புவா பாலா நிலமோசடி அம்பலம்! ஆதாரங்கள் சிக்கின!

ஜூலை 31, 2009
இன்று மதியம் மூன்று மணியளவில் இண்ட்ராஃப், ஜெரிட், சுவாராம் போன்ற மனித உரிமை இயக்கங்களோடு இணைந்து புவா பாலா கிராம மக்கள், பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங்கை சந்தித்து மனு ஒன்றினைச் சமர்ப்பிக்க சென்றனர். கோப்பராசியிடமிருந்து புவா பாலா நிலத்தை விற்கவோ, வாடகைக்கு விடவோ, அல்லது வணிக நோக்கத்திற்காகப் பயன்படுத்தவோ முடியாது எனவும் அப்படி மேற்கூறியவற்றில் ஏதேனும் ஒரு நோக்கத்திற்காக அந்நிலம் பயன்படுத்தப்படுமெனின், அது மாநில அரசாங்கத்தின் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. (இணைக்கப்பட்டுள்ள படங்களைக் காண்க)

கூட்டுறவு கழகத்திற்கும் நுஸ்மெட்ரோ வெஞ்சூர்சுக்கும் இடையிலேயான இவ்வொப்பந்தக் கடிதமானது 27-03-2008 எனும் திகதியில் கையெழுத்திடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அதாவது விற்க, வாடகைக்கு விட, வணிக நோக்கத்திற்குப் பயன்படுத்தக்கூடாத இந்நிலத்தை விற்க அனுமதியளித்தவர்கள் பக்காதான் மாநில அரசுதான் என்பது ஊர்சிதப்படுகிறது. எனவே, மாநில அரசு நுஸ்மெட்ரோ வென்சூர்சுக்கு சல்லி காசு கொடுக்க வேண்டிய அவசியமில்லை என வாதம் எழுந்துள்ளது. கூட்டுறவு கழகத்திடமிருந்து 3.2 மில்லியன் செலவில் புவா பாலா நிலத்தை மாநில அரசு கையகப்படுத்தலாம்.

இதனை லிம் குவான் எங்கிற்கு நினைவூட்டி உரிய நடவடிக்கை எடுக்க கோரும் முயற்சியாக இன்று புவா பாலா கிராம மக்கள் முதல்வரிடம் மனுவைச் சமர்ப்பிக்கச் சென்றனர். அம்மனுவை முதல்வரின் செயலாளர் பெற்றுக் கொண்டுள்ளார்.

லிம் குவான் எங்கிற்கு கொடுக்கப்பட்ட மனு

கூட்டுறவு கழகத்திடமிருந்து நுஸ்மெட்ரோவிற்கு விற்கப்பட்ட விவரம்

பகுதி 1
பகுதி 2

போராட்டம் தொடரும்…

Advertisements

புவா பாலாவில் மற்றுமொரு விசேசமுங்கோ..

ஜூலை 30, 2009
எதிர்வரும் (02-08-2009) ஞாயிற்றுக்கிழமை, புவா பாலா கிராமத்தில் பண்பாட்டு, கலாச்சார விழா நடைப்பெறவுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய நடனங்களான கரகாட்டம், கோலாட்டம் மற்றும் விளையாட்டுகளான உறியடித்தல், வழுக்கு மரம் ஏறுதல், ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்வுகள் காலை 10 மணி தொடங்கி இரவு 8 மணிவரை நடைப்பெறவிருக்கின்றது. அன்றைய நிகழ்விற்கான மதிய, மாலை உணவினை கிராமத்துப் பெண்கள் சமைத்து பரிமாறவுள்ளனர்.

பினாங்கில் 200 வருடங்களாக நிலைப்பெற்றிருந்த தமிழர்களின் பாரம்பரிய கிராமம் இனி இருக்குமா என்பது கேள்விக்குறியே! இந்நிகழ்வானது அக்கிராமத்தின் கடைசி நிகழ்வாகக் கூட இருக்கலாம். எனவே, இவ்வறிவிப்பை அழைப்பிதழாக ஏற்றுக் கொண்டு பொதுமக்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு புவா பாலா கிராம மக்களுக்கு ஆதரவு அளிப்பீர்கள் என நம்புகிறோம்.

கீழ்காணும் அழைப்பிதழை உங்களுக்கு அறிமுகமானவர்களிடமும் இணைய நண்பர்களிடமும் மின்னஞ்சல்வழி, அச்சடித்து அனுப்பி தெரியபடுத்தவும்.

இக்கண்,

உங்கள் வரவை பெரிதும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் புவா பாலா தமிழ் மக்கள்

போராட்டம் தொடரும்..


புவா பாலா முருகன் யுனேசுகோவிற்குப் பயணம்!

ஜூலை 28, 2009

புவா பாலா கிராமத்தில் மாடுகள் வளர்த்து வரும் கே.முருகன்(வயது 46) என்பவர் நேற்று (திங்கட்கிழமை) மாலை (பிரிட்டன் நேரப்படி) லண்டன் மாநகரைச் சென்றடைந்தார். அங்கு அவரைச் சந்தித்து வரவேற்ற இண்ட்ராஃப் தலைவர் திரு.வேதமூர்த்தி புவா பாலா கிராம விவகாரத்தை பாரிசு மாநகரில் அமைந்துள்ள யுனேசுகோவின் உலக பாரம்பரிய தலைமையகத்தின் பார்வைக்கு கொண்டுவர திட்டமிட்டிருக்கிறார். பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் உதவியோடு பாரிசு நகரில் யுனேசுகோ அதிகாரிகளுடன் சந்திப்பு கூட்டம் நடத்த திரு.வேதமூர்த்தி ஏற்பாடு செய்திருக்கிறார்.

நாளை அவ்விருவரும் பாரிசு நகருக்கு பயணமாகின்றனர்.

இத்தகு நடவடிக்கையின்வழி அனைத்துலக ரீதியில் சம்பந்தப்பட்டவர்களின் மீது குறிப்பாக பினாங்கு மாநில முதல்வரிடம் புவா பாலா கிராமத்தை பாரம்பரிய கிராமமாக அறிவிக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்கக்கோரி நெருக்குதல் அளிக்கலாம்.

முருகனின் இம்முயற்சி அனைத்துலக பார்வையை 6.5 ஏக்கர் புவா பால நிலத்தின் மீது விழ வைப்பதோடு, யுனேசுகோவின் நெருக்குதல்களின்வழி புவா பாலா கிராமத்தை காப்பாற்றி, அதனை தமிழர் பாரம்பரிய கிராமமாக நிலைப்பெறச் செய்ய முடியும் எனும் நம்பிக்கை துளிர்விட்டுள்ளது.

இதற்கிடையில், பினாங்கு மாநில அரசு நுஸ்மெட்ரோ வெஞ்சூர்சின் மேம்பாட்டு திட்டத்தை ரத்து செய்திருப்பினும் கூட்டரசு நீதிமன்றத்தின் ஆணையின்கீழ் புவா பாலா நிலத்தை இடித்துத் தள்ளுவதற்கு அந்நில மேம்பாட்டாளர்களுக்கு இன்னும் அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விடயத்தில், மேலும் சில ஐயப்பாடுகள் எழுந்துள்ளன.

கிராம மக்களின் வீடுகளை உடைத்துவிட்டு, பிறகு பேரம் பேசினால் மக்கள் அடிபணிந்துபோகக் கூடும், நட்ட ஈடை வாங்கிக் கொண்டு நிலத்தை விட்டுக் கொடுக்கக்கூடும் என்பது மேம்பாட்டாளர்களின் திட்டங்களில் ஒன்றாக இருக்கக் கூடும் என ஐயுறப்படுகிறது.

கிராம நிலத்தில் சிறுபகுதியை மட்டும் பாரம்பரிய நிலமாக ஒதுக்கீடு செய்து, பெறும்பகுதி நிலத்தில் நுஸ்மெட்ரோவின் ஆடம்பர அடுக்குமாடி திட்டத்தை செயல்படுத்த பினாங்கு மாநில அரசு நில மேம்பாட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இரு தரப்பினருக்கும் வெற்றியளிக்கும் தீர்வாக பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் இதனை வழிமொழிந்தாலும், பாரம்பரிய நிலம் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்!

முறையே செயல்படுத்துவன வேண்டியவற்றை காலந்தாழ்த்தி செயலாற்றிவரும் பினாங்கு மாநில அரசின் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன?

பொறுத்திருந்து பார்ப்போம்

போராட்டம் தொடரும்


வெற்று வாக்குறுதிகளால் வஞ்சிக்கப்பட்ட புவா பாலா மக்கள்!

ஜூலை 22, 2009
கடந்த சனவரி மாதம் 19-ஆம் திகதி, புவா பாலா கிராம மக்கள்பொங்கல் திருவிழா 2009′ நிகழ்வினை ஏற்று நடத்தினர். இவ்விழாவில் பினாங்கு மாநில துணைமுதல்வர் திரு.இராமசாமி, வழக்கறிஞர் கர்பால் சிங், சிறீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயர், பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் இரவீந்திரன் மற்றும் பல அரசியல்வாதிகள் கலந்துகொண்டனர்.

அந்நிகழ்வில் பக்காதான் அரசியல்வாதிகள் புவா பாலா கிராம மக்களுக்கு கொடுத்த வெற்று வாக்குறுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளி காட்சியில் இடம்பெற்றுள்ளது.


உரிமைக்காக அடம்பிடிப்பது தவறா?

ஜூலை 17, 2009

மலேசியா இன்று இணையதளத்தில் இன்று வெளியான ஒரு கடிதத்தை கீழே இணைத்துள்ளேன். அக்கடிதம் குறித்த எனது சில கேள்விகளையும் கீழே பதிவிட்டுள்ளேன்.

***

கம்போங் புவா பாலா குடியிருப்பாளர்களில் சிலர் அடம்பிடிக்கிறார்கள்

கடிதம்-Dr Vijaya Bharath

கடந்த சில வாரங்களாக கம்போங் புவா பாலா விவகாரம் தொடர்பாக பல்வேறு நிகழ்வுகளைக் கண்டு வருகிறோம். கோ சு கூன் தலைமையில் முந்தைய அரசு, குறிப்பிட்ட ஒரு கட்சியைச் சேர்ந்த ஒரு சிலரின் நன்மையை முன்னிட்டு தங்களை வஞ்சித்து விட்டதை எண்ணி கிராமவாசிகள் ஆத்திரம் கொண்டார்கள்.

அதன்பின்னர், முந்தைய அரசைக் குறைகூறும் இந்தப் போக்கு, பி.உதயகுமார் உள்பட சில மூன்றாம் தரப்பினரின் தூண்டுதலின் விளைவாக நடப்பு அரசைக் குறை சொல்லும் போக்காக மெல்லமெல்ல மாற்றம் கண்டிருப்பதையும் பார்க்கிறோம்.

இசாவிலிருந்து விடுதலையாகி வந்ததிலிருந்து உதயகுமார் அம்னோவைக் குறைசொல்வதை விட்டுவிட்டார். முதலமைச்சர் நினைத்தால் கிராமவாசிகளின் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண முடியும் என்று கூறி தாம் சட்டம் அறியாதவர் என்பதை அவர் வெளிப்படையாகக் காண்பித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் அவர் அறியாமல் சொல்லவில்லை என்றும் அது, பக்காத்தானுக்கு ஆதரவாகவுள்ள இந்தியர்களிடம் வேண்டுமென்றே ஆத்திரமூட்டி தம் புதிய கட்சிக்கு, பாகாமுக்கு, உறுப்பினர்களைச் சேர்க்கும் ஒரு தந்திரம் என்றும் சிலர் கருதுகிறார்கள்.

அவரின் சகோதரர் பி.வேதமூர்த்திக்கு, மலேசியாவுக்குத் திரும்பும் துணிச்சல் இன்னும் வரவில்லை.

10,000 மலேசிய இந்தியர்களைத் திரட்டி ஜசெக அலுவலகங்களுக்கு எதிரில் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக அவர் விடுத்த மிரட்டல் பிசுபிசுத்துப் போனதால் சங்கடத்துக்கு ஆளான அவர் இப்போது முதலமைச்சரிடம் மகஜர் வழங்க மனைவியையும் பிள்ளையையும் அனுப்பி வைக்கிறார்.

கிராமவாசிகள் இருக்கிறார்களே, அவர்களில் எல்லாருமே தர்மவான்கள் அல்லர். அவர்களில் சிலர், பினாங்கு பக்காத்தானை மிரட்டி அடிபணிய வைக்கும் நோக்கில், இவ்விவகாரத்தை இனரீதியான ஒன்றாக திரித்துக் கூறுகிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப் பிரதிநிதிகள், அந்தக் கிராமத்துச் சென்று கிராமவாசிகளைச் சந்தித்து அவர்களின் உணர்வுகளையும் கருத்துகளையும் அறிந்துகொள்ள முற்பட்டபோது முந்தைய அரசாங்கம் செய்த தவறுகளுக்கு இவர்கள் குறைகூறப்பட்டார்கள், பழித்துரைக்கப்பட்டார்கள். அதே நேரத்தில் முந்தைய அரசின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எவரும் ஒருமுறையேனும் கிராமத்துக்கு வருகை புரிந்ததில்லை என்ற உண்மையைக் கிராமவாசிகள் மறந்துவிட்டார்கள்.

மேம்பாட்டாளரிடம் ரிம90,000-க்குப் பதிலாக ரிம200,000 இழப்பீடு வழங்குமாறு வலியுறுத்தப்போவதாக முதல்வர் கூறியபோது, அதற்குக் கைமாறாக கிராமவாசிகள் என்ன செய்தார்கள்முதல்வர் பதவி விலகி மலாக்காவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கூறினார்கள்.

முதல்வர் மனம் விட்டுப் பேசலாம் என்று அழைப்பு விடுத்தபோது கிராமவாசிகள் என்ன செய்தார்கள். சுலோகங்கள் எழுதிய அறிவிப்புப் பலகையை ஏந்தி வந்தார்கள். பேச்சுகளில் மூன்றாம் தரப்பினர் கலந்துகொள்வதை முதல்வர் விரும்பாதபோது கலந்துரையாடலே வேண்டாம் என்று கூறி அவர்கள் கலைந்து சென்று விட்டனர்.

அதன்பின்னர், குடியிருப்பாளர் சங்கத் தலைவர் எம்.சுகுமாறன், முதல் அமைச்சரைச் சந்தித்து நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார் என்பதை அறிந்ததும் வீம்புகொண்ட கிராமவாசிகளில் சிலர், குறிப்பாக சி.தர்மராஜும், ஜே.ஸ்டீபனும் அவரைக் குறைகூறினர். இரண்டாவது முறை சந்தித்துப்பேச முதல்வர் விடுத்த அழைப்பையும் அவர்க்கள் ஏற்க மறுத்தனர்.

இப்படிப்பட்ட செயல்களெல்லாம் நிற்க வேண்டும்.

நியாய உணர்வுடன் அப்பாவி கிராமமக்களுக்கு இழப்பிடு வழங்கப்பட வேண்டும். அருகிலேயே ஒரு நிலத்தைஆடுமாடு வளர்ப்புக்கு வசதியுள்ளதாகஅவர்களுக்கு வழங்கலாம். முடிந்தால், அவர்களைத் திருப்திபடுத்தும் வகையில் இந்திய கிராமியத் தன்மைகள் நிரம்பியதாகவும் அதைக் கட்டிக்காத்து வரலாம்.

அதே நேரத்தில், முதல்வரைச் சந்திக்க மறுப்பதுடன் அந்த நிலத்தை மாநில அரசு கையகப்படுத்த நினைத்தால் அதற்காக ரிம 300 மில்லியனைச் செலுத்த வேண்டுமே என்பதைப் பற்றிக் கவலையும் படாத மற்றவர்களைப் பொருத்தவரை அவர்களின் வீடுகளை அம்னோவுடன் தொடர்புகொண்ட நூஸ்மெட்ரோ நிறுவனம் இடித்துத் தள்ளட்டும். அதன்வழி அவர்கள் பாடம் கற்கட்டும்.

பினாங்கில் உள்ள மற்றவர்கள் பற்றிக் கவலைப்படாமல் பினாங்கு அரசின் நலனைப் பற்றிக் கவலப்படாமல் கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமவாசிகளில் சிலர் அடம்பிடிக்கிறார்களே அப்படிச் செய்தால் என்ன ஆகும் என்பதை நினைத்துப் பார்த்தார்களா? நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்தற்காக அரசே கலைக்கப்படலாம்.

இவ்விவகாரத்தில், மாநில அரசு உயர்ந்த விலை கொடுத்து அந்நிலத்தைக் கையகப்படுத்த வேண்டுமா என்று பினாங்கு ஜசெக வலைத்தளத்தில் நடத்தப்படும் கருத்துக்கணிப்பில் கலந்துகொள்வோரில் 87 விழுக்காட்டினர் என் கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன்.

*******************************************************

முதலில் இப்படியொரு வெக்கங்கெட்ட அறிக்கையை வெளியிட்ட விஜய பரத்திற்கு எனது கண்டனங்கள்!

இவ்வறிக்கையில் விஜய பரத் கிராம மக்களின் அடிப்படை எதிர்பார்ப்புகளுக்கு விடைகொடுக்க முனையவில்லை, மாறாக இண்ட்ராஃபை தாக்கியே ஆக வேண்டும் எனும் நோக்கத்தில் எழுதியுள்ளார்.

முதலில், இவ்விவகாரத்தில் இண்ட்ராஃபை தவிர்த்து, ‘ஜெரிட்’, ‘சுவாராம்’, மலேசிய சோசியலிச கட்சி என பல தரப்பினர் பாரிசானின் துரோகத்தையும் பக்காதானின் உண்மை முகமூடியையும் கிழி கிழியென கிழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்! இவ்விடயத்தில் இண்ட்ராபின் மீது மட்டும் எதற்கு உங்களுக்கு தேவையில்லாத காழ்ப்பு?!

மக்களின் நிலத்தை சட்டவிரோதமாக அபகரித்தது பாரிசான் அரசாங்கம்தான் என பலருக்கும் தெரியும். அதனை மீண்டும் மீண்டும் நீங்கள் விளக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், பக்காதான் பினாங்கில் ஆட்சியிலமர்ந்து 20 நாட்களுக்குப் பிறகுதான் நிலம் மேம்பாட்டாளர்களிடம் கைமாறியிருக்கிறது! அதுவும் பாக்காதான் அரசின் முழு அனுமதியோடு! இது எப்படி நடந்தது? இந்த கேள்விக்கு இன்றுவரையில் பக்காதானிடமிருந்து பதிலே கிடைக்கவில்லை.

மார்ச் 8 தேர்தலுக்கு முன்பு, பினாங்கு பக்காதான் தலைவர்கள் புவா பாலா கிராமத்தில் வாய் கிழிய வாக்குறுதிகள் கொடுத்தார்களே? அவர்களில் பலர் சட்டம் அறிந்தவர்களாயிற்றே! நிலத்தை கையகப்படுத்த முடியாது என்றால் அதனை அப்பொழுதே மக்களிடம் கூறியிருக்கலாமே! கூட்டரசு நீதிமன்ற தீர்ப்பை மாற்ற முடியாது என அப்பொழுதே ஒப்பித்திருக்கலாமே? தேர்தல் சமயம், கிராம நிலம் மக்களுக்குத்தான் சொந்தம், நிலமோசடியை அம்பலப்படுத்துவோம்! எங்கள் பிணத்தை தாண்டித்தான் நில மேம்பாட்டாளர்கள் இங்கு காலடி எடுத்து வைக்க முடியும்! என்றெல்லாம் கோஷமிட்டவர்கள் இன்று தலைக்கீழாக பேசுவதைத்தான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை! அதுவும், தெரிந்தே அந்நிலத்தை மேம்பாட்டாளரிடம் விற்க அனுமதித்த பாக்காதான் அரசாங்கத்தை கண்டிக்காமல் என்ன செய்வது?

தொட்டதெற்கெல்லாம் இண்ட்ராஃப் ஏற்படுத்திய மாபெரும் மக்கள் சக்தி அலையை மூச்சுக்கு முன்னூறு தடவை சொன்ன இவர்களுக்கு இன்று இண்ட்ராஃபின் பெயரைக் கேட்டால் கசக்கிறதோ? உண்மை சில நேரங்களில் கசக்கத் தானே செய்யும்!

பினாங்கு ஜனநாயக செயல் கட்சியின் தளத்தில் ஓட்டு கேட்டு மலிவு விளம்பரம் தேட முனையும் விஜய பரத்திடம் சில கேள்விகள் கேட்க வேண்டும்.

1) கிராம மக்களுடன் மனம்விட்டுப் பேச வேண்டும் என்றும், அழைப்பு விடுத்தால் வர மறுக்கிறார்கள் என கிராமவாசிகளின்மீது குற்றத்தை சுமத்திய லிம் குவான் எங், ஏன் கடந்த 30ம் திகதி சூன் மாதமன்று ஒட்டுமொத்த கிராமமும் கொம்தாருக்கு வந்தபொழுது சந்திக்கவில்லையாம்? இரவுவரை அங்கேயே காத்திருந்த மக்களை இறுதிவரை சந்திக்காத அவருக்கு அப்படி என்ன முக்கியமான வேலை இருந்தது?

2) மார்ச்27, பக்காதான் ஆட்சியிலிருந்த சமயம் ஏன் புவா பாலா நிலம் மேம்பாட்டாளருக்கு முழுமையாக கைமாற்றப்பட்டது? அதன் பின்ணனி என்ன?

3) சட்டம் அறிந்தவர்களோடுதான் முதலமைச்சரை சந்திப்போம் என வேண்டுகோள் விடுக்கும் கிராம மக்களுக்கு ஏன் அனுமதி மறுத்தளிக்கப்படுகிறது?

4) தொடக்கத்தில் ரி.90,000 மட்டுமே நஷ்ட ஈடாக மக்களுக்கு கொடுப்பதாக மக்களிடமே அறிவித்துவிட்டு, ஊடகங்களில் இரண்டு லட்சத்திற்கும் நஷ்ட ஈடு கொடுக்க மக்களுடன் பேரம் பேசியதாக பொய்யுரை பரப்பியது ஏன்?

5) 23 வீடுகளில் மொத்தம் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கூட்டுக் குடும்பம் எனும் ரீதியில் வசித்து வருகின்றனர். ஒரு வீட்டிற்கு ரி. 2 லட்சம் மட்டுமே கொடுக்கப்படும் என அறிவித்தவர்கள் ஏனைய குடும்பத்தினருக்கு என்ன பதில் கூறவிருக்கின்றனர்?

6) புக்கிட் சீனா பாரம்பரிய கிராமத்திற்காக போராடிய லிம் குவான் எங், ஏன் பினாங்கின் கடைசி இந்தியர் பாரம்பரிய கிராமத்தை தக்க வைப்பதற்கான உரிய நடவடிக்கையை 15 மாதங்களுக்கு முன்பே எடுக்கவில்லை? காலம் கடத்தியது எதற்கு?

7) நில மோசடி என அப்பட்டமாக தெரிந்தும், நில ஆர்ஜித சட்டத்தையும் Section 116,1(d) (National Land Code section 76)யும் பயன்படுத்தி ஏன் நிலத்தை கையகப்படுத்தவில்லை?

8) மாறாக ஏன் தொடர்ந்துநில மேம்பாடாளர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்என்பதையே ஊடகங்களில் பெரிதுபடுத்தி லிம் குவான் எங் பேசுகின்றார். சட்ட ரீதியில் மேம்பாடாளர்களுக்கு சல்லி காசு கொடுக்க வேண்டியதில்லை! காரணம், நிலம் ஏமாற்றி விற்கப்பட்டதற்கான ஆதாரம் (Documentary Evidence) நிரம்ப உண்டு! ஏன் பாக்காதான் இவ்விடயத்தில் வாளாவிருக்கிறது?

9) இப்பொழுது மட்டும் கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவை தலையில் தூக்கிக் கொண்டு ஆடும் பாக்காதான், ஒரு காலத்தில் எத்தனை முறை நீதிமன்ற முடிவுகள் குறித்து தங்களின் அதிருப்திகளை தெரிவித்திருப்பார்கள்! அதேப்போன்று ஏன் கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவை ஒத்திவைப்பதற்கு சட்ட வல்லுநர்களை பயன்படுத்தவில்லை இந்த பக்காதான்? நீதிமன்ற முடிவை ஒத்திவைத்து மேலும் நில மோசடி தொடர்பான விசாரணையை தொடரலாமே? முடியாதா என்ன?

10) அம்னோவுடன் தொடர்புகொண்ட நுஸ்மெட்ரோ வெஞ்சூர்ஸ் எனும் நிறுவனத்தின் முக்கிய புள்ளி, பினாங்கில் 4 மில்லியன் செலவில் குறிப்பிட்ட ஒரு கட்சியின் தலைமையகக் கட்டிடத்தை கட்டிக் கொடுக்க சம்மதம் அளித்துள்ளதாகவும், அதனால்தான் பக்காதான் வாயை மூடிக்கொண்டிருக்கிறது எனவும் சில வதந்திகள் பரவுகின்றனவே, அது உண்மையா?

11) ஹெலன் மார்கிரேட் பிரவுன் இந்நிலத்தை அங்குள்ள மக்களிடம் கொடுத்து (Strait Settlement ) அரசாங்கத்தை Trustee-யாக வைத்துவிட்டுச் சென்றார். மலாயா சுதந்திரம் அடைந்ததும் நீரிணை மாநில அரசுகளின் சொத்துகள் முறையே மத்திய அரசாங்கத்தையே சாரும். இவ்விடயத்தில்புவா பாலாநிலத்திற்கு முறையே மத்திய அரசாங்கம்தான் ‘Trustee’. மாநில அரசு இந்நிலத்தை மத்திய அரசிடமிருந்து பெற்றுக் கொண்டதற்கான ‘Documentary Evidence” எதுவும் இல்லாத பட்சத்தில் மாநில அரசு எப்படிபுவா பாலாநிலத்தை அம்மக்களுக்கே தெரியாமல்கோப்பராசிக்கும்’, கோப்பராசியிடமிருந்து நுஸ்மெட்ரோவிற்கும் கைமாற்றியது?’ இவ்விவகாரத்தில் முறையே பாரிசானும் பக்காதானும் சம்பந்தப்பட்டிருக்கின்றன. ஏன், இந்நிலமோசடி குறித்து பக்காதான் ஆட்சிக்கு வந்தவுடன் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை? ஏன் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யவில்லை?

12) தொடர்ந்தாற்போல் மேம்பாட்டாளருக்கு ஆதரவாகவே இருந்துவரும் பாக்காதானிடம் இறுதியாக ஒரு கேள்வி, பாக்காதான் ராக்யாட் மேம்பாட்டாளருக்கு நண்பனா? அல்லது மக்களுக்கு நண்பனா?

விஜய பரத் முதலில் இக்கேள்விகளுக்கு முறையாக பதிலளிக்கட்டும். ஓட்டு பொறுக்குவதை பின்பு பார்த்துக் கொள்ளலாம். மக்களுக்கு சட்டம் தெரியாது என்ற இறுமாப்பில் பாரிசானும் பாக்காதானும் மேம்பாட்டாளர்களுடன் இணைந்துகொண்டு என்னென்ன ஆட்டம் ஆடுகிறார்கள் பாருங்கள்!

பரிந்துரை : அவசியம் படிக்க வேண்டிய கட்டுரைகள்

What are the options now for the PR Government on the Kampong Buah Pala issue?

Guan Eng on Buah Pala and Bukit Cina – see any difference

போராட்டம் தொடரும்…


புவா பாலா மக்களுக்கு கையெழுத்திடப்படாத கடிதம்..

ஜூலை 15, 2009
கையெழுத்திடப்படாத கடிதம்

நேற்று புவா பாலா கிராமத்திலுள்ள 23 வீடுகளுக்கு கையெழுத்திடப்படாத இக்கடிதம் சென்றடைந்துள்ளது. பினாங்கு முதலமைச்சர் புவா பாலா கிராம மக்களோடு மனந்திறந்து பேசவிருக்கிறாராம். நாளை காலை 10 மணியளவில் இச்சந்திப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கின்றனர். வழக்கம்போல் சட்ட வல்லுநர்களை கிராம மக்கள் தங்கள் பிரதிநிதியாக உடன் அழைத்து வரக்கூடாது என்று கட்டளையிட்டிருக்கின்றனர். இதிலிருந்து, ஒரு விடயம் நன்கு புலப்படுகிறது. லிம் குவான் எங் அந்நிலத்தை மக்களுக்கு கொடுப்பதைவிட நில மேம்பாட்டாளர்களுக்கு கொடுப்பதையே விரும்புகிறார். அதனால்தான், சட்ட அறிவு இல்லாத பாமர மக்களின் மனங்களை ஏதாவது சொல்லி குழப்பி அரசு வழங்கும் நட்ட ஈடை வாங்கிக் கொண்டு அனைவரின் வாயையும் மூட வேண்டும் என்பது அவர்களின் திட்டம். பிறகு, நாளிதழ்களிலும் தொலைக்காட்சி செய்திகளிலும்நாங்கள் புவா பாலா மக்களுடன் ஒரு சுமூகத் தீர்வு கண்டுள்ளோம், இது மக்களுக்கு கிடைத்த வெற்றி!” என்று தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள்.

பாரிசானாகட்டும் பக்காதானாகட்டும் இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகள்தாம் என்பதற்கு இச்சம்பவங்கள் ஒரு சிறு உதாரணம்.


நிலம் மக்களுக்கே சொந்தம்! – உதயகுமார்

ஜூலை 14, 2009
பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4

போராட்டம் தொடரும்