புவா பாலா மாட்டுக் கொட்டகை, கிணறு உடைப்பு ! – பி.ப சங்கம் கேள்வி எழுப்புகிறது

ஒக்ரோபர் 20, 2009

பத்திரிகை செய்தி (1)
15.10.2009

கம்போங் புவா பாலா

புவா பாலா கிராமத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் தாங்கள் தினமும் பினாங்கு மாநிலத்தில் உள்ள பசும்பால் குடிக்கும் பயனீட்டாளர்களுக்கு வழங்கிவந்த பசும்பாலை தொடர்ந்து வழங்க முடியுமா என்ற அச்சத்தில் இருக்கின்றார்கள் என்று தெரிவிக்கின்றது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்.

இந்த புவா பாலா கிராமத்தில் சுமார் 100 ஆண்டு காலமாக மிகப்பெரிய மாட்டுக்கொட்டகையை வைத்திருக்கின்ற இந்த 3 சகோதரர்களான சிவானந்தம், முருகன், சுப்பிரமணியம் ஆகியோருக்குச் சொந்தமான மாட்டுக்கொட்டகையின் ஒரு பகுதியை புவா பாலா கிராமத்தில் மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ளவிருக்கும் மேம்பாட்டாளர் உடைத்ததன் காரணமாக இந்த அச்சம் ஏற்பட்டிருப்பதாக பி..சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.

கடந்த புதன்கிழமை வரை இந்த சகோதரர்களுக்குச் சொந்தமான 150 மாடுகள் தினமும் 300 லிட்டர் பசும்பாலை கொடுத்து வந்தன. ஆனால் நேற்று மேம்பாட்டாளர் திடீரென்று மாட்டுக்கொட்டகையின் ஒரு பகுதியை உடைத்துத் தரைமட்டமாக்கியதால் திகிலும் பயமும் அடைந்த கறவைமாடுகள் 300 லிட்டர் பால் கொடுப்பதற்குப் பதிலாக 140 லிட்டர் பாலையே கொடுத்ததாக சிவானந்தம் பி..சங்கத்திடம் தனது மனக்குமுறலைக் கொட்டியதாக சுப்பாராவ் மேலும் கூறினார்.

ஏற்கெனவே வீடுகளை உடைத்த மேம்பாட்டாளர் இப்பொழுது திடீரென்று எந்த வித முன்னறிவிப்பும் இன்றி மாட்டுக்கொட்டகையை உடைத்தது மிகப்பெரிய தவறு என அவர் கூறினார்.

திரு சிவாவும் அவருடைய சகோதரர்களும் பிரிதொரு இடத்தில் மாட்டுக்கொட்டகையை கட்டிக்கொள்வதற்கு இரண்டு வாரம் காலக்கெட்டு கேட்டிருந்தார்கள். ஆனால் அதற்கும் மேம்பாட்டாளர் சம்மதிக்காமல் திடீரென்று மாட்டுக்கொட்டகையை உடைத்தது இந்தக் கால்நடைகள் மீது கருணை இல்லாததையே காட்டுகின்றது என்றார் அவர்.

இப்பொழுது இந்த மாட்டுக்கொட்டகையிலிருக்கும் மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் கறவை மாடுகள் கொடுக்கின்ற 300 லிட்டர் பால் இப்பொழுது 150 லிட்டர் பாலாக குறைந்திருக்கின்றது. இது மேலும் குறையக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் அச்சகோதரர்கள் பி..சங்கத்திடம் கூறியதாக சுப்பாராவ் கூறினார்.

தங்களின் வருமானத்தை இழந்துள்ள இச்சகோதரர்களுக்கு மாநில அரசாங்கம் கட்டாயமாக நிதி உதவி செய்து தர வேண்டும் என்றும் என்.வி.சுப்பாராவ் கேட்டுக்கொண்டார்.

பத்திரிகை செய்தி (2)
15.10.2009

200 ஆண்டு கால கிணறு மூடப்படுகின்றது

படத்தில் காணப்படும் கிணறுதான் சுமார் 200 ஆண்டு காலமாக இந்த கம்போங் புவா பாலா கிராமத்தில் இருக்கின்றது. ஒரு காலத்தில் பினாங்கு மாநிலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது இக்கிராமத்தில் இருக்கும் சுமார் இதே போன்ற 10 கிணறுகளிலிருந்துதான் பினாங்கு மக்களுக்கு இக்கிராமத்திலிருந்து தண்ணீர் வழங்கப்பட்டிருக்கின்றது.

கே.டி.சிவானந்தம் என்பவரின் மாட்டுக் கொட்டகையிலிருக்கும் இந்தக் கிணறு இப்பொழுது மேம்பாட்டாளரின் அராஜகப் போக்கினால் எந்த நேரத்திலும் மூடப்படக்கூடிய சூழ்நிலையில் இருக்கின்றது. சிவானந்தம் தன் மாட்டுக் கொட்டகையில் இருக்கும் 150 மாடுகளுக்கும் 50 ஆடுகளுக்கும் இந்தக் கிணற்றிலிருந்தான் தண்ணீர் எடுத்துப் பயன்படுத்துகிறார்.

இந்தக் கிணற்றிலிருந்து சுமார் 50 லிட்டர் தண்ணீர் ஒரு தடவை எடுக்கப்பட்ட அடுத்த ஐந்தே நிமிடங்களிலேயே அந்தக் கிணற்றில் 50 லிட்டர் தண்ணீர் ஊறிவிடும். இந்தக் காட்சியை நாம் நேரடியாகப் பார்க்கும்பொழுதுதான் இந்த புவா பலா கிராமத்தில் எவ்வாறு கிணறுகளில் தண்ணீர் தேங்கிக்கிடக்கிறது என்ற உண்மை தெரிகிறது.

இந்த நீரின் சுவையே வித்தியாசமாக இருக்கிறது. இப்பொழுது இந்தக் கிணற்றை மேம்பாட்டாளர் மூடவிருப்பதால் சிவானந்தத்தின் 150 மாடுகளுக்கும் 50 ஆடுகளுக்கும் எங்கேயிருந்து அவர் தண்ணீர் எடுக்கப்போகின்றார் என்பதுதான் பெரிய கேள்வி.

பினாங்கு பயனீட்டாளர் சங்கத்திலும் தனது மனக்குறையை திரு சிவானந்தம் பகிர்ந்துகொண்டார்.

என்.வி.சுப்பாராவ்
கல்வி அதிகாரி

Advertisements

உரிமைக்காக அடம்பிடிப்பது தவறா?

ஜூலை 17, 2009

மலேசியா இன்று இணையதளத்தில் இன்று வெளியான ஒரு கடிதத்தை கீழே இணைத்துள்ளேன். அக்கடிதம் குறித்த எனது சில கேள்விகளையும் கீழே பதிவிட்டுள்ளேன்.

***

கம்போங் புவா பாலா குடியிருப்பாளர்களில் சிலர் அடம்பிடிக்கிறார்கள்

கடிதம்-Dr Vijaya Bharath

கடந்த சில வாரங்களாக கம்போங் புவா பாலா விவகாரம் தொடர்பாக பல்வேறு நிகழ்வுகளைக் கண்டு வருகிறோம். கோ சு கூன் தலைமையில் முந்தைய அரசு, குறிப்பிட்ட ஒரு கட்சியைச் சேர்ந்த ஒரு சிலரின் நன்மையை முன்னிட்டு தங்களை வஞ்சித்து விட்டதை எண்ணி கிராமவாசிகள் ஆத்திரம் கொண்டார்கள்.

அதன்பின்னர், முந்தைய அரசைக் குறைகூறும் இந்தப் போக்கு, பி.உதயகுமார் உள்பட சில மூன்றாம் தரப்பினரின் தூண்டுதலின் விளைவாக நடப்பு அரசைக் குறை சொல்லும் போக்காக மெல்லமெல்ல மாற்றம் கண்டிருப்பதையும் பார்க்கிறோம்.

இசாவிலிருந்து விடுதலையாகி வந்ததிலிருந்து உதயகுமார் அம்னோவைக் குறைசொல்வதை விட்டுவிட்டார். முதலமைச்சர் நினைத்தால் கிராமவாசிகளின் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண முடியும் என்று கூறி தாம் சட்டம் அறியாதவர் என்பதை அவர் வெளிப்படையாகக் காண்பித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் அவர் அறியாமல் சொல்லவில்லை என்றும் அது, பக்காத்தானுக்கு ஆதரவாகவுள்ள இந்தியர்களிடம் வேண்டுமென்றே ஆத்திரமூட்டி தம் புதிய கட்சிக்கு, பாகாமுக்கு, உறுப்பினர்களைச் சேர்க்கும் ஒரு தந்திரம் என்றும் சிலர் கருதுகிறார்கள்.

அவரின் சகோதரர் பி.வேதமூர்த்திக்கு, மலேசியாவுக்குத் திரும்பும் துணிச்சல் இன்னும் வரவில்லை.

10,000 மலேசிய இந்தியர்களைத் திரட்டி ஜசெக அலுவலகங்களுக்கு எதிரில் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக அவர் விடுத்த மிரட்டல் பிசுபிசுத்துப் போனதால் சங்கடத்துக்கு ஆளான அவர் இப்போது முதலமைச்சரிடம் மகஜர் வழங்க மனைவியையும் பிள்ளையையும் அனுப்பி வைக்கிறார்.

கிராமவாசிகள் இருக்கிறார்களே, அவர்களில் எல்லாருமே தர்மவான்கள் அல்லர். அவர்களில் சிலர், பினாங்கு பக்காத்தானை மிரட்டி அடிபணிய வைக்கும் நோக்கில், இவ்விவகாரத்தை இனரீதியான ஒன்றாக திரித்துக் கூறுகிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப் பிரதிநிதிகள், அந்தக் கிராமத்துச் சென்று கிராமவாசிகளைச் சந்தித்து அவர்களின் உணர்வுகளையும் கருத்துகளையும் அறிந்துகொள்ள முற்பட்டபோது முந்தைய அரசாங்கம் செய்த தவறுகளுக்கு இவர்கள் குறைகூறப்பட்டார்கள், பழித்துரைக்கப்பட்டார்கள். அதே நேரத்தில் முந்தைய அரசின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எவரும் ஒருமுறையேனும் கிராமத்துக்கு வருகை புரிந்ததில்லை என்ற உண்மையைக் கிராமவாசிகள் மறந்துவிட்டார்கள்.

மேம்பாட்டாளரிடம் ரிம90,000-க்குப் பதிலாக ரிம200,000 இழப்பீடு வழங்குமாறு வலியுறுத்தப்போவதாக முதல்வர் கூறியபோது, அதற்குக் கைமாறாக கிராமவாசிகள் என்ன செய்தார்கள்முதல்வர் பதவி விலகி மலாக்காவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கூறினார்கள்.

முதல்வர் மனம் விட்டுப் பேசலாம் என்று அழைப்பு விடுத்தபோது கிராமவாசிகள் என்ன செய்தார்கள். சுலோகங்கள் எழுதிய அறிவிப்புப் பலகையை ஏந்தி வந்தார்கள். பேச்சுகளில் மூன்றாம் தரப்பினர் கலந்துகொள்வதை முதல்வர் விரும்பாதபோது கலந்துரையாடலே வேண்டாம் என்று கூறி அவர்கள் கலைந்து சென்று விட்டனர்.

அதன்பின்னர், குடியிருப்பாளர் சங்கத் தலைவர் எம்.சுகுமாறன், முதல் அமைச்சரைச் சந்தித்து நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார் என்பதை அறிந்ததும் வீம்புகொண்ட கிராமவாசிகளில் சிலர், குறிப்பாக சி.தர்மராஜும், ஜே.ஸ்டீபனும் அவரைக் குறைகூறினர். இரண்டாவது முறை சந்தித்துப்பேச முதல்வர் விடுத்த அழைப்பையும் அவர்க்கள் ஏற்க மறுத்தனர்.

இப்படிப்பட்ட செயல்களெல்லாம் நிற்க வேண்டும்.

நியாய உணர்வுடன் அப்பாவி கிராமமக்களுக்கு இழப்பிடு வழங்கப்பட வேண்டும். அருகிலேயே ஒரு நிலத்தைஆடுமாடு வளர்ப்புக்கு வசதியுள்ளதாகஅவர்களுக்கு வழங்கலாம். முடிந்தால், அவர்களைத் திருப்திபடுத்தும் வகையில் இந்திய கிராமியத் தன்மைகள் நிரம்பியதாகவும் அதைக் கட்டிக்காத்து வரலாம்.

அதே நேரத்தில், முதல்வரைச் சந்திக்க மறுப்பதுடன் அந்த நிலத்தை மாநில அரசு கையகப்படுத்த நினைத்தால் அதற்காக ரிம 300 மில்லியனைச் செலுத்த வேண்டுமே என்பதைப் பற்றிக் கவலையும் படாத மற்றவர்களைப் பொருத்தவரை அவர்களின் வீடுகளை அம்னோவுடன் தொடர்புகொண்ட நூஸ்மெட்ரோ நிறுவனம் இடித்துத் தள்ளட்டும். அதன்வழி அவர்கள் பாடம் கற்கட்டும்.

பினாங்கில் உள்ள மற்றவர்கள் பற்றிக் கவலைப்படாமல் பினாங்கு அரசின் நலனைப் பற்றிக் கவலப்படாமல் கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமவாசிகளில் சிலர் அடம்பிடிக்கிறார்களே அப்படிச் செய்தால் என்ன ஆகும் என்பதை நினைத்துப் பார்த்தார்களா? நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்தற்காக அரசே கலைக்கப்படலாம்.

இவ்விவகாரத்தில், மாநில அரசு உயர்ந்த விலை கொடுத்து அந்நிலத்தைக் கையகப்படுத்த வேண்டுமா என்று பினாங்கு ஜசெக வலைத்தளத்தில் நடத்தப்படும் கருத்துக்கணிப்பில் கலந்துகொள்வோரில் 87 விழுக்காட்டினர் என் கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன்.

*******************************************************

முதலில் இப்படியொரு வெக்கங்கெட்ட அறிக்கையை வெளியிட்ட விஜய பரத்திற்கு எனது கண்டனங்கள்!

இவ்வறிக்கையில் விஜய பரத் கிராம மக்களின் அடிப்படை எதிர்பார்ப்புகளுக்கு விடைகொடுக்க முனையவில்லை, மாறாக இண்ட்ராஃபை தாக்கியே ஆக வேண்டும் எனும் நோக்கத்தில் எழுதியுள்ளார்.

முதலில், இவ்விவகாரத்தில் இண்ட்ராஃபை தவிர்த்து, ‘ஜெரிட்’, ‘சுவாராம்’, மலேசிய சோசியலிச கட்சி என பல தரப்பினர் பாரிசானின் துரோகத்தையும் பக்காதானின் உண்மை முகமூடியையும் கிழி கிழியென கிழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்! இவ்விடயத்தில் இண்ட்ராபின் மீது மட்டும் எதற்கு உங்களுக்கு தேவையில்லாத காழ்ப்பு?!

மக்களின் நிலத்தை சட்டவிரோதமாக அபகரித்தது பாரிசான் அரசாங்கம்தான் என பலருக்கும் தெரியும். அதனை மீண்டும் மீண்டும் நீங்கள் விளக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், பக்காதான் பினாங்கில் ஆட்சியிலமர்ந்து 20 நாட்களுக்குப் பிறகுதான் நிலம் மேம்பாட்டாளர்களிடம் கைமாறியிருக்கிறது! அதுவும் பாக்காதான் அரசின் முழு அனுமதியோடு! இது எப்படி நடந்தது? இந்த கேள்விக்கு இன்றுவரையில் பக்காதானிடமிருந்து பதிலே கிடைக்கவில்லை.

மார்ச் 8 தேர்தலுக்கு முன்பு, பினாங்கு பக்காதான் தலைவர்கள் புவா பாலா கிராமத்தில் வாய் கிழிய வாக்குறுதிகள் கொடுத்தார்களே? அவர்களில் பலர் சட்டம் அறிந்தவர்களாயிற்றே! நிலத்தை கையகப்படுத்த முடியாது என்றால் அதனை அப்பொழுதே மக்களிடம் கூறியிருக்கலாமே! கூட்டரசு நீதிமன்ற தீர்ப்பை மாற்ற முடியாது என அப்பொழுதே ஒப்பித்திருக்கலாமே? தேர்தல் சமயம், கிராம நிலம் மக்களுக்குத்தான் சொந்தம், நிலமோசடியை அம்பலப்படுத்துவோம்! எங்கள் பிணத்தை தாண்டித்தான் நில மேம்பாட்டாளர்கள் இங்கு காலடி எடுத்து வைக்க முடியும்! என்றெல்லாம் கோஷமிட்டவர்கள் இன்று தலைக்கீழாக பேசுவதைத்தான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை! அதுவும், தெரிந்தே அந்நிலத்தை மேம்பாட்டாளரிடம் விற்க அனுமதித்த பாக்காதான் அரசாங்கத்தை கண்டிக்காமல் என்ன செய்வது?

தொட்டதெற்கெல்லாம் இண்ட்ராஃப் ஏற்படுத்திய மாபெரும் மக்கள் சக்தி அலையை மூச்சுக்கு முன்னூறு தடவை சொன்ன இவர்களுக்கு இன்று இண்ட்ராஃபின் பெயரைக் கேட்டால் கசக்கிறதோ? உண்மை சில நேரங்களில் கசக்கத் தானே செய்யும்!

பினாங்கு ஜனநாயக செயல் கட்சியின் தளத்தில் ஓட்டு கேட்டு மலிவு விளம்பரம் தேட முனையும் விஜய பரத்திடம் சில கேள்விகள் கேட்க வேண்டும்.

1) கிராம மக்களுடன் மனம்விட்டுப் பேச வேண்டும் என்றும், அழைப்பு விடுத்தால் வர மறுக்கிறார்கள் என கிராமவாசிகளின்மீது குற்றத்தை சுமத்திய லிம் குவான் எங், ஏன் கடந்த 30ம் திகதி சூன் மாதமன்று ஒட்டுமொத்த கிராமமும் கொம்தாருக்கு வந்தபொழுது சந்திக்கவில்லையாம்? இரவுவரை அங்கேயே காத்திருந்த மக்களை இறுதிவரை சந்திக்காத அவருக்கு அப்படி என்ன முக்கியமான வேலை இருந்தது?

2) மார்ச்27, பக்காதான் ஆட்சியிலிருந்த சமயம் ஏன் புவா பாலா நிலம் மேம்பாட்டாளருக்கு முழுமையாக கைமாற்றப்பட்டது? அதன் பின்ணனி என்ன?

3) சட்டம் அறிந்தவர்களோடுதான் முதலமைச்சரை சந்திப்போம் என வேண்டுகோள் விடுக்கும் கிராம மக்களுக்கு ஏன் அனுமதி மறுத்தளிக்கப்படுகிறது?

4) தொடக்கத்தில் ரி.90,000 மட்டுமே நஷ்ட ஈடாக மக்களுக்கு கொடுப்பதாக மக்களிடமே அறிவித்துவிட்டு, ஊடகங்களில் இரண்டு லட்சத்திற்கும் நஷ்ட ஈடு கொடுக்க மக்களுடன் பேரம் பேசியதாக பொய்யுரை பரப்பியது ஏன்?

5) 23 வீடுகளில் மொத்தம் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கூட்டுக் குடும்பம் எனும் ரீதியில் வசித்து வருகின்றனர். ஒரு வீட்டிற்கு ரி. 2 லட்சம் மட்டுமே கொடுக்கப்படும் என அறிவித்தவர்கள் ஏனைய குடும்பத்தினருக்கு என்ன பதில் கூறவிருக்கின்றனர்?

6) புக்கிட் சீனா பாரம்பரிய கிராமத்திற்காக போராடிய லிம் குவான் எங், ஏன் பினாங்கின் கடைசி இந்தியர் பாரம்பரிய கிராமத்தை தக்க வைப்பதற்கான உரிய நடவடிக்கையை 15 மாதங்களுக்கு முன்பே எடுக்கவில்லை? காலம் கடத்தியது எதற்கு?

7) நில மோசடி என அப்பட்டமாக தெரிந்தும், நில ஆர்ஜித சட்டத்தையும் Section 116,1(d) (National Land Code section 76)யும் பயன்படுத்தி ஏன் நிலத்தை கையகப்படுத்தவில்லை?

8) மாறாக ஏன் தொடர்ந்துநில மேம்பாடாளர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்என்பதையே ஊடகங்களில் பெரிதுபடுத்தி லிம் குவான் எங் பேசுகின்றார். சட்ட ரீதியில் மேம்பாடாளர்களுக்கு சல்லி காசு கொடுக்க வேண்டியதில்லை! காரணம், நிலம் ஏமாற்றி விற்கப்பட்டதற்கான ஆதாரம் (Documentary Evidence) நிரம்ப உண்டு! ஏன் பாக்காதான் இவ்விடயத்தில் வாளாவிருக்கிறது?

9) இப்பொழுது மட்டும் கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவை தலையில் தூக்கிக் கொண்டு ஆடும் பாக்காதான், ஒரு காலத்தில் எத்தனை முறை நீதிமன்ற முடிவுகள் குறித்து தங்களின் அதிருப்திகளை தெரிவித்திருப்பார்கள்! அதேப்போன்று ஏன் கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவை ஒத்திவைப்பதற்கு சட்ட வல்லுநர்களை பயன்படுத்தவில்லை இந்த பக்காதான்? நீதிமன்ற முடிவை ஒத்திவைத்து மேலும் நில மோசடி தொடர்பான விசாரணையை தொடரலாமே? முடியாதா என்ன?

10) அம்னோவுடன் தொடர்புகொண்ட நுஸ்மெட்ரோ வெஞ்சூர்ஸ் எனும் நிறுவனத்தின் முக்கிய புள்ளி, பினாங்கில் 4 மில்லியன் செலவில் குறிப்பிட்ட ஒரு கட்சியின் தலைமையகக் கட்டிடத்தை கட்டிக் கொடுக்க சம்மதம் அளித்துள்ளதாகவும், அதனால்தான் பக்காதான் வாயை மூடிக்கொண்டிருக்கிறது எனவும் சில வதந்திகள் பரவுகின்றனவே, அது உண்மையா?

11) ஹெலன் மார்கிரேட் பிரவுன் இந்நிலத்தை அங்குள்ள மக்களிடம் கொடுத்து (Strait Settlement ) அரசாங்கத்தை Trustee-யாக வைத்துவிட்டுச் சென்றார். மலாயா சுதந்திரம் அடைந்ததும் நீரிணை மாநில அரசுகளின் சொத்துகள் முறையே மத்திய அரசாங்கத்தையே சாரும். இவ்விடயத்தில்புவா பாலாநிலத்திற்கு முறையே மத்திய அரசாங்கம்தான் ‘Trustee’. மாநில அரசு இந்நிலத்தை மத்திய அரசிடமிருந்து பெற்றுக் கொண்டதற்கான ‘Documentary Evidence” எதுவும் இல்லாத பட்சத்தில் மாநில அரசு எப்படிபுவா பாலாநிலத்தை அம்மக்களுக்கே தெரியாமல்கோப்பராசிக்கும்’, கோப்பராசியிடமிருந்து நுஸ்மெட்ரோவிற்கும் கைமாற்றியது?’ இவ்விவகாரத்தில் முறையே பாரிசானும் பக்காதானும் சம்பந்தப்பட்டிருக்கின்றன. ஏன், இந்நிலமோசடி குறித்து பக்காதான் ஆட்சிக்கு வந்தவுடன் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை? ஏன் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யவில்லை?

12) தொடர்ந்தாற்போல் மேம்பாட்டாளருக்கு ஆதரவாகவே இருந்துவரும் பாக்காதானிடம் இறுதியாக ஒரு கேள்வி, பாக்காதான் ராக்யாட் மேம்பாட்டாளருக்கு நண்பனா? அல்லது மக்களுக்கு நண்பனா?

விஜய பரத் முதலில் இக்கேள்விகளுக்கு முறையாக பதிலளிக்கட்டும். ஓட்டு பொறுக்குவதை பின்பு பார்த்துக் கொள்ளலாம். மக்களுக்கு சட்டம் தெரியாது என்ற இறுமாப்பில் பாரிசானும் பாக்காதானும் மேம்பாட்டாளர்களுடன் இணைந்துகொண்டு என்னென்ன ஆட்டம் ஆடுகிறார்கள் பாருங்கள்!

பரிந்துரை : அவசியம் படிக்க வேண்டிய கட்டுரைகள்

What are the options now for the PR Government on the Kampong Buah Pala issue?

Guan Eng on Buah Pala and Bukit Cina – see any difference

போராட்டம் தொடரும்…


நிலம் மக்களுக்கே சொந்தம்! – உதயகுமார்

ஜூலை 14, 2009
பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4

போராட்டம் தொடரும்


புவா பாலா மக்களின் மூன்று முக்கிய தீர்மானங்கள் என்ன? (காணொளி காட்சி)

ஜூலை 11, 2009
பாகங்கள் 1,2,3,4,5-ஐக் காண இணைப்பைச் சுட்டுங்கள் : இறுதிவரை லிம் குவான் எங் மக்களைச் சந்திக்கவில்லை! – காணொளி காட்சி

பாகம் 6
பாகம் 7
பாகம் 8
போராட்டம் தொடரும்..

இறுதிவரை லிம் குவான் எங் மக்களைச் சந்திக்கவில்லை! – காணொளி காட்சி

ஜூலை 3, 2009

”புவா பாலா கிராமத்தை உடைக்கக்கூடாது!” – இண்ட்ராஃப் மனு

ஜூலை 1, 2009
நேற்று 30/06/2009 காலை 10 மணியளவில் இண்ட்ராஃபினரும் புவா பாலா மக்களும் இணைந்து பினாங்கு மாநில அரசினிடம் மனு கொடுக்கச் சென்றுள்ளனர். திரு.வேதமூர்த்தியின் மகள் வைசுணவியும் புவா பாலா குழந்தைகளும் அம்மனுவை பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கின் அந்தரங்கச் செயலாளரிடம் ஒப்படைத்தனர். அந்நிகழ்வின் காணொளி காட்சி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அன்று மாலை 4 மணியளவில் நாடு தளுவிய அளவில் சனநாயக செயல் கட்சியின் மாநில தலைமை அலுவலகங்களின் முன்பு இண்ட்ராஃப் அமைதி மறியலில் இறங்கியது. ஈப்போ, பினாங்கு, சிரம்பான், பெட்டாலிங் செயா ஆகிய இடங்களில் சிறிய அளவில் இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் அமைதி மறியலில் ஈடுபட்டனர். பினாங்கு கொம்தார் கட்டிடத்தின் கீழ்தளத்தில் புவா பாலா மக்களும் இண்ட்ராஃப் ஆதரவாளர்களும் திரளாகத் திரண்டு மாலை 4 தொடங்கி இரவு 8 மணிவரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வமைதி போராட்டம் நடைப்பெற்ற இடத்திற்கு இறுதிவரை பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங்கும், மூன்றாவது துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமியும், பாதிக்கப்பட்ட பகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சனீசுவர நேதாசி இராயர், புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் கர்பால் சிங் மற்றும் பிற மக்கள் கூட்டணி இந்திய அரசியல் தலைவர்கள் யாரும் வருகைத் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அந்நிகழ்வின் காணொளி காட்சி அடுத்தப் பதிவில் வெளிவரும்..

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
அடுத்தப் பதிவில் மேலும் செய்திகள் விரிவாக..

போராட்டம் தொடரும்..


தமிழர்களின் பாரம்பரிய குடியிருப்பை சட்டவிரோதமாக கைப்பற்றி விற்ற அரசாங்கம்!

ஜூன் 30, 2009
சில காலமாகவே, புவா பாலா கிராம விவகாரம் தொடர்பாக பதிவிடலாம் என்ற எண்ணம் இருந்தது. இருப்பினும் முழுத் தகவல்களையும் சேகரிப்பதற்குள் நாட்களாகிவிட்டன. முதலாளித்துவமும் அதிகார வர்க்கமும் பினாங்கில் இந்தியர்களுக்கென இருந்துவந்த ஒரே பாரம்பரிய கிராம நிலத்தை சட்டவிரோதமாக அபகரித்த விதத்தைக் கேட்டால் நமக்கே கோபம் வரும். அம்னோ அரசாங்கத்தின் ஆட்சியில் கம்போங் புவா பாலா கிராமம் சட்டவிரோதமாக மூன்றாம் தரப்பினருக்கு கைமாற்றப்பட்டு இறுதியில் நில மேம்பாட்டாளர்களின் கையில் சிக்குண்டு இன்று அம்மக்களின் வாழ்வும், அவர்கள் காலங்காலமாக வளர்த்துவந்த ஆடு, மாடுகளின் கதியும் கேள்விக்குறியாக தொக்கி நிற்கின்றது.

வருகின்ற 2-ஆம் திகதி சூலை மாதம் வீடுகள் உடைப்படுவதற்கான காலக்கெடு. இனி அங்குள்ள மக்களும், இம்முறைக்கேட்டை தினமும் நாளிதழ், இணையங்களின்வழி படித்து, கண்டு அறிந்துகொள்பவர்களும் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள்?

இனி இதுபோன்று நடவாது நம்மையும் நம் நிலங்களையும் பாதுகாத்துக் கொள்ள நாம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறோம்?

இதற்கிடையில் இன்று காலை 10 மணியளவில் பினாங்கு கொம்தாருக்கு இண்ட்ராஃபினரும் வேதமூர்த்தியின் மகள் வைசுணவியும், மற்றும் புவா பாலா குழந்தைகளும் முதியோர்களும் மனு சமர்ப்பிக்க சென்றிருந்தனர். அம்மனுவை பினாங்கு முதல்வரின் அந்தரங்கச் செயலாளர் பெற்றுக் கொண்டுள்ளார். அதுபோக, இன்று மாலை 4 மணியளவில் கொம்தார் கட்டிடத்திற்கு கீழ் இண்ட்ராஃபினருடன் இணைந்து புவா பாலா கிராமவாசிகள் ஒன்று கூடவிருக்கின்றனர். சிலாங்கூர், கெடா, பேராக் ஆகிய மாநிலங்களிலிருந்து ஆதரவாளர்கள் ஒன்றுதிரளவிருக்கின்றனர். பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என இண்ட்ராஃபினர் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றனர்.

புவா பாலா கிராமவாசிகளிடம் பினாங்கு இண்ட்ராஃப் கண்டெடுத்த நேர்க்காணல் உங்கள் பார்வைக்கு..

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4

போராட்டம் தொடரும்…