உங்கள் வாக்குரிமையை பாதுகாக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள்

மே 25, 2011
Advertisements

>காணொளி : கெடா மாநில மனித உரிமைக் கட்சியின் செயலக திறப்புவிழா

ஜூலை 20, 2010

>

போராட்டம் தொடரும்…


சைட் இப்ராஹிமா அல்லது கமலநாதனா? – வாக்குறுதிகளை நிறைவேற்றும் வேட்பாளரையே தேர்ந்தெடுங்கள்

ஏப்ரல் 19, 2010

உலு சிலாங்கூர் வாக்காளர்களுக்கு மனித உரிமைகள் கட்சி வழங்கும் அறிவுரைவாக்குறுதிகளை நிறைவேற்றும் வேட்பாளருக்கு மட்டுமே வாக்களியுங்கள், வெற்று வாக்குறுதிகளை வழங்கும் வேட்பாளருக்கு வாக்களிக்காதீர்கள்

இவ்வாண்டிலேயே பல நம்பிக்கை வாக்குறுதிகள் அள்ளி வீசப்படும் காலமாக உலு சிலாங்கூர் நாடாளுமன்ற இடைத்தேர்தல் விளங்குகின்றது. இம்முறை உலு சிலாங்கூர் மக்கள் இருபக்க அரசியல் கட்சிகளிடமும் விவேகத்துடன் காயை நகர்த்திக்காட்ட வேண்டும். இல்லையெனில், வெற்று வாக்குறுதிகளையும் பொய்யான தேர்தல் பரப்புரைகளை மட்டுமே உலு சிலாங்கூர் மக்கள் பெறப்போவது உறுதி.

வாக்குறுதிகளை நிறைவேற்றும் வேட்பாளர்களுக்கே இந்திய வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும்.

அண்மையில் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் தனது வாராந்திர ஆட்சிக்குழு கூட்டத்தை முடித்துக் கொண்டு செய்தியாளர்களிடம் ஓர் அறிக்கை விடுத்திருந்தார். அதாவது அரசாங்க நிலங்களில் 15 வருடங்களாக வசித்துவரும் 1 லட்சம் புறம்போக்கு குடிசைவாசிகள் மற்றும், தற்காலிக குடியிருப்பு லைசென்ஸ் வைத்திருப்பவர்களுக்கு சிலாங்கூர் மாநில பக்காதான் அரசு நிலப்பட்டா வழங்கவுள்ளதாகவும், அதே சமயம் கூடிய விரைவில் சிலாங்கூர் மாநிலத்தில் நிலவிவரும் நிலம், வழிப்பாட்டுத் தளங்கள், பள்ளிகள் மற்றும் சாலைகள் குறித்த பிரச்சனைகளுக்கு மாநில பக்காதான் அரசு தீர்வு காணவிருப்பதாகவும் அவர் அறிவித்திருந்தார்.

நில விவகாரம் குறித்த வாக்குறுதியானது பக்காதான் மாநில மந்திரி புசாரின் வாக்குறுதியாகும்.

உண்மையிலேயே மலேசிய இந்திய ஏழைகளுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் யாதெனில், அவர்களது பெயரிலேயே சொந்த நிலப்பட்டாக்கள் கிடைக்கப்பெற வேண்டும், தேசியப் பள்ளிகளைப் போலவே தமிழ்ப்பள்ளிகள் அனைத்திற்கும் சொந்த நிலங்களும் நிலப்பட்டாக்களும் வழங்கப்படவேண்டும், வழிபாட்டுத் தளங்கள் உள்ள நிலங்கள் உள்ளபடியே மக்களுக்குச் சொந்தமாக்கப்பட வேண்டும். இவையனைத்தும் ஏப்ரல் 25-ஆம் தேதிக்குள் நடக்க வேண்டும். இதனைத் தவிர்த்து எடுக்கப்படும் வேறெந்த முடிவுகளும் நிச்சயம் மாற்றத்தினைக் கொண்டுவரப்போவதில்லை. இடைத்தேர்தலுக்குப்பின் வழக்கம்போல் நாம் காதால் கேட்டுப் புளித்துப்போன வெற்று வாக்குறுதிகள்தான் எஞ்சியிருக்கும்.

சாயிட் இப்ராஹிம் தயவு செய்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்

மலேசிய இந்தியர்களைப் பிரதிநிதித்து மனித உரிமைகள் கட்சி முன்வைக்கும் கோரிக்கைகள் நிறையவே உள்ளன. ஆனால், முதல் கோரிக்கையாக சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 97 தமிழ்ப் பள்ளிகளில் சொந்த நிலம் இல்லாத தமிழ்ப் பள்ளிகளுக்கு சொந்த நிலப்பட்டாக்களைக் கொடுங்கள். ஆனால் இதற்கு நாங்கள் காத்திருக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரிந்த ஒன்றே.

மஇகாவும் அம்னோவும் இணைந்து வழங்கியுள்ள வாக்குறுதிகளில் ஒன்றான மைக்கா ஹோல்டிங்ஸ் பங்குதாரர்களின் பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்பதாகும். இந்த வாக்குறுதியானது இடைத்தேர்தலுக்கு முன்பு நிறைவேற்றப்படாவிட்டால் அனைத்தும் தேர்தலை முன்னிட்டே வைக்கப்படும் வெற்று வாக்குறுதிகளாகிவிடும். தேர்தல் முடிந்த பின்பு, வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததற்கு எந்தவொரு காரணத்தையும் அவர்கள் கூறலாம். ”மைக்கா நிறுவனத்திற்கு இத்தனை கடன்கள் இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியாதுஅல்லது பங்குகளை அதிகப்படியாக நிர்ணயத்திருக்கின்றனர். எங்களால் 1 ரிங்கிட்டிற்கு 25 சென் மட்டுமே வழங்க முடியும், காரணம் பல எதிர்மறை விளம்பரங்களால் மைக்கா நிறுவனம் கடுமையாக பாதிப்பிற்க்குள்ளாகிவிட்டதுஎன காரணங்களை அடுக்கி தங்களுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தப்பித்துக் கொள்ளலாம்.

மலேசிய இந்திய ஏழைகளுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய வாக்குறுதிகள் யாதெனில், மைக்கா பங்குதாரர்கள் ஏப்ரல் 25-ஆம் தேதிக்கு முன்பே போட்டப் பணங்களை மீண்டும் பெற வேண்டும். மஇகா/அம்னோ அப்பணங்களை ஏப்ரல் 25-ஆம் தேதிக்குள் பங்குதாரர்களுக்கு கொடுக்காவிடில், இனி எப்பொழுதும் அப்பணம் அவர்களுக்கு கிடைக்கப்போவதில்லை.

கமலநாதன் தயவு செய்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்

மனித உரிமைகள் கட்சியின் நிலைப்பாடு என்னவெனில், 1984-ஆம் ஆண்டில் ரிம 1 வெள்ளிக்கு விற்கப்பட்ட பங்கின் தற்போதைய (2010) மதிப்பு ரிம 4 வெள்ளியாகும். எனவே, மைக்கா பங்குதாரர்களுக்கு தற்போதைய மதிப்பை அடிப்படையாகக் கொண்டு ஒரு பங்கிற்கு 4 வெள்ளி வீதம் பணம் கொடுக்க வேண்டும். நாட்டில் உள்ள எந்தவொரு பட்டயக் கணக்கரிடமும் இவ்விடயம் குறித்து விசாரித்தால் இதே பதிலைத்தான் அவர்களும் கூறுவார்கள். தற்போது ஒரு பங்கிற்கு ரிம 1 வெள்ளி மட்டுமே கொடுக்கப்படும் என்று மஇகா அறிவித்துள்ளது. அப்படியென்றால் உண்மையான மதிப்பிலிருந்து 25 சதவிகிதம் மட்டுமே பங்குதாரர்களுக்கு வழங்கப்படுமாம். அம்னோ 106 மில்லியனுக்கு வாங்கப்போவதாகக் கூறும் மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தை தற்போதைய மதிப்பை அடிப்படையாகக் கொண்டு 450 மில்லியனுக்கு வாங்குவதே நியாயம்.

இந்தத் தொகையானது பல பில்லியன் மதிப்பிலான நிறுவனங்களை அரசாங்கம் மீட்டெடுத்த தொகையைவிடச் சிறியதுதான். சில நிறுவன்ங்களை உதாரணமாகச் சொல்லலாம். மல்டி பர்பர்ஸ் ஹோல்டிங்ஸ், கொண்சோர்டியும் பெர்காபாலான் பெர்ஹாட், முன்னால் பிரதமர் மகாதீரின் மகன் நிர்வகிக்கும் நீர்க்கப்பல் போக்குவரத்து நிறுவனம், மலேசிய விமான போக்குவரத்து நிறுவனம் (மாஸ்). ரெனோங் பெர்ஹாட், தேசிய கழிவு நிர்வகிப்பு நிறுவனம், கோலாலம்பூரின் இரு பொது போக்குவரத்துச் சேவை நிறுவனங்கள் ஆகியன இப்பட்டியலில் அடங்கும். சிங்கபூரின்மோகன் ஸ்டான்லிநிறுவனத்தில் தென்கிழக்காசிய பொருளாதார ஆய்வியலாளராக பணியாற்றும் டேனியல் லியன் கூறுகையில், மலேசிய நாடு கடந்த 1980-ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே சுமார் ரிம 100 பில்லியன் வெள்ளியை இழந்திருக்கிறது என்கிறார். இந்தத் தொகையோடு ஒப்பிடுகையில் 450 மில்லியன் பெரிய தொகை என்று கூறிவிடமுடியாது.

சைட் இப்ராஹிமா அல்லது கமலநாதனா?வாக்குறுதிகளை நிறைவேற்றும் வேட்பாளரையே தேர்ந்தெடுங்கள்

கொடுத்த வாக்குறுதிகளை ஏப்ரல் 24-ஆம் தேதிக்குள் நிறைவேற்றாத எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்காதீர்கள்.
வாக்குத் தேர்வினை சுலபமாக வைத்துக் கொள்ளுங்கள்

நரகன்.


இந்திய சமுதாயம் எதிர்ப்பார்ப்பது என்ன? – உதயகுமார், ஆறுமுகம் விளக்கம்

ஏப்ரல் 12, 2010

இண்ட்ராஃப் குரல் – பிப்ரவரி மாத மின்னிதழ்

மார்ச் 2, 2010

HINDRAF/HRP Bulletin (Tamil)


பாகான் பினாங்கு இந்திய வாக்காளர்கள் என்ன உறுதி எடுக்க வேண்டும்?

செப்ரெம்பர் 30, 2009
இண்ட்ராஃப் மக்கள் சக்தி

பாகான் பினாங்கு இந்திய வாக்காளர்கள் என்ன உறுதி எடுக்க வேண்டும்?

வாக்களிப்பு தவிர்ப்பு பிரச்சாரம்

மக்கள் சக்தியைக் காட்டுவோம்!

பாகான் பினாங்கில் தேசிய முன்னணி அல்லது பாஸ் (மக்கள் கூட்டணி) ஆகியவற்றிற்கு வாக்களிக்காதீர்கள்!

இதுவரையில் இரு அரசியல் கூட்டணிகளுமே இந்தியர்களுக்கு எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை.

இந்தியர்கள், தாங்கள் வேண்டியதை, 12-ஆம் பொதுத் தேர்தலுக்குப் பிறகும் பெறவில்லை. இதுவே 12-ஆம் பொதுத் தேர்தலுக்குப் பிந்திய நமது கருப்பொருள்.

இந்தியர்களை ஒதுக்கி வைத்தல், மற்றும் ஓரங்கட்டுதல் ஆகிய நடவடிக்கைகள், மக்கள் கூட்டணி ஆளும் 4 மாநிலங்களில் மேலும் துரிதமாகத் தொடர்கிறது. அம்னோ அரசு, தனது இனவாதக் கொள்கையை தொடர்ந்து ஆக்கிரமித்து வருகிறது. இந்திய சமூகத்தின் பல்வேறு மனக்குமுறல்கள், மனவேதனைகள், ஒரு தீர்வின்றி அல்லலுறுகின்றன.

பினாங்கில் பொய் பேசும் DAP மாநில முதலமைச்சர், சில DAP இந்திய மண்டோர்கள், நிறைவேற்றப்படாத, சிதைக்கப்பட்ட வாக்குறுதிகள் ஆகியனதான் உள்ள. இந்தியர்களின் மிக முக்கியமான ஒரு பிரச்சனையான புவா பாலா கிராம விசயத்தில், தன் கையை கழுவி, நழுவி விட்டது DAP.

PKR-இல், கோழைகள் தான் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், சட்டமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளனர். இந்தியர்களின் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுக்க இவர்கள் எங்கும் காணப்படுவதில்லை.


பேராக் மாநிலத்திலும் சிலாங்கூர் மாநிலத்திலும் அதிகமான நிலங்கள் சீனர்களுக்காக மக்கள் கூட்டணி அரசாங்கம் வழங்கி உள்ளது. ஆனால், இந்தியர்களுக்கு அப்படிப்பட்ட எந்தவொரு நிலமும் வழங்கப்படவில்லை. மக்கள் கூட்டணி அரசாளும் மாநிலங்களில் ஆலயங்கள் தொடர்ந்து உடைக்கப்பட்டு வருகின்றன. இந்தியர்களின் சமய சின்னங்களுக்கு கேடு செய்வது, இந்தியர்களை இழிவுபடுத்துவது, பரவாயில்லை என்று கூறுகிறார் உள்த்துறை அமைச்சரான அம்னோவின் இசாமுடின். இந்தியர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க கூட்டரசு அரசாங்கம் நான்கு மாநிலங்களில் உள்ள மக்கள் கூட்டணியை சாக்காக வைத்துக் கொண்டு, இந்தியர்களின் பிரச்சனைகளுக்கு ஒன்றுமே செய்யாமல், தனது மாறாத இனவாத கொள்கைகளைக் கொண்டு இந்தியர்களை மேலும் மேலும் ஒதுக்கி வைக்கின்றது.

இவை எல்லாம் ஏன் மென்மேலும் தொடர்கின்றன? காரணம், PKR, DAP, MIC, UMNO ஆகிய கட்சிகள் நம் வாக்குகளை மட்டும்தான் தேடுகின்றன. அவ்வளவுதான்! பதிலுக்கு மிகவும் அற்பமான, சில்லறையான பிச்சை போடுகிறார்கள். பள்ளிகளுக்கு மிகவும் அற்பமான, குறைந்த, பண உதவி, ஓரிரண்டு நிலங்கள் அல்லது சிறு சிறு அன்பளிப்புகள் வழங்கப்படுகின்றன, அவ்வளவுதான்! அவர்கள், நமக்கு ஏதாவது செய்து கொண்டே இருப்பது போல தோன்ற வேண்டும், அல்லவா? அதற்காகத் தான் இந்த சொற்பமான உதவிகள் எல்லாம்! இவர்களைப் பொறுத்தவரையில், நாம் அதைவிட முக்கியமானவர்கள் அல்ல. எனவே, நம் சமூகத்தின் நலனில் சில்லறைத் தனமும் அற்ப குணமும் கொண்டிருக்கின்றனர். ஆம்! அவர்களைப் பொறுத்தவரையில் நாம் மிகவும் அற்பமானவர்கள், அதைவிட முக்கியமானவர்கள் அல்ல. எனவே, நம்மை அதிகம் பொருட்படுத்த வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை!

இந்நாட்டு இந்தியர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண, ஒரு முழுமையான அணுகுமுறை தேவை. இதுவே நமது கோரிக்கை. மிகவும் முக்கியமான அடிப்படைத் தேவைகளை முதலில் பார்ப்போம். பிறகு மற்ற பிரச்சனைகளைப் பற்றி சிந்திக்கலாம், கவனிக்கலாம், திட்டமிடலாம். இந்தியர்களிடையே நிலவும் குற்றச் செயல்கள், தற்கொலைகள், மதுபான பிரச்சனைகள், போதைபொருள் பாதிப்புகள், வேலை இல்லாத் திண்டாட்டம், வணிகர்களுக்கான கட்டுப்படுத்தப்பட்ட குறைந்த வாய்ப்புகள், அரசாங்க நிறுவனங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் கல்வி மற்றும் பயிற்சி மேற்கொள்ளும் வாய்ப்புகள் மிகவும் குறைந்து வருவது, ஆகியன நம்முடைய பெரும் பிரச்சனைகள். தேசிய முன்னணி மற்றும் மக்கள் கூட்டணி ஆகிய இரு அரசாங்கங்களும் நம்மை ஒரு பொருட்டாகவும் மதிக்கவில்லை. எனவேதான், நாம் கூறும் நமது பிரச்சனைகளுக்கு ஒரு முழுமையான தீர்வுகாண அவர்கள் சிறிதும் அக்கறை காட்டவில்லை. இண்ட்ராஃப் முன்வைத்த 18 கோரிக்கைகள் மிகவும் தெளிவாக, இந்நாட்டு இந்தியர்களுக்கு என்ன தேவை என்பதனை எடுத்துரைக்கின்றன. நாம் இவ்வளவு கூறி இருந்தும் கூட இவ்விரு அரசாங்கங்களும் நம் பிரச்சனைகள் தொடர்பாக முழுமையான தீர்வை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கைகளேதும் எடுக்கவில்லை.

நமக்கு இன்று இருக்கும் ஒரே வழி, அவர்களை எங்கு தீண்டினால் வலிக்குமோ, அங்கு தீண்டுவதுதான்.

நாம் நமது வாக்குகளை மிகவும் அறிவுப்பூர்வமாக செலுத்தி அவர்களுக்கு நம் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வேண்டும். அவர்களது அரசியல் கணிப்பில் நம்மையும் முக்கியமான தரப்பினராகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த கணிப்பின் ஒரு சோதனைக் களமாக, நமக்கு மாற்றங்கள் கொண்டு வரும் வகையில், பாகான் பினாங்கில் நமது வாக்குகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். பாகான் பினாங்கு தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமைந்திருப்பினும், அது நமக்கு எந்தவொரு முக்கிய மாற்றங்களையும் கொண்டு வராது.

நெகிரி செம்பிலானில் மேலும் ஒரு சட்டமன்ற இடம் குறைந்தாலோ, கூடினாலோ, தேசிய முன்னணியிலும் மக்கள் கூட்டணியிலும் ஏதும் பெரிதாக மாறிவிடாது. ஆனால், நாம் நமது வாக்குகளைத் தொட்டு எடுக்கும் முடிவு, நம் வாக்குகளின் மேல் ஆர்வம் உள்ளவர்களிடம் நமது வாக்குகளுக்கு மதிப்பு உண்டு என ஆழமான ஒரு கருத்தை சமர்ப்பிக்கலாம்.

இங்கு 14,192 வாக்காளர்கள் உள்ளனர். 80% வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம். அப்படியாயின், 11,345 வாக்காளர்கள் தேர்தல் அன்று வருவர். இவர்களில் 66% அல்லது 7,500 மலாய் வாக்காளர்கள், 19.9% அல்லது 2270 இந்திய வாக்காளர்கள், 10.5% அல்லது 1135 சீன வாக்காளர்கள் இருப்பார்கள். கடந்த பொதுத்தேர்தலில் அம்னோ வேட்பாளர் 6430 வாக்குகள் பெற்று, 2,333 பெரும்பான்மை வாக்குகளில் வெற்றிப் பெற்றார். அதே தேர்தலில், பாஸ் வேட்பாளர் 4,097 அல்லது 39% வாக்குகளைப் பெற்றார். ஆனால் அது நடந்தது, இந்தியர்களும் சீனர்களும் பாரிசான் அரசாங்கத்தை அடியோடு வெறுத்த காலக்கட்டத்தில். இந்த உண்மையானது, வருகின்ற இடைத் தேர்தலில் மக்கள் கூட்டணி தேர்தலில் தோல்வியுறும் அபாயத்தைப் பிரதிபலிக்கின்றது.

பாகான் பினாங்கில், அனைத்து இந்தியர்களும் வாக்களிப்பதை தவிர்ப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

தேசிய முன்னணி மற்றும் மக்கள் கூட்டணி ஆகிய இரண்டும் நமக்கு நல்ல கட்சியாக அமையவில்லை. இதன் விளைவாக, மக்கள் கூட்டணி இந்த இடைத் தேர்தலில் தோல்வியுறட்டும்! நம் வாக்குகளின் மூலம், நாம் ஒரு மாற்றத்தை கொண்டு வருவோம். மக்கள் கூட்டணி நமது இந்த முக்கியமான கருத்தை தொடர்ந்து கண்டுகொள்ளாமல், ஒதுக்கி வைத்தால், அதற்கான விளைவை அவர்கள் எதிர்கொள்ளட்டும். இந்தியர்களின் வாக்கு முக்கியமானது என்றும், அந்த முக்கியமான வாக்குகளை அவர்கள் பெற வேண்டும் என்ற உணர்வு தோன்றினால், அவர்கள் அதை செயலிலும் கட்சிக் கொள்கைகளிலும் காட்ட வேண்டும். வெற்றுப் பேச்சும், வெற்று வாக்குறுதிகளும் நமக்குத் தேவையில்லை.

அம்னோவை காட்டிலும், மக்கள் கூட்டணியைத்தான் நாம் விரும்புகிறோம். ஆனால், மக்கள் கூட்டணி செயலில் இறங்கி தங்களின் ஆட்சிக் கொள்கைகளின்வழி அவற்றை நிரூபித்தாலே ஒழிய, நாம் அவர்களுக்கு நமது ஆதரவை தர மாட்டோம்.

நாம் அவர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்இரு வழிகளிலுமே!

நாம் இந்த கருத்தை உறுதியாக வெளிப்படுத்த வேண்டும். நமது கருத்தை வெளிப்படுத்த இதுவே ஒரே வழி, இதுவே நமக்கு கிடைத்த வாய்ப்பு, சந்தர்ப்பம்!

ஆக்கம் :

சுப்பிரமணிய பாரதி

போராட்டம் தொடரும்


தமிழர்களின் பாரம்பரிய குடியிருப்பை சட்டவிரோதமாக கைப்பற்றி விற்ற அரசாங்கம்!

ஜூன் 30, 2009
சில காலமாகவே, புவா பாலா கிராம விவகாரம் தொடர்பாக பதிவிடலாம் என்ற எண்ணம் இருந்தது. இருப்பினும் முழுத் தகவல்களையும் சேகரிப்பதற்குள் நாட்களாகிவிட்டன. முதலாளித்துவமும் அதிகார வர்க்கமும் பினாங்கில் இந்தியர்களுக்கென இருந்துவந்த ஒரே பாரம்பரிய கிராம நிலத்தை சட்டவிரோதமாக அபகரித்த விதத்தைக் கேட்டால் நமக்கே கோபம் வரும். அம்னோ அரசாங்கத்தின் ஆட்சியில் கம்போங் புவா பாலா கிராமம் சட்டவிரோதமாக மூன்றாம் தரப்பினருக்கு கைமாற்றப்பட்டு இறுதியில் நில மேம்பாட்டாளர்களின் கையில் சிக்குண்டு இன்று அம்மக்களின் வாழ்வும், அவர்கள் காலங்காலமாக வளர்த்துவந்த ஆடு, மாடுகளின் கதியும் கேள்விக்குறியாக தொக்கி நிற்கின்றது.

வருகின்ற 2-ஆம் திகதி சூலை மாதம் வீடுகள் உடைப்படுவதற்கான காலக்கெடு. இனி அங்குள்ள மக்களும், இம்முறைக்கேட்டை தினமும் நாளிதழ், இணையங்களின்வழி படித்து, கண்டு அறிந்துகொள்பவர்களும் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள்?

இனி இதுபோன்று நடவாது நம்மையும் நம் நிலங்களையும் பாதுகாத்துக் கொள்ள நாம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறோம்?

இதற்கிடையில் இன்று காலை 10 மணியளவில் பினாங்கு கொம்தாருக்கு இண்ட்ராஃபினரும் வேதமூர்த்தியின் மகள் வைசுணவியும், மற்றும் புவா பாலா குழந்தைகளும் முதியோர்களும் மனு சமர்ப்பிக்க சென்றிருந்தனர். அம்மனுவை பினாங்கு முதல்வரின் அந்தரங்கச் செயலாளர் பெற்றுக் கொண்டுள்ளார். அதுபோக, இன்று மாலை 4 மணியளவில் கொம்தார் கட்டிடத்திற்கு கீழ் இண்ட்ராஃபினருடன் இணைந்து புவா பாலா கிராமவாசிகள் ஒன்று கூடவிருக்கின்றனர். சிலாங்கூர், கெடா, பேராக் ஆகிய மாநிலங்களிலிருந்து ஆதரவாளர்கள் ஒன்றுதிரளவிருக்கின்றனர். பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என இண்ட்ராஃபினர் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றனர்.

புவா பாலா கிராமவாசிகளிடம் பினாங்கு இண்ட்ராஃப் கண்டெடுத்த நேர்க்காணல் உங்கள் பார்வைக்கு..

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4

போராட்டம் தொடரும்…