திருக்கிறார்.

சந்திப்புக் கூட்டத்தில் கிராம மக்களிடம் அவர் கூறியதாவது ;

புவா பாலா கிராமத்தில் 1200 சதுர அடியில் இரண்டு மாடி வீடு. மேல் மாடி 600 சதுர அடி, கீழ் மாடி 600 சதுர அடி. வீட்டிற்கு வெளியில் கூடுதல் 200 சதுர அடி நிலம்.
அதாவது 6.5 ஏக்கர் புவா பாலா கிராம நிலத்தில் 0.7 ஏக்கர் நிலம் 24 குடும்பங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இவ்வீடுகளைக் கட்டி முடிக்கும்வரையில் அக்கிராம மக்கள் தங்குவதற்கு தற்காலிக இடமோ, அல்லது வாடகைப் பணமோ ஏதும் கொடுக்கப்படாது. ஒரே வீட்டில் வசிக்கும் கூட்டுக் குடும்பங்களுக்கு வீடோ அல்லது பணமோ கொடுக்கப்படாது.

நுஸ்மெட்ரோ அளிக்கும் இம்முடிவை மக்கள் ஏற்றுக் கொண்டாக வேண்டும், இல்லையெனில் நுஸ்மெட்ரோ வருகின்ற வெள்ளிக்கிழமை கிராமத்தை தரைமட்டமாக்கிவிட்டுச் சென்றுவிடுவார்கள் என லிம் குவான் எங் கிராம மக்களை வற்புறுத்தியிருக்கிறார். இதற்கிடையில் கூட்டரசு நீதிமன்றத்தில் இந்நில விவகாரம் குறித்து புவா பாலா வழக்கறிஞர் திரு.டர்சான் சிங் வழக்கு ஒன்றினை பதிவு செய்துள்ளார். அவ்வழக்கு எதிர்வரும் 18-ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் செவிமடுக்கப்படும். எனவே, கிராமத்து வீடுகளை நில மேம்பாட்டாளர்கள் உடைக்கக்கூடாது என்பது சட்டம். காரணம், இவையனைத்தும் ஆதாரங்கள் என்கிற அடிப்படையில் ஒரு செங்கல்லைக் கூட அசைக்கக்கூடாது. அப்படி அசைத்தால் அது நீதிமன்றத்தை அவமதிக்கும் ஒரு செயலாகக் கருதப்படும். நுஸ்மெட்ரோ வருகின்ற வெள்ளிக்கிழமை வீடுகளைத் தரைமட்டமாக்கப்போவதாகக் கூறியுள்ளார்கள்.

இதனைச் சொல்லியே மக்களை பயமுறுத்தி, கொடுக்கும் ரொட்டித் துண்டுகளை வாங்கிக் கொண்டுச் செல்லுங்கள் என்கிறது பினாங்கு மாநில அரசு.

அவர்கள் பரிந்துரைக்கும் திட்டத்திற்குச் சம்மதம் தெரிவிப்பவர்கள் ஒப்பந்தக் கடிதத்தில் கையெழுத்திடுமாறு லிம் குவான் எங் மக்களை கேட்டுக் கொண்டார். ஆனால், மக்கள் தங்களுடைய முடிவை ஏதும் கூறாமல் வந்துவிட்டனர். இச்சந்திப்புக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு கிராம மக்களின் வழக்கறிஞருக்கு வழக்கம்போல் அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு கொலைக் குற்றவாளிக்குக் கூட தன்னை பாதுகாத்துக் கொள்ளவும், தமக்கென்று ஒரு வழக்கறிஞரை நியமித்துக் கொள்ளும் உரிமையை சட்டம் நமக்கு வழங்குகிறது. ஆனால், 200 ஆண்டுகாலமாக இந்நிலத்தில் வாழ்ந்துவரும் இந்த மக்களுக்கு ஒரு வழக்கறிஞரை தங்களுடைய பிரதிநிதியாக வைத்துக் கொள்ளக்கூட அனுமதியளிக்கப்படவில்லை! இவர்கள் செய்த குற்றம் என்ன? 200 ஆண்டுகாலமாய் தன்னுடைய சொந்த உழைப்பைக் கொட்டி இந்நிலத்தில் வாழ்ந்தது குற்றமா?

அம்னோ அரசாங்கம்தான் நம்மை ஏமாற்றிவிட்டது, மக்கள் கூட்டணியாவது எங்களைக் காப்பாற்றும் என நம்பியிருந்த இந்த அப்பாவி மக்களை அரசியல் இலாபத்திற்காக பகடைக் காய்களாகப் பலரும் பயன்படுத்திவிட்டனர்.

இம்மலேசிய திருநாட்டில், அதிகாரத்துவமும் முதலாளித்துவமும் எப்படியெல்லாம் ஏழை மக்களை நசுக்கிப் பிழிகிறது என்பதனைக் கண்கூடாகவே பார்த்து வருகிறோம். அதற்கு ஒரு நல்ல படிப்பினையான உதாரணம் கம்போங் புவா பாலா!

இன்னும் 48 மணி நேரங்களே எஞ்சியுள்ளன. நாம் என்ன செய்யப் போகிறோம்? வரலாற்றைப் புரட்டிப் போட வேண்டுமா? மாற்றைத்தை விரும்பினால் மட்டும் போதாது, அம்மாற்றத்தை நாம்தான் ஏற்படுத்த வேண்டும்! இந்நாட்டில் தமிழனுக்கென்று 200 ஆண்டுகால தொன்மையான கிராமம் காப்பாற்றப்பட வேண்டும் என நினைக்கிறீர்களா? உங்கள் வருகையை எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று நிச்சயப்படுத்துங்கள்! இன்று 1000 பேர் திரண்டதைக் கண்டு அஞ்சியவர்கள் வெள்ளிக்கிழமையன்று திரளும் மக்கள் வெள்ளத்தைக் கண்டு தங்களுடைய முடிவையே மாற்றிக் கொள்ள வேண்டும்!

உடனடியாக லிம் குவான் எங்கை தேசிய நில சட்டவிதி பிரிவு 76- (National Land Code Section 76) பயன்படுத்தி புவா பாலா நிலத்தை கையகப்படுத்தி கிராம மக்களிடமே ஒப்படைக்குமாறு நெருக்குதல் கொடுங்கள். நாட்டில் பல இயக்கங்கள், சங்கங்கள் இருக்கின்றன. அனைத்து இயக்கங்களும் அவர்களுக்கே உரித்த பாணியில் நூதன போராட்டத்தை முன்னின்று மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

போராட்டம் தொடரும்


புவா பாலா நிலமோசடி அம்பலம்! ஆதாரங்கள் சிக்கின!

ஜூலை 31, 2009
இன்று மதியம் மூன்று மணியளவில் இண்ட்ராஃப், ஜெரிட், சுவாராம் போன்ற மனித உரிமை இயக்கங்களோடு இணைந்து புவா பாலா கிராம மக்கள், பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங்கை சந்தித்து மனு ஒன்றினைச் சமர்ப்பிக்க சென்றனர். கோப்பராசியிடமிருந்து புவா பாலா நிலத்தை விற்கவோ, வாடகைக்கு விடவோ, அல்லது வணிக நோக்கத்திற்காகப் பயன்படுத்தவோ முடியாது எனவும் அப்படி மேற்கூறியவற்றில் ஏதேனும் ஒரு நோக்கத்திற்காக அந்நிலம் பயன்படுத்தப்படுமெனின், அது மாநில அரசாங்கத்தின் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. (இணைக்கப்பட்டுள்ள படங்களைக் காண்க)

கூட்டுறவு கழகத்திற்கும் நுஸ்மெட்ரோ வெஞ்சூர்சுக்கும் இடையிலேயான இவ்வொப்பந்தக் கடிதமானது 27-03-2008 எனும் திகதியில் கையெழுத்திடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அதாவது விற்க, வாடகைக்கு விட, வணிக நோக்கத்திற்குப் பயன்படுத்தக்கூடாத இந்நிலத்தை விற்க அனுமதியளித்தவர்கள் பக்காதான் மாநில அரசுதான் என்பது ஊர்சிதப்படுகிறது. எனவே, மாநில அரசு நுஸ்மெட்ரோ வென்சூர்சுக்கு சல்லி காசு கொடுக்க வேண்டிய அவசியமில்லை என வாதம் எழுந்துள்ளது. கூட்டுறவு கழகத்திடமிருந்து 3.2 மில்லியன் செலவில் புவா பாலா நிலத்தை மாநில அரசு கையகப்படுத்தலாம்.

இதனை லிம் குவான் எங்கிற்கு நினைவூட்டி உரிய நடவடிக்கை எடுக்க கோரும் முயற்சியாக இன்று புவா பாலா கிராம மக்கள் முதல்வரிடம் மனுவைச் சமர்ப்பிக்கச் சென்றனர். அம்மனுவை முதல்வரின் செயலாளர் பெற்றுக் கொண்டுள்ளார்.

லிம் குவான் எங்கிற்கு கொடுக்கப்பட்ட மனு

கூட்டுறவு கழகத்திடமிருந்து நுஸ்மெட்ரோவிற்கு விற்கப்பட்ட விவரம்

பகுதி 1
பகுதி 2

போராட்டம் தொடரும்…


புவா பாலா முருகன் யுனேசுகோவிற்குப் பயணம்!

ஜூலை 28, 2009

புவா பாலா கிராமத்தில் மாடுகள் வளர்த்து வரும் கே.முருகன்(வயது 46) என்பவர் நேற்று (திங்கட்கிழமை) மாலை (பிரிட்டன் நேரப்படி) லண்டன் மாநகரைச் சென்றடைந்தார். அங்கு அவரைச் சந்தித்து வரவேற்ற இண்ட்ராஃப் தலைவர் திரு.வேதமூர்த்தி புவா பாலா கிராம விவகாரத்தை பாரிசு மாநகரில் அமைந்துள்ள யுனேசுகோவின் உலக பாரம்பரிய தலைமையகத்தின் பார்வைக்கு கொண்டுவர திட்டமிட்டிருக்கிறார். பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் உதவியோடு பாரிசு நகரில் யுனேசுகோ அதிகாரிகளுடன் சந்திப்பு கூட்டம் நடத்த திரு.வேதமூர்த்தி ஏற்பாடு செய்திருக்கிறார்.

நாளை அவ்விருவரும் பாரிசு நகருக்கு பயணமாகின்றனர்.

இத்தகு நடவடிக்கையின்வழி அனைத்துலக ரீதியில் சம்பந்தப்பட்டவர்களின் மீது குறிப்பாக பினாங்கு மாநில முதல்வரிடம் புவா பாலா கிராமத்தை பாரம்பரிய கிராமமாக அறிவிக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்கக்கோரி நெருக்குதல் அளிக்கலாம்.

முருகனின் இம்முயற்சி அனைத்துலக பார்வையை 6.5 ஏக்கர் புவா பால நிலத்தின் மீது விழ வைப்பதோடு, யுனேசுகோவின் நெருக்குதல்களின்வழி புவா பாலா கிராமத்தை காப்பாற்றி, அதனை தமிழர் பாரம்பரிய கிராமமாக நிலைப்பெறச் செய்ய முடியும் எனும் நம்பிக்கை துளிர்விட்டுள்ளது.

இதற்கிடையில், பினாங்கு மாநில அரசு நுஸ்மெட்ரோ வெஞ்சூர்சின் மேம்பாட்டு திட்டத்தை ரத்து செய்திருப்பினும் கூட்டரசு நீதிமன்றத்தின் ஆணையின்கீழ் புவா பாலா நிலத்தை இடித்துத் தள்ளுவதற்கு அந்நில மேம்பாட்டாளர்களுக்கு இன்னும் அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விடயத்தில், மேலும் சில ஐயப்பாடுகள் எழுந்துள்ளன.

கிராம மக்களின் வீடுகளை உடைத்துவிட்டு, பிறகு பேரம் பேசினால் மக்கள் அடிபணிந்துபோகக் கூடும், நட்ட ஈடை வாங்கிக் கொண்டு நிலத்தை விட்டுக் கொடுக்கக்கூடும் என்பது மேம்பாட்டாளர்களின் திட்டங்களில் ஒன்றாக இருக்கக் கூடும் என ஐயுறப்படுகிறது.

கிராம நிலத்தில் சிறுபகுதியை மட்டும் பாரம்பரிய நிலமாக ஒதுக்கீடு செய்து, பெறும்பகுதி நிலத்தில் நுஸ்மெட்ரோவின் ஆடம்பர அடுக்குமாடி திட்டத்தை செயல்படுத்த பினாங்கு மாநில அரசு நில மேம்பாட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இரு தரப்பினருக்கும் வெற்றியளிக்கும் தீர்வாக பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் இதனை வழிமொழிந்தாலும், பாரம்பரிய நிலம் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்!

முறையே செயல்படுத்துவன வேண்டியவற்றை காலந்தாழ்த்தி செயலாற்றிவரும் பினாங்கு மாநில அரசின் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன?

பொறுத்திருந்து பார்ப்போம்

போராட்டம் தொடரும்


புவா பாலா மக்களுக்கு கையெழுத்திடப்படாத கடிதம்..

ஜூலை 15, 2009
கையெழுத்திடப்படாத கடிதம்

நேற்று புவா பாலா கிராமத்திலுள்ள 23 வீடுகளுக்கு கையெழுத்திடப்படாத இக்கடிதம் சென்றடைந்துள்ளது. பினாங்கு முதலமைச்சர் புவா பாலா கிராம மக்களோடு மனந்திறந்து பேசவிருக்கிறாராம். நாளை காலை 10 மணியளவில் இச்சந்திப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கின்றனர். வழக்கம்போல் சட்ட வல்லுநர்களை கிராம மக்கள் தங்கள் பிரதிநிதியாக உடன் அழைத்து வரக்கூடாது என்று கட்டளையிட்டிருக்கின்றனர். இதிலிருந்து, ஒரு விடயம் நன்கு புலப்படுகிறது. லிம் குவான் எங் அந்நிலத்தை மக்களுக்கு கொடுப்பதைவிட நில மேம்பாட்டாளர்களுக்கு கொடுப்பதையே விரும்புகிறார். அதனால்தான், சட்ட அறிவு இல்லாத பாமர மக்களின் மனங்களை ஏதாவது சொல்லி குழப்பி அரசு வழங்கும் நட்ட ஈடை வாங்கிக் கொண்டு அனைவரின் வாயையும் மூட வேண்டும் என்பது அவர்களின் திட்டம். பிறகு, நாளிதழ்களிலும் தொலைக்காட்சி செய்திகளிலும்நாங்கள் புவா பாலா மக்களுடன் ஒரு சுமூகத் தீர்வு கண்டுள்ளோம், இது மக்களுக்கு கிடைத்த வெற்றி!” என்று தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள்.

பாரிசானாகட்டும் பக்காதானாகட்டும் இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகள்தாம் என்பதற்கு இச்சம்பவங்கள் ஒரு சிறு உதாரணம்.


நிலம் மக்களுக்கே சொந்தம்! – உதயகுமார்

ஜூலை 14, 2009
பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4

போராட்டம் தொடரும்


Follow

Get every new post delivered to your Inbox.