தமிழ் இலக்கியமும் மலாய் மேலாண்மைக் கோட்பாடும்

திசெம்பர் 7, 2009
அண்மையகாலமாக மிக நேர்த்தியான முறையில் அம்னோ அரசாங்கத்தினால் நடத்தப்பெறும் ஒரு புழுத்துப்போன நாடகத்தை, மலேசிய இந்திய சமூகம் அலுத்துப்போய் எதிர்கொண்டு பேச்சுவார்த்தை, கண்டனக் கூட்டம், ஊடக அறிக்கை, கையெழுத்து வேட்டை என பலவகையில் தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தி வருவதை அனைவரும் அறிவர்.

2010-ஆம் ஆண்டு தொடங்கி எசு.பி.எம் தேர்வில் 10 பாடங்களையே தேர்வாக எழுத முடியும் என கல்வி அமைச்சு இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. இதுனால் வரை தமிழ் இலக்கியத்தை ஒரு தேர்வு பாடமாக எடுத்து மொத்தம் 11 தேர்வு பாடங்களை எழுதி வந்த நடைமுறைபோய், இனிவருங்காலங்களில் 10 பாடங்களே எடுக்க முடியும் என்ற அறிவிப்பு வழக்கம்போல் சமூக அரசியல் இயக்கங்களின் கவனத்தை ஈர்த்தன. அதனைத் தொடர்ந்து இந்திய சமூக இயக்கங்களிடமிருந்தும் அரசியல் கட்சிகளிடமிருந்தும் தொடர்ச்சியாக எழுந்த கண்டனங்கள், பின்பு கல்வி அமைச்சு தேர்வில் 12 பாடங்களை எடுக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதித்ததையும் நாம் அறிவோம். கூடுதலாக தேர்தெடுக்கப்படும் தேர்வுப் பாடங்களின் புள்ளிகள் கூட்டு மதிப்பெண்களில் இடம்பெறாது எனவும், கல்விக் கடனுதவிகள், உபகாரச் சம்பளங்கள் பெறுவதற்கு இக்கூடுதல் தேர்வுப் பாடங்களின் அடைவுநிலைகள் கணக்கிற் கொள்ளப்படாது எனவும் கல்வி அமைச்சு அறிவித்திருந்தது. கல்வி அமைச்சின் இந்த முடிவைக் கண்டு சிலர் அரசாங்கத்தை பாராட்டி அறிக்கைகளும் வெளியிட்டனர், சில தரப்பினர் தங்களின் அதிருப்தியையும் வெளியிட்டனர். எதிர்வரும் திசம்பர் 12-ஆம் தேதியன்று திட்டமிட்டப்படியே தோட்ட மாளிகையில்தமிழைக் காப்போம்இலக்கியத்தை மீட்போம்எனும் கண்டனக் கூட்டம் நடைப்பெறப்போவதாயும் அறிவிப்புகள் வந்துள்ளன.

இந்தக் கட்டுரையின்வழி, அம்னோ அரசாங்கத்தின் முடிவு சரியானதா, அதற்கேற்றாற்போல் நமது சமூக அரசியல் இயக்கங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகள் சரியானதா என்பதனைப் பற்றி அலசுவது எனது நோக்கம் அல்ல. ஒவ்வொரு தடவையும் இதுபோன்ற இழுப்பறிகள் நடைப்பெறும்போதெல்லாம் நம் சமூகத்தின் நிலைப்பாடும் அரசாங்கத்தின் முடிவுகளும், ஊடகங்களின் பங்கும் எப்படி இருக்கும் என்பதனைப் பற்றிய சில உண்மைகளை விளக்கி மீட்டுணர்வதற்கும், யாரும் பார்க்க, பேச மறந்த ஒரு விடயத்தை இங்கு துணிந்து கூறுவதற்குமே இந்த பதிவு.

முதலில் மொழி என்பது ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய, கிடைக்கப்பெற வேண்டிய அடிப்படை உரிமையாகும். அச்சமூகமானது சிறுபான்மை இனத்தைச் சார்ந்து இருந்தாலும், மொழி உரிமையை ஒருபோதும் அவர்களிடமிருந்து தட்டிப் பறிக்கலாகாது என்று .நா மன்றம் வரையறுத்திருக்கிறது. எனவே, எசு.பி.எம் தமிழ் இலக்கிய தேர்வு பாடத்தைப் பற்றி அணுகுவதற்கு முன்பாக, முதலில் தேசிய, இன மொழிச் சமய சிறுபான்மையினருக்கான ஐக்கிய நாட்டவையின் உரிமைப் பிரகடனத்தில் வரையப்பட்டுள்ள உடன்படிக்கைகள் சிலவற்றை இங்கு நான் மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

பிரிவு 1

. தன் நாட்டு பூகோள எல்லையுள் வாழும் சமய, இன, மொழிச் சிறுபான்மையினரின் தனித்த அடையாளங்களை அரசுகள் பாதுகாப்பதோடு, அவர்களின் தனித்த அடையாள வளர்ச்சிக்கான சூழல்களையும் உருவாக்க வேண்டும்.

. இவ்வுரிமைகளை நிறைவேற்ற அரசுகள் உரிய சட்டங்களை இயற்ற வேண்டும்.

பிரிவு 2

. தேசிய, இன, மொழி, சமயஞ்சார்ந்த சிறுபான்மையினர் தங்களின் கலாச்சாரத்தை அனுபவிக்கவும் ஒரு சமயத்தைத் தழுவவும், கடைப்பிடிக்கவும், தாய்மொழியைப் பயன்படுத்தவும் பொதுவிடங்களிலும், தனியாகவும், எவ்வித பாகுபாடுமின்றி அனுபவிக்கவும் உரிமையுண்டு.

பிரிவு 4

. சிறுபான்மையோர் தம் தனித்த பண்புகளை வெளிப்படுத்தவும், கலாச்சாரம், மொழி, பாரம்பரியம், பழக்க வழக்கங்களை வளப்படுத்தவும் உரிமையுண்டு.

. தாய்மொழியைக் கற்கவும், தாய்மொழியில் கல்வி கற்கவும் சிறுபான்மையோரின் உரிமைகளைப் பேண அரசு உரிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

. சிறுபான்மையினர் தம் வரலாறு, பாரம்பரியம், மொழி, கலாச்சாரம் என்பன பற்றிய ஆழமான அறிவை கல்வி மூலம் பெறுகின்ற வாய்ப்பைப் பெற அரசு வழி வகை செய்ய வேண்டும். அதேவேளை, ஒட்டுமொத்த சமூகம் பற்றிய அறிவையும் அவர்கள் பெற வழிவகை செய்தல் வேண்டும்.

மேற்குறிப்பிட்டுள்ள ஐக்கிய நாட்டவையின் உரிமைப் பிரகடனத்தில் ஒரு சமூகத்தைச் சார்ந்த மொழிக்கு எவவளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதனை நாம் கவனிக்க வேண்டும். இப்போழுது நம் நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் அரசியலமைப்புச் சட்டத்தில் வரையப்பட்டுள்ள ஒரு சட்டப்பிரிவைAlign Left இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

வரைவு எண் 152

மலாய் மொழியானது மலேசிய நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாகும். அதிகாரப்பூர்வ மொழி மலாய் மொழி என எழுத்துப்பூர்வமாக சட்டங்களின்வழி பாராளுமன்றம் வரையறுத்திருக்க வேண்டும். இருப்பினும் மலாய் மொழியின் அங்கீகாரமானது பிற மொழிகளுக்கான நிலைப்பாடு மற்றும் உரிமையைக்கொண்டு அம்மொழியைப் பயன்படுத்துவதற்கும், கற்றுக்கொள்வதற்கும், மேம்படுத்துவதற்கும், இத்தனைக்கும் பொது மானியங்களைப் பயன்படுத்தி அவற்றைச் செயல்முறைப்படுத்துவதற்கும் தடையாக ஒருபோதும் இருக்கக்கூடாது.

உள்ளடக்கம்

வரைவு எண் 152(1)(a)

பிற மொழிகளைப் பயன்படுத்துவதற்கும் (அதிகாரப்பூர்வ காரணங்களைத் தவிர்த்து), அல்லது கற்பிப்பதற்கும் கற்பதற்கும் யாரையும் மறுக்கவோ தடுக்கவோ முடியாது; மற்றும்

வரைவு எண் 152(1)(b)

கூட்டரசில் அங்கம் வகிக்கும் பல்லின மக்களின் மொழிகளைப் பாதுகாப்பதற்கும், தொடர்வதற்கும், கற்பதற்கும் உரிய மத்திய, மாநில அரசாங்கங்களின் உரிமைகளை இங்கு குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு வரைவின் உட்பிரிவும் பாதிக்கலாகாது.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள கூட்டரசு அரசியலமைப்புச் சட்டவரைவுகள் மிகத் தெளிவாகவே பிற மொழிகளைப் பயன்படுத்தவோ, கற்கவோ, கற்பிக்கவோ, அதற்காக பொது மானியங்களை ஒதுக்கீடு செய்யவோ எந்தவொரு தடையும் இல்லை எனத் தெரிகிறது.

எனவே, மொழி என்பது நமக்கும் சரி பிற இனத்தவருக்கும் சரி அதுவொரு அடிப்படை உரிமை என்று சட்ட ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்ட ஒரு விடயமாகும். அடிப்படை உரிமை என்றாலே அதனை மறுக்கவோ, நம்மிடமிருந்து பறித்துக் கொள்ளவோ யாருக்கும் உரிமை இல்லை என்று பொருளாகிறது. ஆனால், நாடு சுதந்திரம் அடைந்து, அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு 52 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், இந்நாட்டில் குறிப்பாக இந்திய/தமிழ் சமூகம் மட்டும் தொடர்ந்து அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கே போராடி வருவதை நாம் முதலில் உணர வேண்டும். அடிப்படை உரிமைக்கே 52 ஆண்டுகளாகியும் போராட வேண்டியிருக்கிறது என்றால், நம் சமூகம் கேவலமாக நடத்தப்பெறுகிறது என்றுதானே அர்த்தம். குறிப்பிட்டுச் சொன்னால்ஓரங்கட்டுதலின்மற்றுமொரு அத்தியாயம் இது என்று அறுதியிட்டுக் கூறலாம்.

அண்மையில் மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறை, தெற்காசிய ஆய்வுத் துறையாக பெயர் மாற்றம் பெறவிருப்பதாக அம்னோ அரசாங்கம் இந்திய சமூகத்தை பயமுறுத்தியது. உடனுக்குடன் நம் சமூக அமைப்புகளின் எதிர்வினையால் அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது. ஆனால், அப்பிரச்சனை மீண்டும் எழாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? அதனைத் தொடர்ந்து எசு.பி.எம் தேர்வில் தமிழ் இலக்கிய பாடத்தை தேர்வு பாடமாக எடுப்பதை தடைசெய்யும் வகையில் அதிகபட்ச 10 பாடங்களை அறிவித்து பின்பு அரைகுறையாக நம்முடைய கோரிக்கையை ஏற்றுக் கொண்டதுபோல் நாடகம் ஆடுகிறது. இந்த ஆண்டை மட்டும் ஆய்விற்கு எடுத்துக் கொண்டு, நமது அடிப்படை உரிமைகள் விடயத்தில் எத்தனை முறை அம்னோ அரசாங்கம் கைவைத்துவிட்டது என்று ஒரு கணக்கு போட்டுப் பாருங்கள்.

இதற்கெல்லாம் பின்னணி என்னவாயிருக்கும்?

முதலில் அம்னோ அரசாங்கமானது பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகள் குறித்த நிலைப்பாட்டினை எவ்வாறு கொண்டுள்ளது என்பதனை கவனிக்க வேண்டும்.

ஐக்கிய நாட்டவையின் நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்றான மலேசியா, .நா வரையறுத்துள்ள உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தில் இடம்பெற்றுள்ள எட்டு மாநாடுகளின் உடன்படிக்கைகளில், இதுவரை இரண்டில் மட்டுமே கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ஐக்கிய நாட்டவையின் மனித உரிமை ஆணையத்தின் எட்டு உடன்படிக்கைகள் :

1) குடிமையியல் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த அனைத்துலக உடன்படிக்கை 1976

2) பொருளாதார, சமூக மற்றும் பண்பாட்டு உரிமைகள் குறித்த அனைத்துலக உடன்படிக்கை 1976

3) தஞ்சமடைந்த அகதிகளின் பாதுகாப்பு குறித்த அனைத்துலக உடன்படிக்கை 1951 மற்றும் 1967

4) இனப்பாகுபாடு ஒழிப்பு குறித்தான அனைத்துலக உடன்படிக்கை 1969

5) பெண்கள் மீதான அனைத்துவித பாகுபாட்டிற்கெதிரான அனைத்துலக உடன்படிக்கை 1981

6) சித்தரவதை மற்றும் பிற வகையான கொடுமைகள், மனிதாபிமானமற்ற, கீழ்த்தரமான நடவடிக்கைகள் அல்லது தண்டனைகளுக்கெதிரான அனைத்துலக உடன்படிக்கை 1987

7) சிறார் உரிமைகள் குறித்த அனைத்துலக உடன்படிக்கை 1990

8) உடல் அங்கவீனர்களின் உரிமைகள் குறித்த அனைத்துலக உடன்படிக்கை 2008

மேற்குறிப்பிட்ட எட்டுவிதமான உடன்படிக்கைகளில், மலேசியா ஐந்தாவது மற்றும் ஏழாவது உடன்படிக்கைகளை மட்டுமே கையெழுத்திட்டு ஏற்றுக் கொண்டுள்ளது. பிற மொழி பாதுகாப்பு குறித்த இரண்டாவது உடன்படிக்கையில் இதுவரை மலேசியா கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். நம் நாட்டின் சில மனித உரிமை இயக்கங்கள் இரண்டாவது உடன்படிக்கையில் கையெழுத்திட அரசாங்கத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், இதுவரையில் அம்னோ அரசாங்கம் திட்டமிட்டு மௌனம் சாதித்து வருகிறது.

ஒருவேளை இரண்டாவது உடன்படிக்கையில் கையெழுத்திட்டால் அம்னோ அரசாங்கம் எதிர்நோக்கவிருக்கும் பாதிப்பு என்ன? புதிய பொருளாதாரக் கொள்கையின்வழி அம்னோ அரசாங்கம் அமுல்படுத்திவரும் பக்கச்சார்பான தேசியக் கொள்கைகளையும், மலாய் மேலாண்மைக் கோட்பாட்டையும் பிற இனங்களுக்கெதிரான பாராபட்சமானக் கொள்கைகள் என .நா மன்றம் கருதி, மலேசியாவை இனவாத நாடு என முத்திரை குத்தி அழுத்தம் கொடுக்கும் அபாயத்தை அறிந்தே அம்னோ அரசாங்கம் அவ்வுடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை.

இனவாதக் கொள்கைகளை வெளிப்படையாகவே திட்டமிட்டு அரங்கேற்றிவரும் அம்னோ அரசாங்கத்திடமிருந்து தாய்மொழியைப் பாதுகாப்பது எப்படி? உண்மையிலேயே இந்த சூழ்நிலையில் தாய்மொழியை நிரந்தரமாகப் பாதுகாக்க முடியுமா?

மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை விவகாரமாகட்டும், .சு.பி.எம் தமிழ் இலக்கிய தேர்வு பாட விவகாரமாகட்டும் இந்திய சமூக,அரசியல் இயக்கங்களிடமிருந்து நிச்சயமாக கண்டனங்கள் எழும் என்பதனை அம்னோ அரசாங்கம் அறிந்தே வைத்திருக்கின்றது. இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், சமூக, அரசியல் இயக்கங்கள் எதிர்வினைகளை தாம் நினைத்ததுபோலவே ஆற்ற வேண்டும் என்பதுதான் அம்னோவின் திட்டம். வழக்கம்போலவே அடிப்படை உரிமைகள் விவகாரங்களில் அனைத்து சமூக, அரசியல் இயக்கங்களும் தத்தம் போராட்டங்களை அம்னோ அரசாங்கம் எதிர்ப்பார்த்ததைப்போலத்தான் நடத்தி வருகிறார்கள், இனியும் வருவார்கள் என்பதுதான் அம்னோ அரசாங்கத்தின் நம்பிக்கை.

உதாரணத்திற்கு இந்திய ஆய்வியல் துறையை எடுத்துக் கொள்வோம். அத்துறையில் ஏற்பட்ட உட்பூசலை மையப்படுத்தி, துறையின் பெயரையும் நோக்கத்தினையும் மாற்றப் போவதாய் ஒரு நாடகம் காட்டியது அம்னோ அரசாங்கம். உடனே, இந்திய சமூக, அரசியல் இயக்கங்கள் ஒன்றிணைந்து குரலெழுப்பியதும் அத்துறை பழைய நிலைமையிலேயே விடப்பட்டது. நிச்சயமாக காப்பாற்றப்படவில்லை! மீண்டும் அதே நிலைமையிலேயேதான் விடப்பட்டுள்ளது. ஆனால், மறுநாளே ஊடகங்களில் இந்திய ஆய்வியல் துறை காப்பாற்றப்பட்டுவிட்டதாகவும், சமூக அரசியல் கட்சிகளின் ஒருமித்த வெற்றி எனவும் தம்பட்டம் அடித்ததை படித்திருக்கிறோம். 53 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் இந்திய ஆய்வியல் துறையின் தரத்தை மேம்படுத்தும் வகையில், கூடுதல் மானியங்களை கொடுத்து மொழி,சமூக,சமய ஆராய்ச்சிகள் போன்றவற்றை மேற்கொள்ள வைத்து, அதன்வழி அடிமட்ட சமுதாய அங்கத்தினர் பலனடையும் வகையில் முயற்சிகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அதனை வெற்றி, முன்னேற்றம் என்று கூறலாம். ஆனால், பிடுங்குவதைப் போல் பிடுங்கி, பின் மீண்டும் அதே நிலைமையில் நம் கையில் இந்திய ஆய்வியல் துறையை ஒப்படைத்திருக்கிறார்கள். அதைத்தான் வெற்றி என்று நீங்கள் கூற விரும்புகிறீர்களா?

எசு.பி.எம் தேர்வில் 10 பாடங்களை குறைப்பதன் மூலம் தமிழ் இலக்கியம் பாதிக்கப்படும் என்று அரசாங்கத்திற்குத் தெரியாதா என்ன? நிச்சயமாகத் தெரியும்! அவர்கள் எதிர்ப்பார்ப்பது நம்முடைய எதிர்வினையையும், அதன்பின் மக்களிடம் தோன்றும் தற்காலிக திருப்தியும்தான். அதற்காகவே தன் பிடியில் இருக்கும் சில அங்கத்துவ அரசியல் கட்சிகளை கைப்பாவையாகப் பயன்படுத்தி இதுபோன்ற நாடகங்களை அரங்கேற்றுகிறது அம்னோ அரசாங்கம். இதன்வழி அக்கட்சிகளுக்கு சுயவிளம்பரம் ஊடகங்களின்வழி கிடைக்கிறது. தினசரி நாளிதழ்களில் இந்த கைப்பாவைகளின் அறிக்கைகளைப் படித்துப் பார்த்தாலே நமக்குத் தெரியும். இருந்ததை இருந்த இடத்திலேயே வைத்ததற்கு சமுதாயத் தலைவர்கள் என்று கூறிக் கொள்ளும் சிலருக்கு பாராட்டு மழைகள் பொழியும். மலேசிய இந்திய சமுதாயம் அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி சிந்திக்காமல், தொடர்ந்து அடிப்படை பிரச்சனைகள் குறித்தே தனது நேரத்தையும், சக்தியையும் செலவழிக்க வேண்டும் என்பதே அம்னோ அரசாங்கத்தின் விருப்பமுமாகும். ஆங்கிலத்தில் கூறினால், “They keep on making us busy on the ground level”. இதனை நாம் சிந்தித்துப் பார்ப்பதில்லை! சமூக, அரசியல் இயக்கங்கள் சிந்தித்து பார்க்க விடுவதுமில்லை.

அடிப்படையில் அம்னோ அரசாங்கத்தின் இனவாதக் கொள்கைகளை எதிர்த்து கேள்வி கேட்பதற்கு நம் சமுதாயத்திடம் அரசியல் பலம் இல்லை என்பதுதான் உண்மை.

நாம் செய்ய வேண்டியது என்ன?

நம் சமுதாயம் எதிர்நோக்கிவரும் அடிப்படை உரிமைப் பிரச்சனைகள் களைய வேண்டுமென்றால், நாட்டின் திட்டமிட்ட இனவாத தேசியக் கொள்கைகள் மற்றும் மலாய் மேலாண்மை கோட்பாட்டைப் பற்றி நம் சமூக இயக்கங்கள் கேள்வி எழுப்ப வேண்டும். வெறுமனே ஒவ்வொரு பிரச்சனைக்கும் தற்காலிக தீர்வு காண்பதிலேயே நமது சக்தியையும் நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருந்தால் வேர் அங்குதான் இருக்கும் ; கிளைகளைத்தான் நாம் நிரந்தரமாக மேய்ந்துக் கொண்டிருப்போம். இதற்கு ஒரு தீர்வு என்றுமே கிடைக்காது. எனவே ஆணிவேரை நோக்கி சமூக அரசியல் இயக்கங்கள் தைரியமாக குரலெழுப்ப வேண்டும். அரசு ஊடகங்களை விடுத்து நாமே மாற்று ஊடகமாக மாற வேண்டும்.

எதிர்வரும் 12-ஆம் தேதி திசம்பரன்று தோட்ட மாளிகையில் நடைப்பெறும் கண்டனக் கூட்டத்தில் பங்கு பெறும் அனைத்து சமூக அரசியல் இயக்கங்களும் தற்காலிக தீர்வுகளுக்கு வழி காணாமல், அடிப்படை உரிமைகள் இனி பறிக்கப்படாது எத்தகைய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சிந்தித்து ஆக்கப்பூர்வமாக செயல்படுவது முக்கியம்.

மலேசிய இந்திய சமுதாயம் தனது அடுத்தக் கட்ட நகர்வினைப் பற்றி சிந்தித்து, இழந்த உரிமைகளையும், கிடைக்கவேண்டிய உரிமைகளையும் தட்டிக் கேட்பதற்கான திராணியை வளர்த்துக் கொள்ளாதவரை நாடகம் தொடர்ந்து அரங்கேறி வரும். ஆனால், தீர்வுதான் பிறக்காது!

வாழ்க தமிழ் மொழி

போராட்டம் தொடரும்

Advertisements

உரிமைக்காக அடம்பிடிப்பது தவறா?

ஜூலை 17, 2009

மலேசியா இன்று இணையதளத்தில் இன்று வெளியான ஒரு கடிதத்தை கீழே இணைத்துள்ளேன். அக்கடிதம் குறித்த எனது சில கேள்விகளையும் கீழே பதிவிட்டுள்ளேன்.

***

கம்போங் புவா பாலா குடியிருப்பாளர்களில் சிலர் அடம்பிடிக்கிறார்கள்

கடிதம்-Dr Vijaya Bharath

கடந்த சில வாரங்களாக கம்போங் புவா பாலா விவகாரம் தொடர்பாக பல்வேறு நிகழ்வுகளைக் கண்டு வருகிறோம். கோ சு கூன் தலைமையில் முந்தைய அரசு, குறிப்பிட்ட ஒரு கட்சியைச் சேர்ந்த ஒரு சிலரின் நன்மையை முன்னிட்டு தங்களை வஞ்சித்து விட்டதை எண்ணி கிராமவாசிகள் ஆத்திரம் கொண்டார்கள்.

அதன்பின்னர், முந்தைய அரசைக் குறைகூறும் இந்தப் போக்கு, பி.உதயகுமார் உள்பட சில மூன்றாம் தரப்பினரின் தூண்டுதலின் விளைவாக நடப்பு அரசைக் குறை சொல்லும் போக்காக மெல்லமெல்ல மாற்றம் கண்டிருப்பதையும் பார்க்கிறோம்.

இசாவிலிருந்து விடுதலையாகி வந்ததிலிருந்து உதயகுமார் அம்னோவைக் குறைசொல்வதை விட்டுவிட்டார். முதலமைச்சர் நினைத்தால் கிராமவாசிகளின் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண முடியும் என்று கூறி தாம் சட்டம் அறியாதவர் என்பதை அவர் வெளிப்படையாகக் காண்பித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் அவர் அறியாமல் சொல்லவில்லை என்றும் அது, பக்காத்தானுக்கு ஆதரவாகவுள்ள இந்தியர்களிடம் வேண்டுமென்றே ஆத்திரமூட்டி தம் புதிய கட்சிக்கு, பாகாமுக்கு, உறுப்பினர்களைச் சேர்க்கும் ஒரு தந்திரம் என்றும் சிலர் கருதுகிறார்கள்.

அவரின் சகோதரர் பி.வேதமூர்த்திக்கு, மலேசியாவுக்குத் திரும்பும் துணிச்சல் இன்னும் வரவில்லை.

10,000 மலேசிய இந்தியர்களைத் திரட்டி ஜசெக அலுவலகங்களுக்கு எதிரில் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக அவர் விடுத்த மிரட்டல் பிசுபிசுத்துப் போனதால் சங்கடத்துக்கு ஆளான அவர் இப்போது முதலமைச்சரிடம் மகஜர் வழங்க மனைவியையும் பிள்ளையையும் அனுப்பி வைக்கிறார்.

கிராமவாசிகள் இருக்கிறார்களே, அவர்களில் எல்லாருமே தர்மவான்கள் அல்லர். அவர்களில் சிலர், பினாங்கு பக்காத்தானை மிரட்டி அடிபணிய வைக்கும் நோக்கில், இவ்விவகாரத்தை இனரீதியான ஒன்றாக திரித்துக் கூறுகிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப் பிரதிநிதிகள், அந்தக் கிராமத்துச் சென்று கிராமவாசிகளைச் சந்தித்து அவர்களின் உணர்வுகளையும் கருத்துகளையும் அறிந்துகொள்ள முற்பட்டபோது முந்தைய அரசாங்கம் செய்த தவறுகளுக்கு இவர்கள் குறைகூறப்பட்டார்கள், பழித்துரைக்கப்பட்டார்கள். அதே நேரத்தில் முந்தைய அரசின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எவரும் ஒருமுறையேனும் கிராமத்துக்கு வருகை புரிந்ததில்லை என்ற உண்மையைக் கிராமவாசிகள் மறந்துவிட்டார்கள்.

மேம்பாட்டாளரிடம் ரிம90,000-க்குப் பதிலாக ரிம200,000 இழப்பீடு வழங்குமாறு வலியுறுத்தப்போவதாக முதல்வர் கூறியபோது, அதற்குக் கைமாறாக கிராமவாசிகள் என்ன செய்தார்கள்முதல்வர் பதவி விலகி மலாக்காவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கூறினார்கள்.

முதல்வர் மனம் விட்டுப் பேசலாம் என்று அழைப்பு விடுத்தபோது கிராமவாசிகள் என்ன செய்தார்கள். சுலோகங்கள் எழுதிய அறிவிப்புப் பலகையை ஏந்தி வந்தார்கள். பேச்சுகளில் மூன்றாம் தரப்பினர் கலந்துகொள்வதை முதல்வர் விரும்பாதபோது கலந்துரையாடலே வேண்டாம் என்று கூறி அவர்கள் கலைந்து சென்று விட்டனர்.

அதன்பின்னர், குடியிருப்பாளர் சங்கத் தலைவர் எம்.சுகுமாறன், முதல் அமைச்சரைச் சந்தித்து நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார் என்பதை அறிந்ததும் வீம்புகொண்ட கிராமவாசிகளில் சிலர், குறிப்பாக சி.தர்மராஜும், ஜே.ஸ்டீபனும் அவரைக் குறைகூறினர். இரண்டாவது முறை சந்தித்துப்பேச முதல்வர் விடுத்த அழைப்பையும் அவர்க்கள் ஏற்க மறுத்தனர்.

இப்படிப்பட்ட செயல்களெல்லாம் நிற்க வேண்டும்.

நியாய உணர்வுடன் அப்பாவி கிராமமக்களுக்கு இழப்பிடு வழங்கப்பட வேண்டும். அருகிலேயே ஒரு நிலத்தைஆடுமாடு வளர்ப்புக்கு வசதியுள்ளதாகஅவர்களுக்கு வழங்கலாம். முடிந்தால், அவர்களைத் திருப்திபடுத்தும் வகையில் இந்திய கிராமியத் தன்மைகள் நிரம்பியதாகவும் அதைக் கட்டிக்காத்து வரலாம்.

அதே நேரத்தில், முதல்வரைச் சந்திக்க மறுப்பதுடன் அந்த நிலத்தை மாநில அரசு கையகப்படுத்த நினைத்தால் அதற்காக ரிம 300 மில்லியனைச் செலுத்த வேண்டுமே என்பதைப் பற்றிக் கவலையும் படாத மற்றவர்களைப் பொருத்தவரை அவர்களின் வீடுகளை அம்னோவுடன் தொடர்புகொண்ட நூஸ்மெட்ரோ நிறுவனம் இடித்துத் தள்ளட்டும். அதன்வழி அவர்கள் பாடம் கற்கட்டும்.

பினாங்கில் உள்ள மற்றவர்கள் பற்றிக் கவலைப்படாமல் பினாங்கு அரசின் நலனைப் பற்றிக் கவலப்படாமல் கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமவாசிகளில் சிலர் அடம்பிடிக்கிறார்களே அப்படிச் செய்தால் என்ன ஆகும் என்பதை நினைத்துப் பார்த்தார்களா? நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்தற்காக அரசே கலைக்கப்படலாம்.

இவ்விவகாரத்தில், மாநில அரசு உயர்ந்த விலை கொடுத்து அந்நிலத்தைக் கையகப்படுத்த வேண்டுமா என்று பினாங்கு ஜசெக வலைத்தளத்தில் நடத்தப்படும் கருத்துக்கணிப்பில் கலந்துகொள்வோரில் 87 விழுக்காட்டினர் என் கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன்.

*******************************************************

முதலில் இப்படியொரு வெக்கங்கெட்ட அறிக்கையை வெளியிட்ட விஜய பரத்திற்கு எனது கண்டனங்கள்!

இவ்வறிக்கையில் விஜய பரத் கிராம மக்களின் அடிப்படை எதிர்பார்ப்புகளுக்கு விடைகொடுக்க முனையவில்லை, மாறாக இண்ட்ராஃபை தாக்கியே ஆக வேண்டும் எனும் நோக்கத்தில் எழுதியுள்ளார்.

முதலில், இவ்விவகாரத்தில் இண்ட்ராஃபை தவிர்த்து, ‘ஜெரிட்’, ‘சுவாராம்’, மலேசிய சோசியலிச கட்சி என பல தரப்பினர் பாரிசானின் துரோகத்தையும் பக்காதானின் உண்மை முகமூடியையும் கிழி கிழியென கிழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்! இவ்விடயத்தில் இண்ட்ராபின் மீது மட்டும் எதற்கு உங்களுக்கு தேவையில்லாத காழ்ப்பு?!

மக்களின் நிலத்தை சட்டவிரோதமாக அபகரித்தது பாரிசான் அரசாங்கம்தான் என பலருக்கும் தெரியும். அதனை மீண்டும் மீண்டும் நீங்கள் விளக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், பக்காதான் பினாங்கில் ஆட்சியிலமர்ந்து 20 நாட்களுக்குப் பிறகுதான் நிலம் மேம்பாட்டாளர்களிடம் கைமாறியிருக்கிறது! அதுவும் பாக்காதான் அரசின் முழு அனுமதியோடு! இது எப்படி நடந்தது? இந்த கேள்விக்கு இன்றுவரையில் பக்காதானிடமிருந்து பதிலே கிடைக்கவில்லை.

மார்ச் 8 தேர்தலுக்கு முன்பு, பினாங்கு பக்காதான் தலைவர்கள் புவா பாலா கிராமத்தில் வாய் கிழிய வாக்குறுதிகள் கொடுத்தார்களே? அவர்களில் பலர் சட்டம் அறிந்தவர்களாயிற்றே! நிலத்தை கையகப்படுத்த முடியாது என்றால் அதனை அப்பொழுதே மக்களிடம் கூறியிருக்கலாமே! கூட்டரசு நீதிமன்ற தீர்ப்பை மாற்ற முடியாது என அப்பொழுதே ஒப்பித்திருக்கலாமே? தேர்தல் சமயம், கிராம நிலம் மக்களுக்குத்தான் சொந்தம், நிலமோசடியை அம்பலப்படுத்துவோம்! எங்கள் பிணத்தை தாண்டித்தான் நில மேம்பாட்டாளர்கள் இங்கு காலடி எடுத்து வைக்க முடியும்! என்றெல்லாம் கோஷமிட்டவர்கள் இன்று தலைக்கீழாக பேசுவதைத்தான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை! அதுவும், தெரிந்தே அந்நிலத்தை மேம்பாட்டாளரிடம் விற்க அனுமதித்த பாக்காதான் அரசாங்கத்தை கண்டிக்காமல் என்ன செய்வது?

தொட்டதெற்கெல்லாம் இண்ட்ராஃப் ஏற்படுத்திய மாபெரும் மக்கள் சக்தி அலையை மூச்சுக்கு முன்னூறு தடவை சொன்ன இவர்களுக்கு இன்று இண்ட்ராஃபின் பெயரைக் கேட்டால் கசக்கிறதோ? உண்மை சில நேரங்களில் கசக்கத் தானே செய்யும்!

பினாங்கு ஜனநாயக செயல் கட்சியின் தளத்தில் ஓட்டு கேட்டு மலிவு விளம்பரம் தேட முனையும் விஜய பரத்திடம் சில கேள்விகள் கேட்க வேண்டும்.

1) கிராம மக்களுடன் மனம்விட்டுப் பேச வேண்டும் என்றும், அழைப்பு விடுத்தால் வர மறுக்கிறார்கள் என கிராமவாசிகளின்மீது குற்றத்தை சுமத்திய லிம் குவான் எங், ஏன் கடந்த 30ம் திகதி சூன் மாதமன்று ஒட்டுமொத்த கிராமமும் கொம்தாருக்கு வந்தபொழுது சந்திக்கவில்லையாம்? இரவுவரை அங்கேயே காத்திருந்த மக்களை இறுதிவரை சந்திக்காத அவருக்கு அப்படி என்ன முக்கியமான வேலை இருந்தது?

2) மார்ச்27, பக்காதான் ஆட்சியிலிருந்த சமயம் ஏன் புவா பாலா நிலம் மேம்பாட்டாளருக்கு முழுமையாக கைமாற்றப்பட்டது? அதன் பின்ணனி என்ன?

3) சட்டம் அறிந்தவர்களோடுதான் முதலமைச்சரை சந்திப்போம் என வேண்டுகோள் விடுக்கும் கிராம மக்களுக்கு ஏன் அனுமதி மறுத்தளிக்கப்படுகிறது?

4) தொடக்கத்தில் ரி.90,000 மட்டுமே நஷ்ட ஈடாக மக்களுக்கு கொடுப்பதாக மக்களிடமே அறிவித்துவிட்டு, ஊடகங்களில் இரண்டு லட்சத்திற்கும் நஷ்ட ஈடு கொடுக்க மக்களுடன் பேரம் பேசியதாக பொய்யுரை பரப்பியது ஏன்?

5) 23 வீடுகளில் மொத்தம் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கூட்டுக் குடும்பம் எனும் ரீதியில் வசித்து வருகின்றனர். ஒரு வீட்டிற்கு ரி. 2 லட்சம் மட்டுமே கொடுக்கப்படும் என அறிவித்தவர்கள் ஏனைய குடும்பத்தினருக்கு என்ன பதில் கூறவிருக்கின்றனர்?

6) புக்கிட் சீனா பாரம்பரிய கிராமத்திற்காக போராடிய லிம் குவான் எங், ஏன் பினாங்கின் கடைசி இந்தியர் பாரம்பரிய கிராமத்தை தக்க வைப்பதற்கான உரிய நடவடிக்கையை 15 மாதங்களுக்கு முன்பே எடுக்கவில்லை? காலம் கடத்தியது எதற்கு?

7) நில மோசடி என அப்பட்டமாக தெரிந்தும், நில ஆர்ஜித சட்டத்தையும் Section 116,1(d) (National Land Code section 76)யும் பயன்படுத்தி ஏன் நிலத்தை கையகப்படுத்தவில்லை?

8) மாறாக ஏன் தொடர்ந்துநில மேம்பாடாளர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்என்பதையே ஊடகங்களில் பெரிதுபடுத்தி லிம் குவான் எங் பேசுகின்றார். சட்ட ரீதியில் மேம்பாடாளர்களுக்கு சல்லி காசு கொடுக்க வேண்டியதில்லை! காரணம், நிலம் ஏமாற்றி விற்கப்பட்டதற்கான ஆதாரம் (Documentary Evidence) நிரம்ப உண்டு! ஏன் பாக்காதான் இவ்விடயத்தில் வாளாவிருக்கிறது?

9) இப்பொழுது மட்டும் கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவை தலையில் தூக்கிக் கொண்டு ஆடும் பாக்காதான், ஒரு காலத்தில் எத்தனை முறை நீதிமன்ற முடிவுகள் குறித்து தங்களின் அதிருப்திகளை தெரிவித்திருப்பார்கள்! அதேப்போன்று ஏன் கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவை ஒத்திவைப்பதற்கு சட்ட வல்லுநர்களை பயன்படுத்தவில்லை இந்த பக்காதான்? நீதிமன்ற முடிவை ஒத்திவைத்து மேலும் நில மோசடி தொடர்பான விசாரணையை தொடரலாமே? முடியாதா என்ன?

10) அம்னோவுடன் தொடர்புகொண்ட நுஸ்மெட்ரோ வெஞ்சூர்ஸ் எனும் நிறுவனத்தின் முக்கிய புள்ளி, பினாங்கில் 4 மில்லியன் செலவில் குறிப்பிட்ட ஒரு கட்சியின் தலைமையகக் கட்டிடத்தை கட்டிக் கொடுக்க சம்மதம் அளித்துள்ளதாகவும், அதனால்தான் பக்காதான் வாயை மூடிக்கொண்டிருக்கிறது எனவும் சில வதந்திகள் பரவுகின்றனவே, அது உண்மையா?

11) ஹெலன் மார்கிரேட் பிரவுன் இந்நிலத்தை அங்குள்ள மக்களிடம் கொடுத்து (Strait Settlement ) அரசாங்கத்தை Trustee-யாக வைத்துவிட்டுச் சென்றார். மலாயா சுதந்திரம் அடைந்ததும் நீரிணை மாநில அரசுகளின் சொத்துகள் முறையே மத்திய அரசாங்கத்தையே சாரும். இவ்விடயத்தில்புவா பாலாநிலத்திற்கு முறையே மத்திய அரசாங்கம்தான் ‘Trustee’. மாநில அரசு இந்நிலத்தை மத்திய அரசிடமிருந்து பெற்றுக் கொண்டதற்கான ‘Documentary Evidence” எதுவும் இல்லாத பட்சத்தில் மாநில அரசு எப்படிபுவா பாலாநிலத்தை அம்மக்களுக்கே தெரியாமல்கோப்பராசிக்கும்’, கோப்பராசியிடமிருந்து நுஸ்மெட்ரோவிற்கும் கைமாற்றியது?’ இவ்விவகாரத்தில் முறையே பாரிசானும் பக்காதானும் சம்பந்தப்பட்டிருக்கின்றன. ஏன், இந்நிலமோசடி குறித்து பக்காதான் ஆட்சிக்கு வந்தவுடன் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை? ஏன் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யவில்லை?

12) தொடர்ந்தாற்போல் மேம்பாட்டாளருக்கு ஆதரவாகவே இருந்துவரும் பாக்காதானிடம் இறுதியாக ஒரு கேள்வி, பாக்காதான் ராக்யாட் மேம்பாட்டாளருக்கு நண்பனா? அல்லது மக்களுக்கு நண்பனா?

விஜய பரத் முதலில் இக்கேள்விகளுக்கு முறையாக பதிலளிக்கட்டும். ஓட்டு பொறுக்குவதை பின்பு பார்த்துக் கொள்ளலாம். மக்களுக்கு சட்டம் தெரியாது என்ற இறுமாப்பில் பாரிசானும் பாக்காதானும் மேம்பாட்டாளர்களுடன் இணைந்துகொண்டு என்னென்ன ஆட்டம் ஆடுகிறார்கள் பாருங்கள்!

பரிந்துரை : அவசியம் படிக்க வேண்டிய கட்டுரைகள்

What are the options now for the PR Government on the Kampong Buah Pala issue?

Guan Eng on Buah Pala and Bukit Cina – see any difference

போராட்டம் தொடரும்…


நண்பர் கலையரசுவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..

மே 7, 2009
பலநாட்களாக நோய்வாப்பட்டிருந்த நண்பர் கலையரசுவின் தாயார் இன்று காலையில் இயற்கை எய்தினார். இவ்வேளையில் நண்பர் கலையரசுவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர் கலையரசு எனக்கு 2007-ஆம் ஆண்டில் இணையம் மூலம் அறிமுகமானார். மலாக்காவில் நடைப்பெறும் இண்ட்ராஃப் மக்கள் சக்தி நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் தனது ஒளிப்படக்கருவியில் பதிவு செய்து ஓலைச்சுவடிக்கு அனுப்பியவர். அவரை ஓலைச்சுவடி நிருபர் எனவே எனது பதிவுகளில் குறிப்பிட்டுவந்தேன்.

வலதுபுறம் நிற்பவர் : நண்பர் கலையரசு

நண்பரை முதன்முதலாக பிப்ரவரி 16 இண்ட்ராஃப் பேரணியின்போது சந்தித்தேன். அப்பேரணிக்குச் செல்லும்வழியில் நெடுஞ்சாலை கட்டண சாவடியில் காவல்த்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுபுலாபோல்மையத்திற்கு கலையரசு அனுப்பப்பட்டார். அவருடன் வந்திருந்த மலாக்கா இண்ட்ராஃப் மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் திரு.கிருஷ்ணன் புடு சிறைக்கு அனுப்பப்பட்டார்.

இடப்புறம் நிற்பவர் : நண்பர் கலையரசு

தொடர்ந்து பல போராட்டங்களில் பங்கெடுத்த நண்பர் கலையின் உதவிகளை இவ்வேளையில் நினைத்துப் பார்க்கிறேன்.

நண்பரே, மனதைத் திடப்படுத்துங்கள்! ஒவ்வொரு மனிதனும் கடந்தாக வேண்டிய ஓர் அனுபவம்தான் இது! மேலும் நீங்கள் சாதிக்க வேண்டிய விடயங்கள் நிறைய உண்டு!”

அன்னாரின் ஆத்துமா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கிறேன்.


நண்பர் கலையரசுவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..

மே 7, 2009
பலநாட்களாக நோய்வாப்பட்டிருந்த நண்பர் கலையரசுவின் தாயார் இன்று காலையில் இயற்கை எய்தினார். இவ்வேளையில் நண்பர் கலையரசுவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர் கலையரசு எனக்கு 2007-ஆம் ஆண்டில் இணையம் மூலம் அறிமுகமானார். மலாக்காவில் நடைப்பெறும் இண்ட்ராஃப் மக்கள் சக்தி நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் தனது ஒளிப்படக்கருவியில் பதிவு செய்து ஓலைச்சுவடிக்கு அனுப்பியவர். அவரை ஓலைச்சுவடி நிருபர் எனவே எனது பதிவுகளில் குறிப்பிட்டுவந்தேன்.

வலதுபுறம் நிற்பவர் : நண்பர் கலையரசு

நண்பரை முதன்முதலாக பிப்ரவரி 16 இண்ட்ராஃப் பேரணியின்போது சந்தித்தேன். அப்பேரணிக்குச் செல்லும்வழியில் நெடுஞ்சாலை கட்டண சாவடியில் காவல்த்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுபுலாபோல்மையத்திற்கு கலையரசு அனுப்பப்பட்டார். அவருடன் வந்திருந்த மலாக்கா இண்ட்ராஃப் மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் திரு.கிருஷ்ணன் புடு சிறைக்கு அனுப்பப்பட்டார்.

இடப்புறம் நிற்பவர் : நண்பர் கலையரசு

தொடர்ந்து பல போராட்டங்களில் பங்கெடுத்த நண்பர் கலையின் உதவிகளை இவ்வேளையில் நினைத்துப் பார்க்கிறேன்.

நண்பரே, மனதைத் திடப்படுத்துங்கள்! ஒவ்வொரு மனிதனும் கடந்தாக வேண்டிய ஓர் அனுபவம்தான் இது! மேலும் நீங்கள் சாதிக்க வேண்டிய விடயங்கள் நிறைய உண்டு!”

அன்னாரின் ஆத்துமா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கிறேன்.


தீவிரவாதப் பட்டியலில் சுனாமி!

திசெம்பர் 26, 2008

சுனாமியால் வீடிழந்த மக்கள்
அரசாங்கத்தின் கருணைப் பார்வை
கடலோரத்தில் புதிய குடியிருப்பு..!?

***

மீனவனின் இழவு வீடு
கரையொதுங்கிய மீன்கள் ஒப்பாரி..??

***

குடிசையிழந்த பிள்ளைகள்
வாரி இறைத்த சேற்று மணலில்
புதிய மணற்கோட்டை!

***

சாட்சி சொல்லாது
வழக்கு போடாது
காமுகனின் காமப் பசிக்கு
நிர்வாணப் பிணங்கள்..!!

***

தாயின் கலவரம்
சேயின் ஆரவாரம்
மேலெழுந்த அலையைக் கண்டு

***

பஞ்சம் தலைவிரித்தாடிய தேசத்தில்
உலக நிவாரணப் பணியாளர்கள்
சுனாமி கொண்டு வந்த உதவி!

***

பூமித்தட்டில் பிளவு
உலக மக்கள் ஒற்றுமை
சுனாமியன்று!

***

கடலுக்குள் சென்ற மீனவன்
திரும்பவில்லை!
மீன்கள் சிக்கிய வலை
கரையோரத்தில்..

***

அதிநவீனக் கருவிகள்
தொழில்நுட்ப மாந்தர்கள்
மிருங்கள் கூட்டம் கூட்டமாய் ஓட
பின்னாலே இவர்கள்!

***

மீன்குழம்பு கொதிக்க
இறக்கி வைக்க மறந்தேனே..
பூமித்தாயின் நீலிக்கண்ணீர்!

***

கஞ்சிக்கு வழியில்லை
வந்தது சுனா(மீ)
நிவாரண முகாமில்
கிடைத்ததுமேகி மீ‘..

***

நிர்வாணக் குழந்தைகள்
ஆடைகளுக்கு கையேந்த
நிவாரணக் குழு கைவிரிக்க..
சூரையாடல் அரங்கேற்றம்..!

***

கடலலை விரித்தப் பாயிலே
உறங்கிய மனிதர்கள்
விடிந்தும் எழவில்லை!
பாய் மட்டும் சுருட்டிக் கொண்டது!

***

3 லட்சம் உயிர்களைக் கொன்ற
சுனாமி‘!
தீவிரவாதப் பட்டியலில்

***

மூழ்கடிக்கப்படுகிறது
கவிஞனின் மனம்
சுனாமி கவிதையால்..

***

கடற்கரையில் ஒரு கவிஞன்
தன்னை மறந்த நிலையில்
பின்னால்,
சுனாமி வருவதுகூட தெரியாமல்..

***

வேற்றுமை..

சுனாமியொரு சாபம்
ஹைக்கூவொரு வரம்

ஒற்றுமை..

இரண்டுமே
(Made in Japan)
சப்பான் நாட்டு தயாரிப்பு!

3 லட்சம் உயிர்களை கடலோடு கரைத்த சுனாமியைப் பற்றிய எனது உளறல்கள்.. பிழையிருப்பின் பொறுத்தருளவும்!

சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்பதிவினை சமர்ப்பிக்கிறேன்..


தீவிரவாதப் பட்டியலில் சுனாமி!

திசெம்பர் 26, 2008

சுனாமியால் வீடிழந்த மக்கள்
அரசாங்கத்தின் கருணைப் பார்வை
கடலோரத்தில் புதிய குடியிருப்பு..!?

***

மீனவனின் இழவு வீடு
கரையொதுங்கிய மீன்கள் ஒப்பாரி..??

***

குடிசையிழந்த பிள்ளைகள்
வாரி இறைத்த சேற்று மணலில்
புதிய மணற்கோட்டை!

***

சாட்சி சொல்லாது
வழக்கு போடாது
காமுகனின் காமப் பசிக்கு
நிர்வாணப் பிணங்கள்..!!

***

தாயின் கலவரம்
சேயின் ஆரவாரம்
மேலெழுந்த அலையைக் கண்டு

***

பஞ்சம் தலைவிரித்தாடிய தேசத்தில்
உலக நிவாரணப் பணியாளர்கள்
சுனாமி கொண்டு வந்த உதவி!

***

பூமித்தட்டில் பிளவு
உலக மக்கள் ஒற்றுமை
சுனாமியன்று!

***

கடலுக்குள் சென்ற மீனவன்
திரும்பவில்லை!
மீன்கள் சிக்கிய வலை
கரையோரத்தில்..

***

அதிநவீனக் கருவிகள்
தொழில்நுட்ப மாந்தர்கள்
மிருங்கள் கூட்டம் கூட்டமாய் ஓட
பின்னாலே இவர்கள்!

***

மீன்குழம்பு கொதிக்க
இறக்கி வைக்க மறந்தேனே..
பூமித்தாயின் நீலிக்கண்ணீர்!

***

கஞ்சிக்கு வழியில்லை
வந்தது சுனா(மீ)
நிவாரண முகாமில்
கிடைத்ததுமேகி மீ‘..

***

நிர்வாணக் குழந்தைகள்
ஆடைகளுக்கு கையேந்த
நிவாரணக் குழு கைவிரிக்க..
சூரையாடல் அரங்கேற்றம்..!

***

கடலலை விரித்தப் பாயிலே
உறங்கிய மனிதர்கள்
விடிந்தும் எழவில்லை!
பாய் மட்டும் சுருட்டிக் கொண்டது!

***

3 லட்சம் உயிர்களைக் கொன்ற
சுனாமி‘!
தீவிரவாதப் பட்டியலில்

***

மூழ்கடிக்கப்படுகிறது
கவிஞனின் மனம்
சுனாமி கவிதையால்..

***

கடற்கரையில் ஒரு கவிஞன்
தன்னை மறந்த நிலையில்
பின்னால்,
சுனாமி வருவதுகூட தெரியாமல்..

***

வேற்றுமை..

சுனாமியொரு சாபம்
ஹைக்கூவொரு வரம்

ஒற்றுமை..

இரண்டுமே
(Made in Japan)
சப்பான் நாட்டு தயாரிப்பு!

3 லட்சம் உயிர்களை கடலோடு கரைத்த சுனாமியைப் பற்றிய எனது உளறல்கள்.. பிழையிருப்பின் பொறுத்தருளவும்!

சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்பதிவினை சமர்ப்பிக்கிறேன்..


தீபாவளி விளம்பரப் படக்காட்சி

ஒக்ரோபர் 26, 2008


(இரு தினங்களுக்கு முன்பு திரு.வேலுமணி வெங்கடாசலம் என்ற வாசகரொருவர் ஓலைச்சுவடிக்கு மின்னஞ்சல் விடுத்திருந்தார். அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இப்பதிவு இங்கு இடம்பெறுகிறது)

ஈப்போவில் வானூர்தி பயிற்சிக் கூடத்தில் பணிப்புரியும் ஓர் ஏழைத் தொழிலாளியின் கதையிது. அத்தொழிலாளி பணிப்புரியும் இடத்தில் கூடவே சுற்றிவரும் அவனுடைய சின்னஞ்சிறு மகன் அங்கு காணும் சிறுரக வானூர்திகளைக் கண்டு அதனைத் தானும் இயக்க வேண்டும் என்று ஆசைகளை வளர்த்துக் கொள்கிறான். மகனின் ஆசையைப் பூர்த்தி செய்து அவனை எதிர்காலத்தில் ஒரு விமானியாக்கிப் பார்க்க வேண்டுமென்று கடுமையாக உழைக்கிறான் அத்தொழிலாளி.

அத்தொழிலாளி தன் மகனுக்காக ஒரு போலி வானூர்தியை வாங்கிக் கொடுப்பதற்கு கடுமையாக உழைப்பதைக் கண்டு வியக்கும் மேலதிகாரி “நீ காலம் முழுவதும் வேலைச் செய்தாலும் உன்னால் இந்த விமான இறக்கைகளை மட்டும்தான் வாங்க முடியும்” என்று அறிவுரைகள் கூறுகிறார். “என்னால் வானூர்தியை வாங்கிக் கொடுக்க முடியாவிட்டாலும் என் மகனுக்கு வானூர்த்தி நுட்பங்கள் அடங்கிய புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பேன்” என்று நம்பிக்கையோடு கூறுகிறான்.

அத்தொழிலாளியின் கம்பத்து வீட்டிலோ, அவனின் அன்பான மனைவி தன் மகனின் எதிர்காலக் கனவு விதைகளுக்கு நீரூற்றி பாதுகாக்கும் ஓர் அன்புத் தாயாக விளங்குகிறாள். போலி வானூர்தியை செய்வது குறித்த ஒரு புத்தகத்தை கொடுத்து மறுநாளே தன் மகன் ஒரு விமானத்தைச் செய்து பறக்க விட்டதைக் கண்டு பெற்றோர்கள் பூரித்து அவனோடு சேர்ந்து விளையாடியக் காலங்கள் ஒரு கனாக்காலமாகின்றது.

வருடங்கள் பல உருண்டோடுகின்றன..

சிறுவன் இளங்காளையாகிறான், தன் லட்சியக் கனவை நிறைவேற்றப் படிப்பில் தீவிரமாகிறான். அப்பொழுதும் அவனின் தந்தையானவர் கடுமையாக உழைப்பதை நிறுத்தவில்லை.

அந்த ஏழைத் தொழிலாளியின் உழைப்பும், தாயின் பராமரிப்பும், அவ்விளைஞனின் தன்னம்பிக்கையும் ஒன்றுசேர்ந்து அவனை ஓர் விமானியாக்குகின்றன. முதன் முதலாக வானூர்த்தியை இயக்கச் செல்வதற்குமுன் தன் தாயிடம் ஆசீர்வாதம் பெறுகிறான். ஆனால், அச்சமயம் அத்தாயின் அருகில் நின்று அவனை ஆசீர்வதிக்க அந்த ஏழைத் தொழிலாளி இல்லை. காலத்திற்கு என்றோ அவன் பதில் கூறிவிட்டான்.

தாயின் ஆசிகளோடும் மனதில் உவகையோடும் தன் கனவை நிறைவேற்ற வானூர்த்தி பயிற்சிக் கூடத்திற்குச் செல்கிறான். அங்கு அவனைக் கண்ட மேலதிகாரியின் உதடுகள் அவன் தந்தையின் சேவையை முணுமுணுக்கின்றன.

“நீ சொன்னதுபோல் உன் மகனுக்கு இறக்கைகளைக் கொடுத்துவிட்டாய்..”

இவ்வருட தீபாவளி திருநாளையொட்டி எடுக்கப்பட்ட ‘பெட்ரோனாசின்’ காணொளி விளம்பரம்தான் மேற்கூறியக் கதை. வருடா வருடம் சமயப் பெருநாட்களுக்கான விளம்பரங்களைச் சிறப்பாகப் படைத்து வரும் இந்நிறுவனம், இவ்வருடமும் புதியதொரு கதையம்சத்துடன், மிகுந்த பொருட்செலவில் உறவுகளை மையப்படுத்தி தீபாவளியின் மகத்துவத்தை மூன்று நிமிடங்களில் எடுத்துக்கூற முயற்சித்திருக்கிறது.

இவ்விளம்பரத்தை பலர் பார்த்திருக்கலாம், சிலர் பார்க்காமல் இருக்கலாம்..
இதோ உங்களுக்காக அவ்விளம்பரப் படக்காட்சி..

இவ்விளம்பரம் குறித்து பலரின் கருத்துகள் திரட்டப்பட்டன. பலர் இவ்விளம்பரத்தைக் கண்டு நெகிழ்ந்திருப்பதாகக் கூறினர். கதைக்கரு அமைந்த விதம் பலரின் மனங்களை நெகிழ வைத்திருப்பதில் சந்தேகமில்லை. ஆனால் நெகிழவைத்தது மட்டுமல்லாமல் இனிவரும் காலங்களில் பெட்ரோனாசின் விளம்பரங்கள் ஒரு சமுதாயதித்தின் உண்மை நிலைமையினை உள்ளதுபோல் படம் பிடித்துக் காட்ட வேண்டும் என்பதால் சில கருத்துகளை முன்வைக்கிறேன்.

1.மொழி

தீபாவளித் திருநாளைக் கருப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இவ்விளம்பரப் படக்காட்சியில் ஒரு தமிழர் குடும்பத்தை முன்னிலைப்படுத்தி காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. இதில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள் தமிழிலேயே உரையாடி இருக்கலாமே, மொழி புரியாதவர்களுக்காக வேண்டுமானால் ஆங்கிலம்/மலாய் மொழிகளில் வரிகளைக் கீழே ஓடவிட்டிருக்கலாம். ‘அம்மா’, ‘அப்பா’, ‘மச்சான்’ என்ற இம்மூன்று தமிழ் வார்த்தைகள் மட்டும்தான் அவ்விளம்பரத்தில் இடம்பெற்றிருந்தன. தன் இளையச் சகோதரியை மணந்துக் கொண்டவனை அழைக்க வேண்டிய உறவுப் பெயர் ‘மச்சான்’ என்பது. தேவையில்லாமல் மேலதிகாரியொருவர் தனக்குக்கீழ் பணிப்புரியும் ஒரு தொழிலாளியைப் பார்த்து ‘மச்சான்’ என்று அழைக்கிறார். நடைமுறையில் பலர் தன் நண்பர்களை ‘மச்சான்’ போட்டுக் கூப்பிடுவது வழக்கமாக இருந்தாலும், பிற இனத்தவர் அல்லது தமிழர்கள் தமிழர்களை சகட்டுமேனிக்கு ‘மச்சான்’ என்று அழைக்கும் கலாச்சாரத்தை இங்கு வலியுறுத்தக்கூடாது என்பது என் கருத்து. இனிமேல் தமிழர்கள் தொடர்பான விளம்பரப்படங்களில் தமிழுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். இவ்விளம்பரப்படத்தில் கதாபாத்திரங்களை தமிழில் உரையாட வைத்திருந்தால் காட்சிகள் இயல்பு நிலையை எட்டியிருக்கும் என்பது என் கருத்து.

2.கதாபாத்திரங்கள்

இவ்விளம்பரத்தில் சொல்லவரும் கருத்துகளுக்கும், சூழ்நிலைகளுக்கேற்றாற்போலும் கதாபாத்திரங்கள் ஒன்றியிருத்தல் அவசியமாகிறது. ஏழ்மையின் விளிம்பில் வாழ்க்கை நடத்தும் ஒரு குடும்பம் எப்படி திரையில் காட்டப்பட்டிருக்க வேண்டும்? விளம்பரத்தில் பெண் வேடம் பூண்டிருக்கும் பெண்மணி ஏதோ ஒரு பொருளின் விளம்பரத் தாரகையாகத்தான் தென்படுகிறார். தந்தை, அரும்பு மீசைக் கொண்ட இளைஞன், விமானியாக வலம் வரும் இளைஞன் போன்ற கதாபாத்திரங்கள் சூழ்நிலைகளுக்கேற்ப ஒன்றவில்லை. விளம்பரத்தின் இறுதிக்கட்டத்தில் யாரோ ஒரு ஆணழகன் சைக்கிளில் உலா செல்வதுபோல் உள்ளது. விமானியாகத் தேர்வாகிவிட்டாராம், ஆனால் சைக்கிளில் செல்கிறாராம்.

3.தனித்தன்மை

விளம்பரத்திற்கு தேர்வு செய்யப்பட்ட தமிழர்கள் கதாபாத்திரம் முற்றிலும் பொருந்தாது போவதற்கு முக்கியக் காரணம் அக்கதாபாத்திரங்கள் வெளிக்கொணராதத் தனித்தன்மைதான். தமிழன் என்றால் எப்படி இருப்பான்? அதிலும் ஏழைத் தமிழன் எப்படி இருப்பான்? என்று சற்று சிந்தித்து நிச காட்சிகளைத் திரையில் கொண்டுவர அதற்கேற்ற கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். மலேசிய விளம்பரங்களில் பெரும்பாலானவை சிவப்புத் தோல் கொண்டவர்களுக்குத்தான் முன்னுரிமை வழங்கி வருவது நாம் நிதர்சனத்தில் கண்டுவரும் ஓர் உண்மையாகும். கருப்புத் தோல் என்றாலே கேவலம் என்று தமிழர்களே நினைக்கும் அளவுக்கு காலனித்துவமும் மேற்கத்திய நவநாகரீகமும் நம்மை மாற்றி விட்டிருக்கிறது. இவ்விளம்பரத்தை பொறுத்தமட்டில் கருப்பு தோல் கொண்ட தமிழனை திரைமுன் காட்டியிருந்தால் கதாபாத்திரங்கள் உயிர்ப்பெற்றிருக்கும். முக்கால்வாசி மலேசியத் தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய கறுப்புத் தோலைத்தான் கொண்டிருக்கின்றனர். அடுத்தமுறை தமிழர்களைப் பிரதிபலிக்கும் எந்தவொரு விளம்பரமானாலும் சரி, கறுப்புத்தோலுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். காரணம் அது தமிழனோடு பிறந்த ஒரு சொத்து.

4.பல்லினக் கலவை

மலேசியச் சூழலில் பெருநாளையொட்டி வெளிவரும் விளம்பரப் படக்காட்சிகளில் பல்லின மக்களின் கலவை இருப்பது அவசியமாகிறது. இவ்விளம்பரப்படக்காட்சியில் மூவினமும் பிரதிபலிக்கப்படுகின்றனவா என்பது தெளிவாக இல்லை. சீனர்களும் தமிழர்களும் இருப்பதுபோல் தென்படுகிறது. மேலதிகாரியை மலாய்க்காரர் என்று ஏற்றுக் கொள்வதா அல்லது சீனர் என்று ஏற்றுக் கொள்வதா என்றே தெரியவில்லை.

மேற்கூறிய சில விடயங்களில் விளம்பர நிறுவனம் சற்று கவனம் செலுத்தியிருந்தால் இது மறக்க முடியாத ஒரு விளம்பரமாகத் திகழ்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
“வாழ்வில் எவ்வளவு தடைகள் வந்தாலும், தன்னம்பிக்கையும்,பகுத்தறிவும், அளவுகடந்த பாசமும் இருப்பின் நாம் இறக்கை விரித்துப் பறக்க அது வழிக்கோலும்” எனும் கருப்பொருளில் நல்லதொரு கதையமைப்புடனும் ஒளிப்பதிவுடனும் உருப்பெற்றிருக்கும் இவ்விளம்பரம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே.

இனிவரும் காலங்களில் விளம்பர நிறுவனங்கள் தமிழ் மொழிக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று நாம் வலியுறுத்துவோமாக.

இவ்விடயம் குறித்து பதிவிடக் கோரிய திரு. வேலுமணி வெங்கடாசலம் அவர்களுக்கு நன்றிகள்.