பினாங்கில் இண்ட்ராஃபின் உண்மை கண்டறியும் பயணம்

ஓகஸ்ட் 27, 2011

அண்மையில் மனித உரிமை வழக்கறிஞரான திரு.சுரேசு குரோவர் மலேசியாவிற்கு வருகைப் புரிந்து பல இடங்களுக்கு பயணம் செய்து இந்திய மலேசியர்களுக்கெதிரான மனித உரிமை மீறல் சம்பவங்களை நேரடியாக கண்டு தகவல்களை திரட்டிச் சென்றுள்ளார். இவையனைத்தையும் இண்ட்ராஃபின் லண்டன் சிவில் வழக்கிற்கு தக்க ஆதாரங்களாகப் பயன்படுத்தவிருக்கின்றனர் லண்டனில் உள்ள சட்டக் குழுவினர். அத்தகைய பயணத்தின் ஓர் அங்கமாக பினாங்கிற்கும் வருகை தந்திருந்தார் திரு.சுரேசு குரோவர். அப்பயணத்தின் சில நிழற்படங்கள் உங்களின் பார்வைக்காக..

Advertisements

>பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி குறித்த ஆவணப்படம்

ஜனவரி 6, 2011

>

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4

போராட்டம் தொடரும்…


>பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி பெற்றோர் நடவடிக்கைக் குழு – நிகழ்நிலை அறிக்கை

ஓகஸ்ட் 30, 2010

>

கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ஆம் திகதியன்று பினாங்கு மாநில இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியின் செயலகத்தில் பத்து கவான்வாழ் பொதுமக்களுடனான ஒரு கலந்துரையாடல் நிகழ்வு நடந்தேறியது. பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியைப் பொருத்தமட்டில் கடந்த எட்டு ஆண்டுகளாக எதிர்நோக்கிவரும் புதிய கட்டிட நிர்மாணம் குறித்த பிரச்சனையை மையமாக வைத்து அன்றைய நிகழ்வில் பல விடயங்கள் அலசி ஆராயப்பட்டன.
சரியாக மாலை 6.30 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்வில் பத்து கவானைச் சார்ந்த இண்ட்ராஃப் அதரவாளரும் மனித உரிமைக் கட்சியின் உறுப்பினருமான திரு.அண்ணாதுரை சிறு உரையாற்றினார். தற்போது பத்து கவான் மக்கள் எதிர்நோக்கிவரும் அடிப்படை பிரச்சனைகளைத் தொட்டு அவர் உணர்ச்சிப்பொங்க கருத்துரைத்தார். அவரையடுத்து பினாங்கு மாநில இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு.கலைசெல்வம் வரவேற்புரை ஆற்றி அனைவரையும் வரவேற்றார். இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியின் தோற்றம், வளர்ச்சி மற்றும் அதன் இலக்கு குறித்து ஒளியிழையின்வழி காண்பித்து வந்திருந்த பொதுமக்களுக்கு அவர் விளக்கங்களையும் கொடுத்தார்.
அடுத்த அங்கமாக, நிகழ்வின் கருப்பொருளான ‘பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடம் எங்கே?’ எனும் தலைப்பில் திரு.கலைச்செல்வம் அப்பள்ளியின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுடனான கலந்துரையாடலைத் தொடக்கி வைத்து வழிநடத்திச் சென்றார். மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளின் கடந்தகால மற்றும் தற்போதைய நிலை குறித்து ஒளியிழையின்வழி சிறப்பாக எடுத்துக் காட்டி உரையாற்றினார்.
பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் புதிய கட்டிடம் எழுவதற்கான அறிகுறிகள் இதுவரையில் தென்படவில்லை என பல பெற்றோர்கள் தங்களின் ஆதங்களை வெளிப்படுத்தினர். அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கு அறியப்படுத்தாமலேயே பள்ளியின் நிருவாகமும் ம.இ.காவினரும் சொந்தமாக கட்டிடக் குழுவினைத் தோற்றுவித்துக் கொண்டு இந்நாள்வரை மக்களை ஏமாற்றி வருவதாக அச்சங்கத்தின் முன்னால் துணைத் தலைவர் குற்றஞ்சாட்டினார். புதிய கட்டிட நிர்மாணிப்பிற்காக மத்திய அரசாங்கம் வழங்கிய இரண்டு லட்ச வெள்ளியை கட்டிடக் குழு என்ன செய்தார்கள் என ஒரு கேள்வியையும் எழுப்பினார். ’இனியும் நாங்கள் ஏமாறப்போவதில்லை’ என அனைவரும் ஒரு குரலாக முடிவெடுத்தனர்.
சுமார் 40 நிமிடங்கள் பொதுமக்கள் தங்களின் ஆதங்களை வெளிப்படுத்திய பின், இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியின் தேசிய மதியாலோசகரான திரு.நா.கணேசன் கலந்துரையாடலின் அடுத்த கட்ட அங்கத்தை தலைமையேற்று சிறப்பாக வழிநடத்தினார். பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சார்ந்த பெற்றோர்களின் உரிமைகளைத் தொட்டு அவர் விளக்கமளித்தார். அவ்வுரிமைகளை அடிப்படையாகக் கொண்டு பெற்றோர்கள் எவ்வாறு அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு உதவ முடியும் எனவும் எடுத்துக் கூறினார். உட்பூசல்களில் கவனத்தை சிதறடிக்காது நாம் திட்டமிட்டு வேலைகளைச் செய்து அடுத்தாண்டு சூன் மாத்த்திற்குள் அப்பள்ளியின் கட்டிட நிர்மாணிப்பு பணி தொடங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும் தற்போது கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் 2 ஏக்கர் நிலத்தின் நிலப்பட்டாவையும் மற்ற முக்கியமான கோப்புகளையும் சம்பந்தப்பட்ட தரப்பினர் பெற்றோர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் எனவும், 2 ஏக்கர் நிலத்தை 5 ஏக்கராக மாநில அரசாங்கத்திடமிருந்து கேட்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

முதற்கட்டமாக, பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர்கள் ’நடவடிக்கை குழு’ ஒன்றினை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதன்படியே 10 பேர் கொண்ட பெற்றோர் நடவடிக்கை குழு ஒன்று திரு.அண்ணாதுரையின் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது. அதோடு பத்து கவான்வாழ் பொதுமக்களாகிய 6 பேர் அக்குழுவிற்கு துணையாக இருந்து செயல்பட இணைக்கப்பட்டனர். இந்த 16 பேர் கொண்ட நடவடிக்கை குழு இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியின் ஆதரவையும் உதவியையும் முழுமையாக ஏற்பதாகவும், வற்றாத ஆதரவினை தொடர்ந்து இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சிக்கு வழங்கப்போவதாகவும் அவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நடவடிக்கைக் குழு கையொப்பமிட்ட அவ்வுறுதிமொழிக் கடிதத்தை பெற்றோர்களிடமிருந்து திரு.நா.கணேசன் பெற்றுக் கொண்டார்.
இந்த ‘நடவடிக்கை குழு’ எதிர்வரும் ஆகஸ்ட் 26-ஆம் திகதியன்று பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்குச் சென்று பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் கட்டிடக் குழுவோடு ஓர் அவசர சந்திப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு தலைமையாசிரியரிடம் கோரிக்கை வைக்கப்போவதாக முடிவெடுக்கப்பட்டது.
இறுதியாக இரவு உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டு சுமார் 9 மணியளவில் இக்கலந்துரையாடல் நிகழ்வு இனிதே முடிவடைந்தது.

இதனிடையே திட்டமிட்டப்படி கடந்த ஆகஸ்ட் 26-ஆம் நாளன்று காலை 8.45 மணியளவில் ‘பெற்றோர் நடவடிக்கைக் குழு’ இண்ட்ராஃபைச் சார்ந்த திரு.அண்ணாதுரையின் தலைமையில் பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.காளிதாஸ் அவர்களைச் சந்தித்து ஒரு விண்ணப்பக் கடிதத்தைச் சமர்ப்பித்தனர். இக்கடிதம் தலைமையாசிரியரிடம் சமர்பிக்கப்படும்போது பெற்றோர் ஆசிரியர் சங்க துணைத் தலைவர் திரு.கணேசன் அவர்களும் உடனிருந்தார்.

அக்கடிதத்தில் நடவடிக்கைக் குழுவிற்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் கட்டிடக் குழுவிற்கும் மத்தியில் ஓர் அவசர சந்திப்புக் கூட்டத்தினை இரண்டு வாரத்திற்குள் ஏற்பாடு செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அச்சந்திப்புக் கூட்டம் நடைப்பெறுவதற்கு ஆவண செய்வதாக அப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.காளிதாஸ் சம்மதம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் 3-ஆம் நாளன்று திட்டமிட்டப்படி, திரு.அண்ணாதுரை தலைமையில் ‘நடவடிக்கைக் குழுவினர்’ மீண்டும் தலைமையாசிரியரைச் சந்தித்து தற்போதைய நிலவரங்களைப் பெற்றுக் கொள்ள செல்வர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

போராட்டம் தொடரும்…


>காணொளி : பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடம் எங்கே?

ஓகஸ்ட் 23, 2010

>

நேற்று (ஆகசுட்டு 22, 2010) ஞாயிற்றுக்கிழமையன்று பினாங்கு இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியின் செயலகத்தில் பத்து கவான்வாழ் பொதுமக்கள் மற்றும் பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பயின்றுவரும் பிள்ளைகளின் பெற்றோர்களுடனான ஒரு கலந்துரையாடல் நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
கடந்த 8 ஆண்டுகளாக நீடித்துவரும் பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி நிலம் மற்றும் புதிய கட்டிடம் குறித்த பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக இண்ட்ராஃப் இயக்கம் பொதுமக்களுடன் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டது. அக்கலந்துரையாடலின் இறுதியில் சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டன. அந்நிகழ்வின் ஒரு பகுதியை காணொளி வடிவில் இங்கு இணைத்துள்ளேன். அடுத்தாண்டு சூன் மாதத்திற்குள் அப்பள்ளியின் புதிய கட்டிட நிர்மாணப்பணி தொடங்க வேண்டுமென இண்ட்ராஃப் எதிர்ப்பார்க்கிறது.

போராட்டம் தொடரும்…


ஓரங்கட்டப்பட்ட ஏழை இந்தியர்கள் – ஓர் அடிப்படைப் பார்வை (தொடர்ச்சி)

ஏப்ரல் 20, 2010

முதல் பாகம் : ஓரங்கட்டப்பட்ட ஏழை இந்தியர்கள் – ஓர் அடிப்படைப் பார்வை

பல்வகை திறன்களைக் கைவரப் பெறாத நிலையில், குறைந்த சேமிப்பை கொண்டு தோட்டப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்த தோட்டப்புற சமூகத்தினர், நகர்ப்புறங்களில் ஆங்காங்கே பெருமளவில் புறம்போக்கு நிலங்களிலுள்ள குடிசைகளிலும் மலிந்த விலை வீடுகளிலும் வாழத் தொடங்கினர். இச்சமூகத்தினரில் பெரும்பான்மையினர் கீழ் நிலையிலான தொழில்களில் ஈடுபட்டுவந்ததோடு மட்டுமல்லாது கிடைக்கும் குறைந்த வருமானத்திற்குக்கூட அந்நியத் தொழிலாளர்களுடன் போட்டிப் போடும் சூழ்நிலை ஏற்பட்டது. இவர்களில் இளையோர்கள் பலர் புதிய நகர் வாழ்க்கைச் சூழலிலிருந்து அந்நியப்பட்டு நிற்பதாக கருதி வந்தனர். குறைந்த கல்வி மற்றும் சரியான தொழில் வாய்ப்புகள் அற்ற நிலையில் அவர்களில் சிலர் சமூகச் சீர்கேட்டு நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர்.

ஆகமொத்தத்தில், மலேசியர்களின் சராசரி வருமான ஈட்டுத் தொகையிலிருந்து 30 சதவிகிதம் மட்டுமே வருமானமாக ஈட்டும் ஏழை இந்தியர்களை இரு வகுப்பாகப் பிரிக்கலாம். முதல் வகுப்பைச் சார்ந்தவர்கள், தோட்டப்புறங்களில் வசித்துக்கொண்டும் அங்கேயே தொழில் செய்துகொண்டும் இருப்பவர்களாவர். இந்த வகுப்பினர் எந்தவொரு அரசாங்கத்தின் புறநகர் மேம்பாட்டுத் திட்டங்களிலும் இணைக்கப்படாதவர்களாவர். இரண்டாம் வகுப்பைச் சார்ந்தவர்கள், ஆரம்ப வாழ்க்கையை ரப்பர் தோட்டங்களில் தொடங்கி தற்போது நகர்ப்புறங்களில் அல்லது நகர்ப்புற அருகில் வசித்து தொழில் புரிந்து வருபவர்களாவர். இக்கட்டான சூழ்நிலையிலுள்ள ஏழை நகர்ப்புற இந்தியர்களும் மற்றும் பிற இன நகர்ப்புற ஏழைகளுமே ஒன்பதாவது மலேசிய திட்டத்தின்கீழ் உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டிய வகுப்பினர் ஆவர்.

இவ்விரு வகுப்பினரும் எதிர்நோக்கிவரும் இக்கட்டான சமூகப் பொருளாதார பிரச்சனைகளை அரசாங்கம் நன்கு அறிந்து வைத்திருந்தபோதிலும், இச்சமூகத்தினரை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் திட்டங்களையோ அல்லது மானிய ஒதுக்கீடுகளையோ போதுமானதாக அரசாங்கம் அமைத்துக் கொடுக்கவில்லை. இச்சமூகத்தின் எதிர்ப்பார்ப்புகள் ஒன்பதாவது மலேசியத் திட்டத்தில் நிறைவேற்றப்படவேண்டியது அவசியமாகிறது. புறநகர் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறைகளில் சிறப்புக் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுப் பணித்திட்டங்கள் ஆகியன இவர்களை இலக்காகக் கொண்டு ஏற்படுத்தப்பட வேண்டும். இச்சமூகத்தினர் பலடனடையும் வகையில் புதிய திட்டங்களானது செயல்வடிவம் கொள்வதை உறுதிச் செய்தலும் திட்ட வளர்ச்சி குறித்த அளவீடும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதே சமயத்தில் முறையான செயலாக்கம் மற்றும் அமுலாக்கக் கண்காணிப்பு திட்ட வளர்ச்சிக்கு உதவி புரிகின்றன.
மலேசிய இந்திய சிறுபான்மையினரை தேசியப் பெருளாதார வெள்ளோட்டத்தில் பங்கெடுக்கவைக்கும் முக்கியத் திட்டங்களை பொதுக் கொள்கைகள் ஆய்வு மையம் முன்வைக்கின்றது. நாட்டின் முக்கியத் துறைகளில் இவர்களை ஈடுபடுத்துவதற்கு வெளிப்படையான மற்றும் பொறுப்பான நிதி ஒதுக்கீடுகள் கொண்டுவரப்பட வேண்டும். அதோடு, அமைச்சின் நேரடிப் பார்வையில் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் திட்டங்கள் பாதிக்கப்பட்ட இந்திய சமூகத்தைச் சென்றடைவதை உறுதிச் செய்ய வேண்டும். தோட்டப்புறங்கள் அருகிலுள்ள கையிருப்பு நிலங்களை தோட்டப்புறத் தொழிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு சிறப்பாக ஒதுக்கி அவர்கள் விவசாயம் அல்லது கால்நடை வளர்ப்புத் தொழிலை மேற்கொள்வதற்கு ஆவண செய்ய வேண்டும். அதோடு, தோட்டப்புற சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு கூட்டு முறையிலான விவசாயத் திட்டங்கள், கால்நடை வளர்ப்புத் திட்டங்கள், உணவு உற்பத்தி, அழகுப் பூக்கள் நடவு மற்றும் விற்பனை போன்ற திட்டங்களுக்காக அரசாங்கம் சிறப்பு நிலத்திட்டங்களை கொண்டுவர வேண்டும்.

மேலும் இளையோர்கள் எதிர்நோக்கும் சமூகச் சீர்கேடுகளை குறைப்பதற்கு ஒன்பதவாது மலேசியத் திட்டத்தின்கீழ் சிறார் பராமரிப்பு மையங்களை எழுப்புவதற்கும், குறைந்த வருமானம் கொண்டவர்கள் வசிக்கும் இடங்களில் குறிப்பாக மலிவுவிலை மாடிக் குடியிருப்பு இடங்களில் பாலர்ப் பள்ளிகளை எழுப்புவதற்கும் அரசாங்கம் தாராள நிதி ஒதுக்கீட்டினைச் செய்ய வேண்டும். குறைந்த வருமானமுடைய குடும்பத்திலுள்ள இந்திய மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு முழு மானியம் பெறாத அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளையும் முழு மானியம் பெறும் பள்ளிகளாக அரசாங்கம் மாற்ற வேண்டும். இவற்றைத் தவிர்த்து, நகர்ப்புறத்தை மையமாகக் கொண்டு இயங்கும் அரசு சாரா இயக்கங்களைப் பயன்படுத்தி சிறப்புப் பயிற்சித் திட்டங்கள், வாழ்க்கைக் கல்விகளான தொழிற்திறன் மற்றும் வியாபாரத் திறன் குறித்த பயிற்சிகளை தோட்டப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு குடிபெயர்ந்த இளையோர்களுகு வழங்க வேண்டும்.

ஏழை இந்திய சிறுபான்மையினரின் முன்னேற்றத்திற்கு கல்வி முக்கியப் பங்காற்றுவதால், தரமான ஆரம்பக் கல்வி, இடைநிலைக் கல்வி மற்றும் மேற்கல்விக்கான வாய்ப்புகள் இவர்களுக்கு அரசாங்கம் வழங்க வேண்டும். கல்வியில் சிறந்து விளங்கும் இந்திய இளையோர்களுக்கு கல்வி மேற்கொள்ள இடங்கள் மற்றும் சிறப்பான வாய்ப்புகள் கிடைத்திட அரசாங்கம் முறையான நிதி ஒதுகீடுகள் செய்ய வேண்டும். இதன்வழி இவர்கள் நாட்டின் மனிதவள மேம்பாட்டிற்கு சரிசமமான பங்கை ஆற்றமுடியும். இறுதியாக தொழில் முனைவர் மேம்பாட்டிற்கென சிறப்பு நிதி ஒதுக்கீடு மிக முக்கியமாகும். ஒதுக்கப்படும் இந்நிதியின்வழி சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவர்கள் சுலபமாக ஊக்குவிப்புக் கடன் பெற்று வியாபாரம் தொடங்கி சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிக்கோல வாய்ப்பு உள்ளது. அதே சமயம், நாட்டின் மொத்த பொருளாதார சொத்து மதிப்பில் இந்திய சமுதாயத்தின் பங்கு விழுக்காடு 3 சதவிகிதத்தை எட்டுவதற்கு இத்திட்டங்கள் உதவி புரியும்.


ஓரங்கட்டப்பட்ட ஏழை இந்தியர்கள் – ஓர் அடிப்படைப் பார்வை

ஏப்ரல் 20, 2010

மூலம் : சிறுபான்மை இனத்தவருக்கான வெற்றிகரமான குறியிலக்கை உறுதிச் செய்தல் : குறைந்த வருமானம் பெறும் மலேசிய இந்தியர்கள், ஒரு பார்வை. (பொதுக் கொள்கைகள் ஆய்வு மையம்)

1970-ஆம் ஆண்டுகள் தொடங்கி செயல்முறைப்படுத்தப்பட்டுள்ள நாட்டின் பெருந்திட்டங்களின் வரைவுகளை ஆய்வு செய்யும்பொழுது, குடிப்பெயர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ள ஏழை கிராமப்புற இந்தியர்களின் வாழ்வாதாரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதை பலகாலமாகவே அரசாங்கம் நன்கு அறிந்து வைத்திருப்பதாகக் காட்டுகிறது. இந்நிலைமை குறித்த விழிப்புணர்வு இருப்பினும், நாளுக்கு நாள் பெருகிவரும் இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வாக குறைந்த அளவிலான சில திட்டங்களே அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளன. அதே சமயம், குறைந்த வருமானம் பெரும் இந்திய சமுதாயத்தினரின் ஏற்றத்திற்கு மானியத்திலிருந்து ஒதுக்கப்பட்ட நிதிகளும் அவை சென்றடைந்த வழிகளும் நிலைமையை சரி செய்வதில் தோல்வியடைந்துள்ளதைக் காட்டுகிறது.

பெரும்பான்மை இந்தியர்கள் சமூகபொருளாதார ரீதியில் எதிர்நோக்கிவரும் பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணம் தோட்டப்புறங்களில் நிலவிய பொருளாதாரச் சூழ்நிலைதான். சில பரம்பரைகளாகவே வேலை வாய்ப்பிற்கும், குடியிருப்பு வசதிக்கும் இந்திய வம்சாவளியினர் தோட்டப்புற ஆலைகளை நம்பியிருந்த சூழ்நிலை இருந்து வந்தது. இந்த தோட்டப்புற தொழிலாளர்கள் குறைந்த வருமானம் பெருபவர்களாகவும், அடிப்படை வசதிகள் குறைந்த குடியிருப்புகளில் வசிப்பவர்களாகவும், முறையான மருத்துவ மற்றும் சுகாதார வசதிகள் அற்றவர்களாகவும் அதே சமயம், அவர்களின் பிள்ளைகள் குறைந்த அடிப்படை வசதிகள் கொண்ட தமிழ்ப் பள்ளிகளில் தங்களின் ஆரம்பக் கல்வியைப் பெறும் சூழ்நிலையும் இருந்து வந்தது. தோட்டப்புறங்களும் தொழிலாளர் குடியிருப்புப் பகுதிகளும் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமானவை என அரசாங்கத்தால் முத்திரைக் குத்தப்பட்டதன் விளைவாக, 70-ஆம் மற்றும் 80-ஆம் ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட அரசாங்கத்தின் புறநகர் மேம்பாட்டுத் திட்டங்கள் தோட்டப்புற மக்களைச் சென்றடையவில்லை. இருப்பினும், தோட்டத் தொழிலாளர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் என அரசாங்கம் வகைப்படுத்தியிருந்ததால், தோட்டப்புற குடியிருப்பு வசதிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு சிறப்புத் திட்டங்களை அமுல்படுத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டு மிகக் குறைந்த அளவிலேயே திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.

1980-ஆம் ஆண்டு தொடங்கி நாட்டின் பொருளாதாரம் அதிவேகத்தில் முன்னேற்றத்தைக் கண்டுவந்த வேளையில், தோட்டப்புற இந்திய சமூகம் நாட்டின் பொருளாதார வெள்ளோட்டத்திலிருந்து பின்தள்ளப்பட்டும் அனைத்துவிதமான மேம்பாட்டுத் திட்டங்களிலிருந்து ஒதுக்கப்பட்டும் பாதிப்பிற்குள்ளாயினர். கடந்த 20 ஆண்டுகளில் புதிய நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் தனியார் நிறுவனங்களின் பயன்பாட்டிற்கும் தோட்டப்புற நிலங்கள் துண்டாடப்பட்ட சமயங்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை இந்தியர்கள் குடிப்பெயர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தோட்டப்புறங்களிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட இவர்கள் தங்களின் வருமானம் ஈட்டும் தொழிலை மட்டும் இழக்கவில்லை, மாறாக, மேலும் முக்கியமாக குடியிருப்பு, வாழ்ந்தச் சூழல், அடிப்படைச் சலுகைகள், சமூககலாச்சார தொடர்புடைய வசதிகள் மற்றும் காலங்காலமாக தோட்டத் தொழிலாளர் சமூகம் கட்டியெழுப்பிய சமூக வலுவாக்க அரண் போன்றவற்றை இழக்க நேரிட்டுள்ளது.

அதோடு மட்டுமல்லாது, தோட்டத் தொழிலாளர்கள் தங்களின் குடும்ப வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக தோட்ட நிறுவனம் வழங்கிய சிறு விவசாய நிலங்கள், கால்நடை வளர்ப்புக்கு வழங்கிய நிலங்கள் போன்றவற்றையும் இழந்துள்ளனர். தோட்டப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு குடியமர்வு செய்யப்படும் தோட்டத் தொழிலாளர்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்நோக்குவார்கள் என்பது முன்பே அறியப்பட்ட விடயமாகும். பெருமளவிலான கட்டாயக் குடியமர்விற்கு ஆளான தோட்டத் தொழிலாளர்கள் உளவியல் ரீதியில் பல பிரச்சனைகளையும் எதிர்நோக்கிய வேளையில், இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு எந்தவொரு திறன் பயிற்சிகளையும் வழங்கியோ அல்லது மேம்படுத்தப்பட்ட குடியிருப்புச் சூழலில் இவர்களை மறுகுடியமர்வு செய்ததோ கிடையாது.

தொடரும்


இந்திய சமுதாயம் எதிர்ப்பார்ப்பது என்ன? – உதயகுமார், ஆறுமுகம் விளக்கம்

ஏப்ரல் 12, 2010