மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகள் கட்சியைவிட்டு விலகலாமா?

காலங்காலமாக இந்நாட்டு இந்தியர்களிடையே நிலவிவரும் அதிருப்தியானது, அவ்வப்போது சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப பலவிதமான முறைகளில் பிரதிபலிக்கத்தான் செய்கின்றது. அந்த தொடர் பட்டியலில் தற்போது இணைந்திருப்பது, மக்கள் கூட்டணியிலிருந்து விலகப்போவதாய் அறிக்கை வெளியிட்டுவரும் ஒரு பிரதிநிதியின் தன்னிலை விளக்கம்தான். இவ்விடயம் தொடர்பாக நான் கூறவரும் கருத்துகளில், சம்பந்தப்பட்டவர்களின்பாலும் அவர்கள் கொண்டுள்ள முடிவுகளில்பாலும், குற்றத்தைக் கண்டுபிடிப்பது என் நோக்கமல்ல. ஆனால், உண்மை நிலவரம் குறித்த வித்தியாசமான ஒரு புரிதலும், இவ்விடயம் குறித்து புதிய அணுகுமுறையில் தீர்வு காண்பதும் மிக முக்கியம் என நான் கருதுகிறேன். இந்த பிரச்சனையை விவேகத்தன்மையோடு அணுகுவதன்வழி தேவையற்ற கருத்து முரண்பாடுகள் எழுவதையும், அது பூதாகரமாக்கப்படுவதையும் தவிர்க்க இயலும்.

தற்சமயம் சூடுபிடித்து வரும் இந்த அதிருப்திகரமான சூழ்நிலைக்கும் ஒட்டு மொத்த மலேசிய இந்தியர்களின் பெருகிவரும் எதிர்பார்ப்புகளுக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது. மலேசிய இந்தியர்களுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள 18 அம்ச கோரிக்கைகளில் மலேசிய இந்தியர்களின் எதிர்ப்பார்ப்புகளை திரு.உதயகுமார் தெள்ளத் தெளிவாகவும் அரசு எந்திரங்களுக்கு உறைக்கும்படியாகவும் வெளிப்படுத்தியுள்ளார். இண்ட்ராஃபின் நவம்பர் 25 பேரணி நிகழ்விற்குப் பின் ஏற்பட்டுவரும் பலவகையான மாற்றங்களின்வழி, மாற்றத்தை கொண்டுவரும் பொறுப்பு வகித்துவரும் தரப்பினர்களால் அதிகம் அறியப்படாத சிறுபான்மையினரான மலேசிய இந்தியர்களின் எதிர்ப்பார்ப்புகள் 18 அம்ச கோரிக்கைகளின்வழி பலரின் பார்வைகளை ஈர்க்கும்படிச் செய்தது. ஆனால் இவர்கள் இவ்விடயங்களை அணுகும் முறையானது பழைய திராட்சை மதுவை புதிய புட்டியில் ஊற்றிவைப்பதற்கு சமமானதாகும்.

18 அம்ச கோரிக்கைகளானது குறிப்பாக சிறுபான்மை மலேசிய இந்திய சமூகத்தை பின்னடைவிற்கு இட்டுச் செல்லும் முக்கிய காரண காரணியங்களை ஆழமாக படம் பிடித்து காட்டியுள்ளது. அதேவேளை இக்கோரிக்கைகளானது, நம் நாட்டின் நிர்வாகமானது புதிய பரிணாமத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியத்தை அவை வலியுறுத்துகின்றன. இத்தனைக்கும் நம்மிடம் மிஞ்சியுள்ள கேள்வி ஒன்றே ஒன்றுதான். அரசு நிர்வாக முறையில் நாம் எதிர்ப்பார்க்கின்ற மாற்றங்கள் நிகழுமா?

நம்மிடையே நிலவிவரும் அதிருப்திகளுக்கு இக்கேள்விதான் அடிப்படைக் காரணம்! இதனைப் பின்புலமாகக் கொண்டே ஒவ்வொரு பிரச்சனையையும் குறித்த நம்முடைய புரிதலும் அணுகுமுறையும் இருக்க வேண்டும். நம் நாட்டின் சில அடிப்படை அரசு நிர்வாகக் கொள்கைகளில் மாற்றம் எற்படவேண்டிய அவசியத்தை நாம் உணர்ந்தாக வேண்டும். இந்த புரிதல் நம்மிடையே இல்லையேல், நிலவும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தற்காலிக தீர்வுகளை மட்டுமே சிந்தித்து, முடிவெடுத்து அதனை நடைமுறைப்படுத்துவதில் முனைப்பு இருந்துவருமே ஒழிய நிரந்தர தீர்வுக்கு அவை நம்மை என்றும் இட்டுச் செல்லப் போவதில்லை! ஏற்றத்தாழ்வுகள் மிக்க அரசுக் கொள்கைகளில் சம உரிமையைத் தேடுவதற்கு இது ஒப்பாகும்.

இந்நாட்டின் தலையாய சட்டமானதும், மனித உரிமைகளுக்கும், சம உரிமைகளுக்கும் அறக்காவலனாக விளங்கிவருவதுமான மலேசிய அரசியலமைப்புச் சட்டமானது தொடர்ச்சியாக பங்கப்படுத்தப்பட்டு வருவதை எதிர்த்து முன்வைக்கப்பட்டவைதான் இண்ட்ராஃபின் 18 அம்சக் கோரிக்கைகள்! தொடர்ச்சியாக ஒடுக்குமுறைகள் கையாளப்பட்டு வருவதாலும், நாட்டின் வளப்பத்தை மக்களிடையே சரிசமமாகப் பங்கீடு செய்வதில் பாராபட்சம் காட்டப்பட்டு வருவதாலும், அரசியல் சாசனத்தின்மீது மக்களிடையே நம்பிக்கை அற்றுப்போனது மட்டுமல்லாது, மலேசியா ஒரு பல்லின மக்கள் கலவைக் கொண்ட, பல சமய நம்பிக்கைகள் புழங்கிவரும் நாடு எனும் கூற்று மறக்கடிக்கப்பட்டு வருகின்றன.

நீங்கள் அக்கறையுள்ளவராக இருந்தால், இண்ட்ராஃபின் 18 அம்சக் கோரிக்கைகளை ஒருமுறை தேடிப்பிடித்து படித்துப் பாருங்கள். இக்கோரிக்கைகளானது மலேசிய இந்தியர்களின் அடிப்படை உரிமைப் பிரச்சனைகளைக் கோடிட்டு காட்டியிருந்தாலும், ஒரு நாட்டிற்கு அடிப்படைத் தேவைகளை ஆய்வு கண்ணோட்டத்தில் முழுமையான வடிவில் படம்பிடித்துக் காட்டியுள்ளதை நீங்கள் உணர்வீர்கள். தேசிய கொள்கைகளில் மாற்றம் ஏற்படவேண்டும் என்பதே 18 அம்சக் கோரிக்கைகளின் முக்கிய நோக்கமாகும்! தேசிய கொள்கைகளில் நாம் புதிய அணுகுமுறைகள் கண்டால்தான் நாட்டு மக்களின் நலன்களை பேணுவதிலும், மக்களின் ஒட்டுமொத்த திறன்களை நாட்டு வளப்பத்திற்காகவும் எதிர்கால முன்னேற்றத்திற்காகவும் முறையாகப் பயன்படுத்துவதில் வெற்றிகாண இயலும். நடைமுறை தேசியக் கொள்கைகள் இவைகளை வலியுறுத்தவில்லை என்பதே உண்மை!


தற்சமயம் பாரிசானாகட்டும், மக்கள் கூட்டணியாகட்டும், கண்டிப்பாக இந்த மாற்றங்களில் விளையக்கூடிய நன்மைகளை அவர்கள் மதித்து ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தில் இல்லை என்றுதான் கூறவேண்டும். என்னுடைய வாதங்கள் இனவாதக் குப்பை என பலராலும் ஒதுக்கப்பட்டுவிடலாம். ஒதுக்கப்படுவதைத்தான் நானும் கூறுகிறேன், நம் நாட்டுக் கொள்கைகளில் நிறைய பரிணாமக் கோளாறுகள் இருக்குகின்றன.
18 அம்சக் கோரிக்கைகளையும் தீவிரமாகவும், நாட்டு நலனை அடிப்படையாகக் கொண்டும் நோக்கின் மறுமலர்ச்சிக்கான வித்தினை நாம் எதிர்ப்பார்க்கலாம். தற்சமயம் நிலவிவரும் உலகப் பொருளாதார மந்த நிலையையும், நிலைப்பாடற்ற அரசியல் தன்மையையும் கருத்தில் கொண்டு இக்கோரிக்கைகளை முன்வைப்பது இடம், பொருள், ஏவல், சூழ்நிலைக்கு ஏற்ற ஒன்று என்றே கருதவேண்டியுள்ளது. நாட்டின் முன்னோடி அரசியல் கட்சிகளான பாரிசானாகட்டும், பாக்காத்தான் கூட்டு அரசியல் கட்சிகளாகட்டும், மாற்றம் நிகழ வேண்டிய கட்டாயத்தை அவர்கள் உணரவேண்டிய தருணம் இதுவாகும். வாய்ப்பும் தருணமும் கூடிவரும் வேளையில் அதனைத் தவறவிட்டு வீழ்ச்சியின் விளிம்பில் அனைவரும் தோற்றுப்போன கதைகள் சரித்திரம் நமக்கு கற்றுக் கொடுத்த பாடங்களாகும்.

தற்சமயம், மக்கள் கூட்டணியின் தலைமைத்துவமானது மலேசிய இந்தியர்களிடையே தலைதூக்கிவரும் பிரச்சனைகளை முழுமையானதொரு புரிதலோடு, அதனை பல்நோக்கு அணுகுமுறைகளின்வழி தீர்வுகாண வேண்டியது அவசியமாகிறது. மக்கள் கூட்டணியினர் மலேசிய இந்தியர்களின் எதிர்ப்பார்ப்புகளை கேட்டு புரிந்து கொண்டு, அதற்கேற்ப எடுக்கப்படும் நடவடிக்கைகளும் பலனை விளைவிப்பதாயும் இருத்தல் மிக அவசியம். மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்தியப் பிரதிநிதிகள் தலைமைத்துவத்தோடு சந்திப்பு கூட்டங்கள் நடத்தி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும். இவர்கள் நடத்தவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் 18 அம்சக் கோரிக்கைகளை மையப்படுத்தி தேசியக் கொள்கைகளில் தெள்ளத் தெளிவான வரையறைகள் வகுக்கப்பட வேண்டும். இந்த பேச்சு வார்த்தைகளுக்கு மக்கள் கூட்டணியின் தலைமைத்துவம் இணங்கும் வரையில், இந்தியப் பிரதிநிகள் கூட்டணியிலிருந்து விலகாதிருக்க வேண்டும். இந்தியர்களின் 18 அம்சக் கோரிக்கைகளைப் பற்றிய முழுமையான புரிதல் ஏற்பட்ட பின்பே எந்தவொரு முடிவுகளும் எடுக்கப்பட வேண்டும். இதுதான் அனைத்து மலேசிய இந்தியர்களின் எதிர்ப்பார்ப்பும்!

ஒன்று, மேற்கூறிய கருத்துகளின் சாரத்தை நாம் நன்கு உணர்ந்து தக்க நடவடிக்கையில் இறங்க வேண்டும்! இல்லையேல், சரித்திரம் நம்மை மிதித்துச் சென்றுவிடும்!

ஒன்றுபடுவோம்!
ஒன்றாய் செயல்படுவோம்!

ஆக்கம் : திரு.நரகன்
மூலம் : ஆங்கிலக் கட்டுரை ( Should the PR representatives leave? )

போராட்டம் தொடரும்

One Response to மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகள் கட்சியைவிட்டு விலகலாமா?

  1. mathu சொல்கிறார்:

    இந்த போராட்டம் நேற்று தொடங்கி நாளை முடிவுர கூடியது அல்ல. 7 வருடங்கள் திரு.உதயகுமார் அவர்களுடன் வேலை செய்த திரு.மணிக்கா அவர்களுக்கு தெரியாததும் அல்ல. ஒரு சில சுயநலவாதிகள் போடும் கூக்குரலுக்கு அடிபணிந்து பாகத்தன் அரசாங்கம் தோல்வி அடைந்து விட்டது போன்ற தோற்றத்தை மைக் அவர்களே ஏற்படுத்த கூடாது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: